ஒடிசா கோர விபத்து: பொறுப்பேற்பது யார்?

அந்தக் கோர விபத்துச் செய்தி காதில் விழுந்த கணத்திலிருந்த அதிர்ச்சி இவ்வளவு நாட்களாகியும் இன்னும் மாறவில்லை.

ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த 2 ஆம் தேதி மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் இதுவரை உயிர்ப்பலியானவர்களின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்திருக்கிறது.

இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் உடல் சிதைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இன்னும் உயிர்ப் பலியானவர்களில் 101 பேர்களின் சிதிலமடைந்த உடல்களை வைத்து அவர்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.

அந்த உடல்களுக்கு மரபணு சோதனை செய்து அவற்றின் அடையாளங்களைக் கண்டுபிடிக்க முயற்சி நடக்கிறது.

பிணவறைகளில் வரிசையாக வைக்கப் பட்டிருக்கும் சடலங்களுக்கு நடுவே தவிப்புடன் உறவினர்கள் உடலைத் தேடுவதைத் தொலைக்காட்சிகளில் பார்க்கும்போது பதைபதைப்பு ஏற்படுகிறது.

மாலை நேரத்தில் மூன்று ரயில்கள் மோதிக்கொள்ளும் அளவுக்கு நடந்த விபத்துக்கு உண்மையில் யார் காரணம்?

சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள் என்றாலும், சதிச்செயல்கள் காரணமாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தை வழக்கம் போல விதைத்தாலும், தற்போது வரை ரயில்வே தண்டவாளங்களை மாற்றி ரயில்களைப் பயணிக்க வைக்கிற சிஸ்டத்தில் உள்ள பலவீனம் தான் காரணம் என்கிறார்கள் ரயில்வே ஊழியர்கள் சங்கத்தினர்.

தினமும் பல லட்சம் பேர் பயணத் செய்யும் ரயில்வே துறையில் போதுமான அளவுக்கு ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை என்பதை இவ்வளவு கால தாமதமாக, அதிலும் இப்படியொரு கோர விபத்து நடந்த பின்னணியில் சொல்கிறார்கள் ஊழியர்கள்.

ஒருபுறம் ‘வந்தே பாரத்’ ரயில்களுக்கான ஆரவாரம் இருந்தாலும், ரயில்வே துறையில் இந்த அளவுக்கு ஆட்களுக்கான பற்றாக்குறையையும், ரயில்வே சிக்னல் முறை பலவீனப்பட்டிருப்பதையும் சரி செய்யப் போவது யார்? முதலில் நிகழந்த தவறுக்குப் பொறுப்பேற்கப் போவது யார்?

இதற்கு முன்னால் நம் நாட்டில் ரயில் விபத்துகள் பெரிய அளவில் நடந்தபோது, அதற்குத் தார்மீகப் பொறுப்பேற்று லால் பகதூர் சாஸ்திரி, நிதிஷ்குமார் போன்றவர்கள் தங்கள் பதவிகளிலிருந்து விலகி இருக்கிறார்கள்.

தற்போதுள்ள ரயில்வே அமைச்சரைப் பதவி விலகச் சொல்லி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினாலும், இக்கணம் வரை எந்த மாற்றமும் நடக்கவில்லை என்பது எதையும் அதிர்ச்சியுடன் பார்க்காத மனநிலைக்கு ஆட்சியாளர்கள் வந்திருப்பதையே உணர்த்துகிறது.

அதிலும் ரயில்வேயில் சிக்னல் மாற்றம் போன்றவற்றில் தனியாரைப் பங்கெடுக்க வைத்திருப்பது எத்தகைய ஆபத்துகளை எல்லாம் விளைவிக்கும் என்பதை ஒன்றிய அரசு இம்மாதிரியான கொடூர நிகழ்வுகளுக்குப் பிறகும் உணரவில்லை என்றால்,

தொடர்ந்து ரயில்வே, விமானத்துறை போன்றப் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் வசமே ஒப்படைத்துக் கொண்டிருந்தால், நிலைமை எதில் போய் முடியும்? ரயில்களில் பயணிகள் எப்படி நிம்மதியுடனும், பாதுகாப்புடனும் பயணிக்க முடியும்?

Comments (0)
Add Comment