தே.மு.தி.க. தேய்ந்து போனது ஏன்?

நடிகர் விஜயகாந்தின் குடும்பம் காங்கிரசை சேர்ந்தது என்பதால், அவர் எப்போதும் கதராடை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால் தி.மு.க. அனுதாபி கலைஞர் மீது தனி அன்பு வைத்திருந்தார்.

விஜயகாந்த் படங்களில் தி.மு.க. ஆதரவாளர்களான ராதாரவி, எஸ்.எஸ்.சந்திரன், தியாகு, பாண்டியன், சந்திரசேகர் ஆகியோர் ஆஸ்தான நடிகர்களாக இருந்த காலம் உண்டு.

கருணாநிதி தலைமையில் தான் மதுரையில் விஜயகாந்த் திருமணம் நடைபெற்றது. அப்போது கருணாநிதி முதலமைச்சராக இருந்தார். காங்கிரஸ் தலைவர் மூப்பனார் முன்னிலை வகித்தார்.

1996 ஆம் ஆண்டு (சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்படிருந்த சமயம்) சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடந்தது. அதில் பங்கேற்ற விஜயகாந்த், கருணாநிதிக்கு தங்கப் பேனா பரிசளித்தார்.

சினிமாவில் அரசியல் பேசினாலும் நிஜத்தில் விஜயகாந்துக்கு அரசியல் ஆசை இல்லை.

இந்நிலையில்தான் 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரையில் பிரமாண்ட மாநாடு நடத்தி தேசிய முற்போக்கு திராவிட கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து அரசியலில் அடி எடுத்து வைத்தார்.

அடுத்த ஆண்டு (2006) நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் தனித்து களமிறங்கினார்.

234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார்.

விருத்தாச்சலம் தொகுதியில் விஜயகாந்த் வென்றார்.

எனினும் தே.மு.தி.க. 10 சதவீத வாக்குகளை வாங்கி, பிற கட்சிகளை புருவம் உயர வைத்தது.

தி.மு.க.வின் பெரும்பங்கு வாக்குகளை தேமுதிக தட்டிப்பறித்து இருந்தது. அதிமுகவின் வாக்கு வங்கியிலும் லேசான சேதாரம் உண்டு. இதனால்தான் அந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

தமிழகம் சந்தித்த முதல் பொதுத்தேர்தலில் தான் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இருந்தது. விஜயகாந்த், அரசியல் பிரவேசத்தால் மீண்டும் அப்படி ஒரு நிலை 2006 ஆம் ஆண்டு நேரிட்டது.

96 இடங்களில் வெற்றி பெற்றிருந்த திமுக, 34 தொகுதிகளை பிடித்த காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அந்த தேர்தலில் 61 இடங்களை கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சியாக சட்டசபையில் அமர்ந்தது.

காங்கிரஸ் ஆதரவுடன் கருணாநிதி ஆட்சியில் உட்கார்ந்தாலும் அந்த கட்சிக்கு ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை.

அவர் ஆட்சி செய்த 5 ஆண்டு காலமும் ‘மைனாரிட்டி அரசு’ என திமுக அரசை ஜெயலலிதா விமர்சனம் செய்ததற்கு மூலகாரணமாக இருந்தவர் விஜயகாந்த்.

இரு கழகங்களின் வாக்குகளையும் தேமுதிக தின்றதால்தானே அப்படி ஒரு நிலை ஏற்பட்டது.

கூட்டணி வைத்த விஜயகாந்த்

தனித்து நின்று சாதிக்க முடியாது என்பதை உணர்ந்த விஜயகாந்த், 2011 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார். அவரது கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தேமுதிக 29 இடங்களில் வென்றது.

ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் அமோக வெற்றி பெற்றார். கருணாநிதியை பின்னுக்கு தள்ளிவிட்டு விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரான அதிசயம் அந்தத் தேர்தலில் நிகழ்ந்தது.

தேமுதிகவின் அழிவும் அப்போது ஆரம்பமானது என்றும் சொல்லலாம்.
”பதவி வரும் போது பணிவும் வர வேண்டும்’’ என போதித்தவர் எம்.ஜி.ஆர்.

தன்னை கருப்பு எம்.ஜி.ஆர். என அழைத்துக்கொண்ட விஜயகாந்த், பணிவை மறந்தார்.

தன்னை எதிர்க்கட்சித் தலைவராக உயர்த்திய ஜெயலலிதாவை சட்டசபையிலேயே நாலாந்தர பேச்சாளர் போல் விமர்சித்தார்.

அதற்கான விலையை 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் விஜயகாந்த் கொடுக்க வேண்டியதாயிற்று.

தேமுதிக எம்.எல்.ஏ.க்களில் பாதிக்கும் மேற்பட்டோர் திமுகவிலும், அதிமுகவிலும் இணைந்தனர்.

மக்கள் நலக்கூட்டணி எனும் பெயரில் மதிமுக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்டோர் உருவாக்கிய அணியில் தேமுதிகவும் சேர்ந்தது.

விஜயகாந்தை, மக்கள் நலக்கூட்டணி முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்திருந்தது.

உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட விஜயகாந்த் அதிமுக வேட்பாளரிடம் தோற்றதோடு டெபாசிட்டும் இழந்தார்.

அவரது கட்சி ஒரு இடத்திலும் ஜெயிக்கவில்லை.

தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் ஏற்பட்ட விரக்தியாலோ என்னவோ விஜயகாந்த் உடல் நலிவுற்றது. பேச முடியவில்லை.

டெபாசிட் காலி

கடந்த தேர்தலில் (2021) டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி வைத்தது, தேமுதிக.

அந்தக் கட்சிக்கு 60 இடங்கள் ஒதுக்கப்பட்டன. விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மனைவி பிரேமலதா தோற்றுப்போனார். டெபாசிட்டையும் இழந்தார்.

இதே தொகுதியில் தனித்து போட்டியிட்டு விஜயகாந்த் வென்றிருந்தார். கூட்டணி வைத்து போட்டியிட்டு அவர் மனைவி டெபாசிட் இழந்தது ஒன்றே போதும், அந்தக் கட்சியின் நிலையைச் சொல்ல.

– பி.எம்.எம்.

Comments (0)
Add Comment