பெரிய இலக்குகளை சிறிதாக்கிக் கொள்ளுங்கள்!

ராம்குமார் சிங்காரம் எழுதிய தன்னம்பிக்கைத் தொடர் – 4

உங்கள் இலக்கு எவ்வளவு பெரிதாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்தத் தூரத்தை எண்ணி மலைத்துவிட வேண்டியதில்லை. அவற்றை சிறிய இலக்குகளாக வகுத்துக் கொண்டால் அடைவது எளிது.

ஒரு அரசன் யானையினுடைய எடை எவ்வளவு என்று கண்டறிய உத்தரவிட்டான். அப்போது அதிநவீன எடைத் தராசுகள் இல்லாத காலம். அரசனின் கட்டளையை நிறைவேற்ற முடியாமல் அனைவரும் திணறினர்.

ஆனால், ஒரு சிறுவன் மட்டும் ஒரு படகில் யானையை ஏற்றி அந்தப் படகை தண்ணீருக்குள் கொண்டு சென்றான்.

யானையை ஏற்றியதால் படகு தண்ணீருக்குள் எந்த அளவு மூழ்கியிருக்கிறது என்பதை குறித்துக் கொண்டான்.

பிறகு, யானையை இறக்கிவிட்டு சிறிய பாறாங்கற்களை ஏற்றினான்.

படகு அதே அளவு தண்ணீரில் மூழ்கும் வரை பாறைகளால் அந்தப் படகை நிரப்பினான்.

தண்ணீர் அதே அளவை எட்டியவுடன் அந்தச் சின்னப் பாறைகளை வெளியில் எடுத்து எடை போட்டு அதுதான் யானையின் எடை என்று கண்டுபிடித்துச் சொன்னான்.

ஆம்! ஒரு பெரிய யானையை எடை போடுவது கடினம் என்பதால், அதனை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து எடையைக் கண்டறிந்தான்.

அதுபோலத்தான், பெரிய இலக்குகள் மலைப்பைத் தருவதனால் சிறிய, சிறிய இலக்குகளாக அவற்றை வகுத்துக் கொண்டு பணக்காரராகலாம்.

தொழில் தொடங்க ஒருவருக்கு 10 லட்சம் ரூபாய் முதலீடாக தேவைப்பட்டது. அவர் ஒரு வங்கியை நாடி கடனுக்காக விண்ணப்பித்திருந்தார். ‘இதோ, அதோ’ என்று கடன் தராமல் மூன்று மாதங்களைக் கடத்தி விட்டது வங்கி.

இவர் சற்றும் அசராமல் தனது நண்பர்கள், உற்றார் உறவினர்களிடம், தலா ரூபாய் 50 ஆயிரம் என 20 பேரை பங்குதாரராகச் சேர்த்து அந்தத் தொழிலைத் தொடங்கி, இன்றைக்கு சைக்கிள்களுக்கான மூலப்பொருள் உற்பத்தியில் முன்னணியில் திகழ்கிறார்.

இன்னும் எளிமையாகச் சொல்லப்போனால் நீங்கள் பார்க்கிற ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில்கூட ரன் ரேட் கணக்கிடப்படுவதும் வெற்றியை எளிமையாக்குவதற்காகத்தான்.

50 ஓவர்களில் 300 ரன்கள் அடிக்க வேண்டும் என்பதைவிட, ஒரு பந்துக்கு ஒரு ரன் என்று வைத்துக் கொண்டால் இலக்கைக் கண்டு மலைக்காமல் எளிமையாக அடைய முடியும்.

சரி… இந்த வாரம் நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் இலக்குகளை சிறிய, சிறிய இலக்குகளாக மாற்ற வேண்டும்.

எடுத்துக்காட்டாக, அடுத்த பத்து ஆண்டுகளில் நீங்கள் உங்கள் வருமானத்தை பத்து மடங்கு உயர்த்த வேண்டும் என்று விரும்பினால், ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் எந்த அளவுக்கு விற்பனையை உயர்த்த விரும்புகிறீர்கள்?

முதல் ஆண்டில் ஒவ்வொரு மாத வாரியாக எந்த அளவுக்கு வளர்ச்சியை எதிர்பார்க்கிறீர்கள்?

நாள் வாரியாக அந்த இலக்கை வகுத்துக் கொள்ள முடியுமா? என்று யோசியுங்கள்.

அப்படி செய்த பிறகு அந்த இலக்கை எட்ட நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிடுங்கள்.

நினைவில் கொள்ளுங்கள்… மிகப் பெரிய பயணங்கள்கூட சிறு, சிறு அடிகளாகத்தான் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே மலைத்துப் போய் நின்று கொண்டே இருப்பதைவிட, சென்று கொண்டே இருப்பது மேல்!

(தொடரும்..)

ராம்குமார் சிங்காரத்தில் ‘பணமுதிர்ச் சோலை’ நூலிலிருந்து…

https://ramkumarsingaram.com

Comments (0)
Add Comment