“சொன்னது நீதானா” – எம்.எஸ்.வியிடம் கேட்ட கண்ணதாசன்!

ஒரு பாடல் கம்போசிங்குக்காக, கண்ணதாசனுடன் படக்குழுவினர் பெங்களூரு சென்றிருக்கிறார்கள். எல்லோருக்குமே தனித்தனி அறை கொடுக்கப்பட்டிருந்தது.

பெங்களூர் வந்த முதல்நாள் முழுவதுமே கவிஞர் தூங்கிக் கொண்டே இருந்திருக்கிறார். கண்ணதாசன் தூங்கும்போது யாராவது எழுப்பினால் கோபம் வந்துவிடுமாம்.

இதனால் அன்றைய நாள் முழுதும் எந்த கம்போசிங்கும் நடக்கவில்லை. ஆனால் மறுநாள் காலையிலும் கண்ணதாசன் எழவில்லை. தூங்கிக் கொண்டே இருந்திருக்கிறார்.

இதனால் எம்எஸ்வி டென்ஷன் ஆகிவிட்டார். கண்ணதாசனின் ரூம் கதவு முன்பு போய் நின்று கொண்டு, “யாராவது போய் கவிஞரை எழுப்பிவிட போறீங்களா? இல்லையா? இல்லேன்னா நான் கிளம்பி ஊருக்கு போயிடுவேன்” என்று அங்கிருந்து சத்தம் போட்டிருக்கிறார். டக்கென்று கண்ணதாசனின் அறைக் கதவு திறந்தது. எல்லோரும் பயந்தே போய்விட்டார்கள்.

எம்எஸ்வி பேசியது எப்படியோ கவிஞருக்கு கேட்டிருக்குமோ என்று படபடப்பு எகிறி விட்டது.

கவிஞர் வெளியே வந்தார். எம்எஸ்வியிடம்… “சொன்னது நீதானா”… என்றார். எம்எஸ்வியோ ஒரு கணம் பதறிட்டார். “ஐயோ.. நான் இல்ல… அது வந்து..” என்று திணறினார்.

ஆனால் கவிஞரோ, எம்எஸ்வியையே உற்றுப் பார்த்துகொண்டு, “இல்லை… சொன்னது நீதானா? சொல்.. சொல்.. சொல்.. என் உயிரே” இந்த வரிகளை போய் கம்போஸ் செய், இதோ வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு போனாராம்.

இப்படித்தான் அந்த பாடல் பிறந்திருக்கிறது.. பல பாடல்களும் இப்படியே தான் யதார்த்தமாய் பிரசவித்திருக்கின்றன.!

நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment