– கலைவாணரின் பெருமிதம்
சத்யா மூவீஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த படம் ‘காவல்காரன்’.
எம்.ஜி.ஆர். ஜோடியாக ஜெயலலிதா நடித்திருந்த இந்தப் படத்துக்கு முதலில் வைக்கப்பட்டிருந்த பெயர் ‘மனைவி’.
பிறகு எப்படி பெயர் மாறியது?
படத்தில் எம்.ஜி.ஆருடன் வில்லன் நடிகர் கண்ணன் மோதுவது போன்று ஒரு காட்சி.
எம்.ஜி.ஆர், கருப்பு பேண்ட் – கருப்பு பனியன் அணிந்து ஒரு கையில் டார்ச் லைட்டையும், மறுகையில் தடியையும் வைத்துக்கொண்டு, கண்ணனுடன் சண்டையிடுவது போல் காட்சி படமானது.
இதனை ஸ்டில் புகைப்படக்காரர் சங்கர் ராவ் படம் பிடித்தார்.
இரண்டு நாள் கழித்து அந்த படங்களை எம்.ஜி.ஆர். பார்த்துக் கொண்டிருந்தபோது கவிஞர் வாலி, பாடல் எழுதுவதற்கு அங்கு வந்தார்.
பட ஸ்டில்களை வாலியிடம் எம்.ஜி.ஆர். காட்டினார்.
படங்களை கூர்ந்து பார்த்த வாலி ”எனக்கு ஒரு யோசனை தோணுது. சொல்லலாமா?” என தயங்கியபடி எம்.ஜி.ஆரிடம் கேட்டார்.
“தாராளமாக சொல்லுங்க’’ இது எம்.ஜி.ஆர்.
“படத்தில் நீங்க போலீஸ் அதிகாரியா வர்ரீங்க. அதாவது காவல்காரன் இந்த ஸ்டில்ஸ் அதுக்கு பொருத்தமா இருக்கு. எனவே இந்தப் படத்துக்கு பொருத்தமா வேறு ஒரு டைட்டில் தோணுது. சொல்லட்டுமா?’’
“நான் தான், நீங்க என்ன நெனெச்சீங்களோ அத சொல்லலாம்னு சொல்லிட்டேனே. ஏன் தயக்கம்?”
’’மனைவி’ங்கிற தலைப்புக்கு பதிலா ‘காவல்காரன்’னு வச்சா பொருத்தமா இருக்கும்னு நெனைக்கிறேன்”
“யோசிச்சு சொல்றேன்’’ என்று கூறிய எம்.ஜி.ஆர். இது குறித்து இயக்குநர் ப.நீலகண்டனுடன் ஆலோசனை நடத்தினார். இயக்குநருக்கும் அந்த தலைப்பு பிடித்துப்போனது.
‘மனைவி’க்கு ‘காவல்காரன்’ என புதுப்பெயர் சூட்டப்பட்டது.
கலைவாணரின் பெருமிதம்:
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுடன், ஒரு மாலைப்பொழுதில் நண்பர்கள் சுவாரஸ்மாக பேசிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது எம்.ஜி.ஆருக்கு கூடும் மக்கள் திரள் குறித்து விவாதம் ஏற்பட்டது.
கலைவாணரிடம் நண்பர் ஒருவர் கேட்டார்.
“எம்.ஜி.ஆருக்கு நிஜமாகவே மக்கள் கூட்டம் சேர்கிறதா?
இதற்கு என்.எஸ்.கிருஷ்ணன் சொன்ன பதில் இது:
‘ராமச்சந்திரனுக்கு இப்ப என்ன கூட்டம் வருது தெரியுமா? எனக்கு சேருகிற கூட்டம், பாகவதருக்கு சேருகிற கூட்டம், ராஜரத்தினம் பிள்ளை நாதசுரத்துக்கு சேர்ந்த கூட்டம், எஸ்.ஜி.கிட்டப்பாவுக்கு சேர்ந்த கூட்டம் – இவ்வளவையும் மொத்தமாகச் சேர்த்தால் எவ்வளவு கூட்டம் வருமோ அவ்வளவு கூட்டம், இப்போ எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு சேருது, தெரியுமா ஒய்?
இப்படிச் சொன்னதும், இன்னொரு நண்பர் என்.எஸ்.கே.யிடம் கேட்டார்.
“அண்ணே! எம்.ஜி.ஆருக்கு சேருகிற கூட்டம் பத்தி நீங்கள் இப்படி மகிழ்ச்சி அடைகிறீர்கள்.
இப்படி மற்ற கலைஞர்களுக்கும் பெருமைப்பட தெரியலையே?”
கலைவாணர், நெற்றிப் பொட்டில் அடித்த மாதிரி பதிலளித்தார்.
“இந்தா பாருங்கள்! கூட்டம் எனக்கு சேர்ந்தா என்ன? நம்ம ராமச்சந்திரனுக்கு சேர்ந்தா என்ன? என்னுடைய விருப்பம் எல்லாம், எந்த கலைஞனுக்காவது கூட்டம் சேரட்டும். எப்படியாவது கலைஞனுடைய புகழ் பரவட்டும்’’ என்றார், பெருந்தன்மையுடன் கலைவாணர்.
மணியனுக்கு உதவி:
‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் வெளிநாடுகளில் ஷுட்டிங் நடப்பதற்கு, பெரும் உதவியாக இருந்தவர் பத்திரிகையாளர் மணியன். அவருக்கு பதிலுக்கு உதவ முடிவு செய்தார். எம்.ஜி.ஆர்.
மணியனுடன் வித்வான் லட்சுமணனை பங்குதாரராக சேர்த்துக் கொண்டு படதயாரிப்பு நிறுவனம் தொடங்குமாறு ஆலோசனை சொன்னார்.
பட நிறுவனதுக்கு ‘உதயம் புரொடக்ஷன்ஸ்’ என்று எம்.ஜி.ஆரே பெயர் சூட்டினார்.
அந்த நிறுவனம் எம்.ஜி.ஆரை வைத்து தயாரித்த முதல் படம் ‘இதயவீணை’.
இதனைத் தொடர்ந்து உதயம் நிறுவனம் தயாரித்த ‘சிரித்து வாழ வேண்டும்’, ‘பல்லாண்டு வாழ்க’ படங்களிலும் எம்.ஜி.ஆர் நடித்துக் கொடுத்தார். மூன்று படங்களுமே நூறுநாள் கண்டன.
– பி.எம்.எம்.