த்ரில்லர் படங்களைப் பார்ப்பதில் இருக்கும் பெருஞ்சிக்கல்களில் ஒன்று, ஆரம்பத்தில் இருக்கும் பரபரப்பு இறுதி வரை நீடிக்காமல் தடுமாறுவது. தமிழின் ஆகச்சிறந்த த்ரில்லர் படங்கள் கூட இந்த சாபத்திற்கு ஆளாகியிருக்கின்றன.
விதிவிலக்காக மிகச்சில படைப்புகள் அமைந்திருக்கின்றன. அதே கண்கள் படத்திற்கு முன் தொடங்கி ராட்சசன் வரையிலான அந்த எண்ணிக்கை சொற்பம் தான்.
அந்த வரிசையில் புதிதாக இணைந்திருக்கிறது ‘போர் தொழில்’. அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார்.
இறுதி வரை பரபரப்பு!
அவற்றைச் செய்வது ஒரே நபர்தான் என்பது கொலை நடந்த விதத்தில் இருந்து தெளிவாகிறது.
ஆனால், கொலையான பெண்களுக்கு இடையே சிறு தொடர்பு கூட புலப்படாததால் தலையைப் பிய்த்துக் கொள்கிறது காவல் துறை.
சிபிசிஐடியைச் சேர்ந்த லோகநாதன் (சரத்குமார்) தலைமையிலான குழுவுக்கு அவ்வழக்கு மாற்றப்படுகிறது.
லோகநாதன் ரொம்பவே முரட்டுத்தனம் நிறைந்த ஒரு காவல் அதிகாரி. எதற்கெடுத்தாலும் எரிந்து விழும் குணம் கொண்டவர். யாராலும் நெருங்கிப் பழக முடியாதவர்.
ரொம்பவே பயந்த சுபாவம் கொண்ட பிரகாஷ் (அசோக் செல்வன்) படிப்பில் பயங்கரக் கெட்டி. தனது குடும்பத்தினரின் வற்புறுத்தலுக்காகக் காவல் துறையில் சேர்கிறார்.
டிஎஸ்பியாக சேர்ந்த பிரகாஷுக்கு லோகநாதனோடு இணைந்து பணியாற்றி பயிற்சி பெறும்படி உத்தரவிடப்படுகிறது.
ஒன்றுக்கொன்று நேரெதிரான குணாதிசயங்கள் கொண்ட லோகநாதனும் பிரகாஷும் சேர்ந்து இளம்பெண்களைக் கொல்லும் சைக்கோ கொலையாளியைக் கண்டறிந்தார்களா இல்லையா என்பதே மீதிக்கதை.
இந்தப் படத்தின் இடைவேளை நம்மை நிச்சயமாக ஆச்சர்யப்படுத்தும். அதன்பிறகு கதை இப்படித்தான் செல்லும் என்ற கணிப்பை மீறி இறுதிவரை பரபரப்பூட்டுகிறது ‘போர் தொழில்’.
அந்த காரணத்தாலேயே, ஒரு உலகத்தரமான த்ரில்லர் என்ற அந்தஸ்தையும் பெறுகிறது.
அசத்தும் காம்பினேஷன்!
அசோக் செல்வன் ஏற்ற பிரகாஷ் பாத்திரம் வழக்கமாகப் பல தமிழ் திரைப்படங்களில் நாம் பார்க்கக் கூடியது.
ஆனால், அவருக்கென்று தனிப்பட்ட ‘பில்டப்’ ஏதும் இல்லாததே இந்த படத்தின் ப்ளஸ்.
ரசிகர்கள் பலருக்குத் தன் நடிப்பு பிடித்தால் போதுமென்றே அவரும் செயல்பட்டிருக்கிறார்
அறுபது வயதுக்கு மேல் இப்படித்தான் பாத்திரங்கள் கிடைக்குமென்ற நியதியை மீறி நம்மைத் தொடர்ச்சியாக ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கி வருகிறார் சரத்குமார். இப்படத்தில் அவர் ஏற்ற லோகநாதன் பாத்திரமும் அதிலொன்று.
கொலை செய்யப்பட்ட சடலத்தின் காதில் தெர்மோமீட்டர் வைத்துப் பார்த்தால் கிடைக்கும் வெப்பநிலையை வைத்து, எத்தனை மணி நேரத்திற்கு முன்பாக அந்த நபர் மரணித்தார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
அசோக் செல்வன் அதைச் செய்துகாட்டும்போது, சரத்குமார் முகத்தில் ஆச்சர்யம் தோன்றும். ‘அது புத்தகத்துல படிச்சு தெரிஞ்சுகிட்டது’ என்றதும், அவர் முகம் சுருங்கும். அது போன்ற தருணங்களில் சரத் நடிப்பின் வீச்சை அறிய முடியும்.
ஒன்றுக்கொன்று எதிர்துருவங்களாக இருக்கும் இரண்டு பாத்திரங்கள் காவல் துறை விசாரணையை மேற்கொள்வதை லெதல் வெப்பன், பேட் பாய்ஸ் போன்ற பல ஆங்கிலப் படங்களில் பார்த்திருப்போம்.
அந்த வரிசையில் சரத் – அசோக் செல்வன் காம்பினேஷன் அசத்தல் அனுபவத்தைத் தருகிறது.
நிகிலா விமல் இதில் அதிகபட்சமாக ஆறேழு காட்சிகளில் தோன்றியிருப்பார். அதற்காக, கதையில் அவருக்கு முக்கியத்துவம் இல்லை என்று சொல்லிவிட முடியாது.
ஆனால், நாயகியாக இல்லாமல் ஒரு பாத்திரமாக வந்து போயிருக்கிறார் என்று சொல்ல முடியும். இது போன்ற பெண் பாத்திர வார்ப்புகள் தமிழில் அரிது.
மூவரையும் தாண்டி ஓஏகே சுந்தர், நிழல்கள் ரவி, மலையாள நடிகர் சுனில் சுகாதா, பி.எல்.தேனப்பன், ஹரிஷ் உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர். மறைந்த நடிகர் சரத்பாபு ஒரு வித்தியாசமான பாத்திரத்தில் தோன்றியுள்ளார்.
கலைச்செல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவில் படம் முழுக்க இருளின் சதவீதம் மிக அதிகம். ஆனால், அது கொஞ்சம் கூட நமக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தவில்லை. அந்த அளவுக்கு ‘டிஐ’ பயன்பாட்டை உத்தேசித்து ஒளி வெள்ளத்தைத் திரையில் பரப்பியிருக்கிறார்.
இந்துலால் கவீத்தின் தயாரிப்பு வடிவமைப்பு, கேமிரா கோணம் ஒவ்வொன்றும் ‘ரிச்’ ஆக மாறுவதில் கவனம் காட்டியுள்ளது.
ஸ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பு, சிறு பிசிறு கூட இல்லாமல் திரையில் கதை சொல்லப்படுவதற்கு உதவியிருக்கிறது. ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசை படத்தோடு நம் கவனம் ஒன்றுவதில் தீவிரம் காட்டுகிறது.
அபாரமான எழுத்தாக்கம்!
‘போர் தொழில்’ படத்தின் மாபெரும் பலம் அதன் எழுத்தாக்கம். கதையில் வரும் பிரதான பாத்திரங்கள் மட்டுமல்லாமல் ஓரிரு காட்சிகளில் இடம்பெறும் மனிதர்களையும் நுணுக்கமாக வடிவமைத்திருக்கிறது இயக்குனர் விக்னேஷ் ராஜா – ஆல்ப்ரெட் பிரகாஷ் இணை..
புதிதாகத் திருமணமாகி ‘நைட் டியூட்டி’க்கு வந்த போலீஸ் ஜீப் டிரைவரின் ஏக்கங்களில் இருந்து தான் முதல் காட்சி தொடங்கும். கதையும் அங்கேயே ஆரம்பித்துவிடுகிறது.
ஒரு காட்சியில் ஜீப்பின் முன்பகுதியில் டிபன் பாக்ஸை திறந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார் தேனப்பன்.
சிந்தலும் சிதறலுமாக சோற்றை அள்ளி வாயில் போடும் அவர், மேலதிகாரியான சரத்குமாரைப் பார்த்ததும் சாப்பிடுவதை நிறுத்தி விடுவார்.
இன்னொரு காட்சியில், வழக்கு விசாரணையின் போது தொடர்ந்து ஒலிக்கும் செல்போனை ‘ஆஃப்’ செய்வார். இது எல்லாமே அப்பாத்திரங்களின் தன்மை என்னவென்பதைச் சட்டென்று விளக்கும்.
இந்தக் கதையில் கொலையாளி இவர்தான் என்பதை அடையாளம் காணும் இடத்தில் இடைவேளை வருகிறது. அதுவரையிலான திரைக்கதை நகர்வு அற்புதமாக இருக்கும்.
அதில் ஆச்சர்யமில்லை. ஆனால், இடைவேளைக்குப் பின் தொடங்கி இறுதி வரை பரபரப்பை திரையில் நிறைத்த வகையில்தான் பிரமிப்பைத் தருகிறது ‘போர் தொழில்’.
சமீபகாலத்தில் ராம்குமார் இயக்கிய ‘ராட்சசன்’ படத்திற்குப் பிறகு, 2020இல் மலையாளத்தில் வெளியான ‘அஞ்சாம் பதிரா’ அப்படியொரு அனுபவத்தைத் தந்தது.
அந்த ஒரு காரணமே ‘போர்தொழில்’ திரையிடப்பட்ட இடங்களில் கூட்டத்தை நிறைத்து வருகிறது.
ஒரு த்ரில்லர் படத்தில் கருத்து சொல்ல வேண்டுமா என்று யோசிக்காமல், இறுதியாகப் பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோளையும் வைக்கிறது விக்னேஷ் ராஜா – ஆல்ப்ரெட் பிரகாஷ் கூட்டணி. அதற்காகவும் இதன் எழுத்தாக்கத்தைக் கொண்டாடலாம்.
தமிழ் திரையுலகுக்கு ஒரு திறன்மிக்க இயக்குனர் கிடைத்த மகிழ்ச்சியைத் தந்திருக்கிறார் விக்னேஷ் ராஜா. அடுத்தடுத்து அவரது பயணம் சீரும் சிறப்புமாக அமையட்டும்!
– உதய் பாடகலிங்கம்