ஒரு திரைப்படம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்றறிவதற்கு முன்பாக, இதுவரை பார்த்தவற்றில் இருந்து விலகி வித்தியாசமாக இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்வது முக்கியம்.
சம்பந்தப்பட்ட இயக்குனரோ, கதாசிரியரோ அல்லது தொழில்நுட்பக் கலைஞர்களோ அப்படியொரு தூண்டுதலை ஏற்படுத்துவார்கள்.
மிக அரிதாக சில நடிப்புக் கலைஞர்கள் அப்படியொரு அடையாளத்தைப் பெறக் காரணமாவார்கள். சமீபகாலமாகத் தமிழ், தெலுங்கு திரையுலகில் அப்படியொரு கலைஞராக அறியப்படுபவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இந்த ஆண்டில் மட்டும் இவர் நடித்து இதுவரை 5 படங்கள் வெளியாகியிருக்கின்றன.
சுமார் அரை டஜன் படங்கள் காத்திருப்புப் பட்டியலில் இருக்கின்றன.
எப்போது வெளியானாலும் அவற்றைப் பார்க்க ஒரு ரசிகர் கூட்டம் தயாராக இருக்கிறது.
ஆனால், இந்த நிலைமையை உருவாக்க அவர் சுமார் 13 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடுமையாக உழைத்து வருகிறார்.
வெகுசாதாரணமான அறிமுகம்!
தாய், தந்தை, தாத்தா, அத்தை என்று முந்தைய தலைமுறை சினிமாவில் முகம் காட்டியபோதும், ஐஸ்வர்யாவின் பால்ய பருவம் அவ்வளவு சுகமானதாக அமையவில்லை.
குடும்ப உறுப்பினர்களின் இழப்பு, எதிர்காலம் குறித்த தெளிவின்மை, தடைகளை அடுக்கும் வறுமை என்று கடினமான தருணங்கள் மீது கட்டமைக்கப்பட்டிருந்தது அவரது இளமைக் காலம்.
நடனம், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பு என்று சென்று கொண்டிருந்த ஐஸ்வர்யாவின் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தியதில் ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சிக்குப் பெரிய பங்குண்டு.
முதல் பட வாய்ப்பில் அது ஆற்றிய பங்கு என்னவென்று தெரியாதபோதும், ஊடகங்களில் அவரை அறிமுகப்படுத்த அதுவே ‘விசிட்டிங் கார்டாக’ இருந்ததென்று உறுதியாகச் சொல்ல முடியும்.
பெரிய இயக்குனர், தயாரிப்பு நிறுவனம், முன்னணி நாயகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் புடைசூழ அறிமுகமான பலர் அடுத்தடுத்த படங்களில் காணாமல் போவது திரையுலக இயல்பு.
அப்படியொரு சூழலில் சிறு பட்ஜெட் படங்களில் நடித்து தனித்துவத்தை நிரூபிப்பது நிச்சயம் குதிரைக்கொம்பைப் பிடிக்கும் முயற்சிதான். வார்த்தைகள் மிகை என்றாலும், அதனைச் சாதித்துக் காட்டினார் ஐஸ்வர்யா.
‘ராம்பந்து’ என்று தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஒரேயொரு அனுபவத்தோடு திரையில் நுழைந்தவருக்கு ‘நீதானா அவன்’, ‘அவர்களும் இவர்களும்’, ‘உயர்திரு 420’, ‘சட்டப்படி குற்றம்’ போன்ற படங்கள் அடுத்தடுத்து ரசிகர்களிடம் முகம் காட்டும் வாய்ப்பைத் தந்தன.
நாயகி என்றில்லாமல் சிறு பாத்திரங்களில் நடிக்கத் தயாராக இருக்கும் அளவுக்கே அப்போதைய நிலைமை இருந்தது.
ஆனாலும், தனது திறமையும் படக்குழுவினரின் பார்வையும் புதிய வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் என்று ஐஸ்வர்யா உறுதியாக நம்பினார்.
பா.ரஞ்சித்தின் முதல் படமான ‘அட்டக்கத்தி’ அப்படியொன்றாக அமைந்தது. இரண்டொரு காட்சிகளில் லேசாகத் தலைகாட்டியபோதும், ‘யார் இவர்’ என்று ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்தார். அதன்பிறகும் வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கவில்லை.
2014இல் வெளியான ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ படப் பாடல்கள் தொலைக்காட்சிகளில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பானபோது பரவலான மக்களைச் சென்றடைந்தார்.
குறிப்பாக ‘கூடை மேல கூடை வச்சு’ பாடல் சிறு குழந்தைகளையும் கூட ஆட்டுவித்தது. அதன் தொடர்ச்சியாக வந்த ‘திருடன் போலீஸ்’ திரைப்படம், ஒரு இயல்பான மெட்ரோ நகரப் பெண்ணாக அவரை முன்னிறுத்தியது.
அதுவரை வெகுசாதாரணமாக நகர்ந்த ஐஸ்வர்யாவின் வாழ்க்கை ‘காக்கா முட்டை’க்குப் பிறகு தலைகீழாக மாறிப்போனது.
தாய் பாத்திரம்!
காதல், கவர்ச்சி, ஆட்டம் பாட்டம் என்று சுற்றிச் சுழன்று நாயகியாக நடிக்கும் வயதில் இரண்டு வளர்ந்த குழந்தைகளுக்குத் தாயாகத் தோன்றினார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
அடித்தட்டு வாழ்க்கையை மேற்கொள்ளும் ஒரு பெண்ணைப் போலவே அந்தப் படம் முழுக்கத் தெரிந்தார்.
அந்த யதார்த்தத்தையும் எளிமையையும் திரையில் பிரதிபலிப்பது சாதாரண காரியமில்லை.
அந்த படத்திற்குப் பிறகு, திரையுலகமே ஐஸ்வர்யாவை மரியாதையுடன் உற்றுநோக்கியது. பல நடிகைகள் அவரைப் புகழ்ந்து பேட்டி தந்தார்கள்.
ஒரு ஆகச்சிறந்த படத்தில் நடிப்பது மாபெரும் சாபம். அதன் தொடர்ச்சியாக, அது போன்ற வாய்ப்புகள் மட்டுமே வரும்.
சில அறிவுஜீவிகளின் பாராட்டுகளும் அப்படியொரு முடிவை நோக்கிச் சம்பந்தப்பட்டவர்களைத் தள்ளும்.
ஆனால், ஐஸ்வர்யா ராஜேஷ் அப்படியொரு இக்கட்டில் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை. அதேநேரத்தில், நாயகனிடம் காதல் சொல்ல இரண்டு காட்சிகள், அவரோடு டூயட் பாட இரண்டு பாடல்கள் என்றிருக்கும் கதைகளிலும் சிக்கவில்லை.
2016இல் மட்டும் ஆறாது சினம், மனிதன், தர்மதுரை உட்பட 8 படங்கள் அவரது நடிப்பில் வெளியாகின. அவற்றில் சரிபாதி ஏற்கனவே தயாராகி வெளிவராமல் முடங்கியவை.
கொஞ்சம் முதிர்ச்சியான பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கியவுடன் இளமை பொங்கும் கதைகள் தேடி வருவது நின்றுபோகும்.
ரொம்பவே பொறுமையுடன் தனக்கான படங்களைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கியபோது, அந்த சிக்கலும் காற்றில் கரைந்தது.
அதற்கு வசதியாகத் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி, தெலுங்கு படங்களிலும் அறிமுகமானார் ஐஸ்வர்யா.
2018ஆம் ஆண்டில் வெளியான படங்களில் லட்சுமி, வடசென்னை, கனா மூன்றும் ஐஸ்வர்யாவின் வேறொரு பரிமாணத்தைத் திரையில் காட்டின.
குறிப்பாக, கனாவின் வெற்றி நாயகியை மையமாகக் கொண்ட கதைகளை நோக்கி அவரை நகர்த்தியது. பானுமதி, சாவித்திரி, விஜயகுமாரிக்கு முன் தொடங்கி சரிதா, சுஹாசினி, ரேவதி உட்படப் பலருக்கும் நல்லதொரு வரவேற்பைப் பெற்றுத் தந்த களத்தில் அவரையும் நிற்க வைத்தது.
நாயகிக்கு முக்கியத்துவம்!
க/பெ ரணசிங்கம், திட்டம் இரண்டு, டிரைவர் ஜமுனா போன்ற படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு காட்சிகள் அதிகம். போலவே, மொத்தக் கதையும் அவரது தோள்களைத் தாங்கியே நகரும்.
ஒரு திரைக்கதையைப் படித்தவுடன் நமது பாத்திரம் திரையில் இப்படித்தான் வெளிப்படும் என்ற தெளிவு இருந்தால் மட்டுமே, அப்படியொரு தேர்வினை மேற்கொள்ள முடியும். அதற்கு ரசிகர்களின் மனோபாவத்தோடு அக்கதையினை அணுகுவது முக்கியம்.
வெவ்வேறு பொருளாதாரச் சூழல்களையும் மனிதர்களையும் சந்தித்த அனுபவம், அதனை எளிதாகச் சாத்தியப்படுத்தியிருக்கிறது.
2023இல் வெளியான ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’, ‘சொப்பன சுந்தரி’, ‘பர்ஹானா’, ‘தீராக்காதல்’, ‘ரன் பேபி ரன்’ படங்களில் ஐஸ்வர்யாவின் பாத்திரங்களைத் தனியே நோக்கினால் சில அம்சங்கள் பிடிபடும். நிச்சயமாக அவை பத்தோடு பதினொன்றாக அமையவில்லை.
அந்த படங்களைக் குறித்து யோசிக்கும் எவருக்கும், அவர் முகமே முதலில் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு, அவற்றின் அடையாளமாகத் திகழ்கிறார்.
அதற்காகத் தனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே அவர் தேர்ந்தெடுக்கிறார் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது.
நம்ம வீட்டுப் பிள்ளை, டக் ஜெகதீஷ், ரிபப்ளிக் போன்ற கமர்ஷியல் படங்களிலும் கூட அவர் நடித்திருக்கிறார்.
ஆனால், அப்பாத்திரங்கள் திரையில் வலுவாக வெளிப்பட்டன என்பதை மறந்துவிடக் கூடாது.
ஐஸ்வர்யா நடித்தவற்றில் துருவ நட்சத்திரம், மோகன் தாஸ், தீயவர் குலைகள் நடுங்க, இடம் பொருள் ஏவல் உள்ளிட்ட சில படங்கள் அடுத்து வெளியாகவிருக்கின்றன.
இப்படங்கள் எதிர்கொள்ளும் தாமதம் நிச்சயமாக ஐஸ்வர்யாவை எந்த வகையிலும் பாதிக்காது.
அந்தப் படங்கள் வெளியானால் நிச்சயம் அவருக்குப் பெரிதாகப் பாராட்டுகளும் கிடைக்கும். அந்த நம்பிக்கையை ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருப்பதே ஐஸ்வர்யாவின் பதிமூன்று ஆண்டு கால நடிப்பு வாழ்வுக்குக் கிடைத்த வெற்றி.
திரையில் மட்டுமல்ல, பட விழாக்கள் சம்பந்தப்பட்ட மேடைகளிலும் கூட, தன்னை எப்படி வெளிப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று அவருக்குத் தெரியும். அந்த நேரத்தில், அவரது உடல்மொழியில் ஒரு தெனாவெட்டு தெரியும்.
ஆனால், அவரது பேச்சில் நிறைந்திருக்கும் எளிமையும் பணிவும் அதனைச் சரி செய்துவிடும்.
பொதுவெளியில் தன்னை ஒருவர் எப்படி நோக்க வேண்டும் என்ற தெளிவும் புரிதலும் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.
அதுவே, மிகச்சாதாரண பெண்களின் ஓருருவமாக ஐஸ்வர்யாவை முன்னிறுத்துகிறது.
தொடர் உழைப்பும் புதிய தேடல்களுமாய் திரியும் ஐஸ்வர்யா ராஜேஷ், இனிவரும் ஆண்டுகளில் தனது பயணத்தில் புதிய திசைகளைக் காண வேண்டும்.
வாழ்க்கைப் பயணத்தில் தன்னைத் தானே செதுக்கிக்கொள்பவர்களுக்கு அது நிச்சயம் வசப்படும்.
அது வாய்த்தால் நாட்டின் மிகச்சிறந்த பெண் ஆளுமைகளுள் ஒருவராக ஐஸ்வர்யா ராஜேஷ் மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை.
– உதய் பாடகலிங்கம்