நான் கண்ட ஒரே தலைவர் அறிஞர் அண்ணா!

பொன்மனச் செம்மலிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கான பதிலும்

கேள்வி

1930-களில் உங்களது மாணவ பருவத்திலேயே அரசியலில் ஈடுபட்டிருந்தீர்கள். அதன்பிறகு தான் சினிமாவில் பிரவேசித்தீர்களா?

பதில்

என்னுடைய வரலாற்றை கேட்டு விட்ட காரணத்தினால் நேரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்னுடைய கடமை  உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கின்றேன்.

என் தந்தையும் தந்தைக்கு உயிரூட்டிய, அறிவை தந்த பாட்டனாரும் பெரும் லட்சாதிபதியாக இருந்தவர்கள்.

வசதி வாய்ப்போடு பெரும் பணக்காரர்களாக இருந்தவர்கள். என்னுடைய இரண்டரை வயதில் என் தந்தை மறைந்துவிட்டார்

ஆனால் மருமக்கள் தாயம் என்பதால் குழந்தைகளுக்கு தனது தந்தையின் சொத்துக்கள் இல்லை என்கிற காரணத்தினால் நாங்கள் அனாதைகளாக்கப்பட்டோம்.

என் தாயினுடைய அரவணைப்பில் தான் நான் வளர வேண்டி இருந்தது. என் தந்தை மேஜஸ்ட்ரேட்டாக, பிரின்ஸ்பாலாக இருந்தார்.

பிரின்ஸ்பாலாக இலங்கையில் பணியாற்றியபோது கண்டியிலேயே தான் நான் பிறந்தேன்.

இரண்டரை வயதிலேயே தந்தையை இழந்தேன். அதன் பிறகு ஐந்து வயதுக்குள் நான் தமிழகத்திற்கு வந்து விட்டேன்.

என்னை வளர்த்த வேலு நாயர் என்பவர் அங்கே போலீஸ் இலாகாவில் போலீஸ்காரராக பணியாற்றியதால் நான் அவரது ஆதரவில் நாங்கள் வளர வேண்டியிருந்தது.

முதன்முதலாக நான் எழுதப் படிக்கத் தெரிந்த மொழி தமிழ். நான் அறிவு வந்த பருவம் முதல் நான் பார்த்துக்கொண்டு பழகிக்கொண்டிருந்த மக்கள் தமிழ் மக்கள்.

என் உடம்பிலேயே இத்தனை ஆண்டுகளாக குருதி வளர்ந்திருக்கிறது சூடேறிக் கொண்டிருக்கின்றது. சூடு தணியாமல் இருக்கிறது என்றால் நான் இந்தளவிற்கு வளர்ந்திருக்கிறேன், வாய்ப்பு பெற்றிருக்கிறேன் என்றால் அது தமிழ் கூறும் நல்லுலகம் தந்த வாய்ப்பாகும்.

ஆகவே அந்த தமிழ் உலகத்திற்கு நான் செய்ய வேண்டும் என்கின்ற ஆர்வம் என்னை அறியாமலேயே என்னை உந்தித் தள்ளிக் கொண்டிருக்கிறது.

என் தாயினுடைய அரவணைப்பு எனக்கு அதிகக் கல்வியைத் தருவதற்கு வாய்ப்பில்லை. ஏழாவது வயதில் நான் நாடகக் கம்பெனியில் சேர்ந்துவிட்டேன்.

ஏழு வயதிலிருந்து நான் நாடகத்தில் நடித்து 35-வது ஆண்டில் சினிமா படங்களில் நடிப்பதற்கு நான் கலந்து கொள்ள வேண்டிய அவசியத்தில் ஈடுபட்டேன். அதன் பிறகு நான் தொடர்பு கொண்டிருக்கிறேன்.

1930 ஆம் ஆண்டு அதாவது 28 வயதிலிருந்தே நான் காங்கிரஸ் கட்சியில் அங்கத்தினராக இல்லாவிட்டாலும் அதனுடைய ஊழியனாக இருந்தேன்.

34 வயதில் நான் அங்கத்தினராக பதிவு செய்து கொண்டேன். அதற்குப் பிறகு சில நாட்கள் அங்கு இருந்தேன்.

அதன்பிறகு எனக்கு அங்கே செயல்பட்ட முறைகளில் சில குறைபாடுகள் கண்டதாக நான் எண்ணியதால் அந்த விருப்பு வெறுப்புகளுக்குள்ளான நிலைமையில் நான் வளர வேண்டும் என்கிற காரணத்தினால் அதிலிருந்து நான் விலகினேன்.

அதன்பிறகு சில காலங்கள் அரசியல் தொடர்பில்லாமல் இருந்தேன். கதர் கட்டுகின்ற காங்கிரஸ்காரணாக இருந்தேன்.

நான் எப்பொழுதுமே ஒரு தேசியவாதியாக இருந்து கொண்டிருப்பவன். அது மட்டுமல்ல மகாத்மாவின் கொள்கையிலே பிடிப்பும் நம்பிக்கையும் கொண்டவன்.

அவைகளை எல்லாம் ஒருங்கு சேர நான் தமிழகத்தில் கண்ட ஒரே தலைவர் மாபெரும் அமரர் அறிஞர் அண்ணா அவர்களை தவிர யாருமில்லை என்பதை அறிந்து கொண்டேன்.

அவருடைய புத்தகங்களை படித்துவிட்டு அவர் நியாயமான கோரிக்கைகள் தான் தமிழகத்திற்கும் இந்திய துணைக் கண்டத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்கிற காரணத்தினால் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தேன்.

அண்மையில் 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி அன்று குற்றமற்ற நான் வெளியேற்றப்பட்டேன்.

வெளியேற்றப்பட்ட பிறகு தொண்டர்களுடைய, மக்களுடைய விருப்பப்படி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை நான் உருவாக்கினேன்.

இப்பொழுது நான் அதில் முதல் தொண்டனாக இருக்கிறேன் என்று மக்கள் சொல்கிறார்கள். நான் அதில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

ஒரு வானொலிக்காக கொடுத்த பேட்டியில் இருந்து எடுத்தது.

Comments (0)
Add Comment