கவிக்கோ நினைவு ஹைக்கூ போட்டி!

– நன்றி கூறும் தமிழ் உலகம்

‘கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி’ -2023 (இரண்டாம் ஆண்டு) பரிசளிப்பு விழா சென்னை, தியாகராயர், பிட்டி தியாகராயர் அரங்கில் மிகச் சிறப்பாக நடந்தது.

இதுபற்றிய சுவையான பதிவை அவ்விழாவில் பங்கேற்ற கவிஞர் ஜெயபாஸ்கரன் எழுதியுள்ளார்.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், தலைமையில் கவிஞரும் திரைப்பட இயக்குனருமான திரு. ந.லிங்குசாமி, கவிஞர் மனுஷ்யபுத்திரன், கவிஞர் தங்கம்மூர்த்தி, கவிஞர் பிருந்தாசாரதி,

கவிஞர் இளம்பிறை, ‘விஷ்ணு அசோசியேட்’ நிறுவன அதிபர் திரு.சிவக்குமார், ‘டிஸ்கவரி’ பதிப்பகம் மு.வேடியப்பன் ஆகியோருடன் அந்நிகழ்வில் பங்கேற்ற நான், கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்களைக் குறித்த எனது நினைவுகளின் சிறு பகுதியை, ‘கவிக்கோ நினைவுரையாக’ அரங்கிற்கு வழங்கினேன்!

கடந்த ஆண்டினைப் போலவே இவ்வாண்டும் உலகெங்கிலும் இருந்து ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட கவிதை இலக்கிய ஆர்வலர்கள் இப்போட்டிக்குத் தங்களின் கவிதைகளை அனுப்பியிருந்தனர். அவற்றில் இருந்து நான்கைந்து கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு,

சா.கா.பாரதிராஜா, (செங்கற்பட்டு- முதல் பரிசு – ரூபாய் 25,000)
பட்டியூர் செந்தில்குமார், (துபாய் – இரண்டாம் பரிசு – ரூபாய் 15,000)
ச.அன்வர் ஷாஜி,(நாமக்கல் – மூன்றாம் பரிசு – ரூபாய் 10,000)
ஆகியோரின் கவிதைகள் தேர்வு செய்யப் பெற்றன.

வானத்துச் சூரியனை
சிறிது தூரம் சுமந்து செல்கிறாள்
தயிர் விற்கும் பாட்டி
– சா.கா.பாரதிராஜா

மாடு தொலைந்த இரவு
தேடி அலையும் திசையெல்லாம்
கேட்கும் மணியோசை
– பட்டியூர் செந்தில்குமார்

மந்தையிலிருந்து தவறிச் செல்லும்
ஒற்றை ஆட்டின் பாதை
சரியாகவும் இருக்கலாம்
– ச.அன்வர்ஷாஜி

ஆகியவையே முறையே மூன்று பரிசுகளைப் பெற்ற கவிதைகள்! போட்டிக்கு வந்திருந்த கவிதைகளில் தேர்வு செய்யப்பெற்ற மேலும் ஐம்பது கவிதைகள் ஒவ்வொன்றும் ரூபாய் 1,000/ ஊக்கப் பரிசு பெற்றன.

ஆக மொத்தம் ஐம்பத்து மூன்று கவிதைகளையும் வழக்கம் போல தொகுத்து, டிஸ்கவரி புத்தக நிறுவனம் விழாவில் வெளியிட்டது.

கவிஞர்கள் குகை மா.புகழேந்தி, தங்கம் மூர்த்தி, பிருந்தாசாரதி உள்ளிட்டோர் அடங்கிய குழு கவிதைகளைத் தேர்வு செய்ய, அவற்றில் இருந்து இயக்குனர் லிங்குசாமி பலகட்டக் கலந்தாய்வுகளுக்குப் பிறகு மூன்று பரிசுகளுக்கும், ஊக்கப்பரிசுகளுக்கும் உரிய கவிதைகளை நிறைவாக தேர்வு செய்தார்.

திரளான இலக்கிய ஆர்வம் மிக்க அறிவார்ந்த பார்வையாளர்கள் அந்த விழா அரங்கில் அடர்ந்து நிறைந்திருந்தனர்.

கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் மகள், தனது வாழ்விணையர் ஹயாத்பாஷா அவர்களுடன் வருகைதந்து நிகழ்ச்சிக்குப் பெருமை சேர்த்தார்.

யுனிவர்சல் பப்ளிஷர்ஸ் திரு.ஷாஜஹான், கவிஞர்கள் மு.முருகேஷ், அமுதபாரதி, ஏகாதசி, முனைவர் பட்டத்திற்கான ஹைக்கூ ஆய்வாளர் தமிழாசிரியர் பிரேமாகிறிஸ்டி, இயக்குனர்கள் மணிபாரதி, எம்.ஆர்.பாரதி, தமிழுணர்வாளர் தமிழினியன், ‘சமூகப் பற்றாளன் ஞானச்சித்தன்’ என்கிற, காவல்துறை ஆய்வாளர் பெ.மணிமாறன் என்றெல்லாம் அரங்கம் முழுவதும் ஆளுமைகளால் நிறைந்திருந்தது.

இயக்குனர் லிங்குசாமி அவர்களும், ‘விஷ்ணு அசோசியேட்ஸ்’ சிவகுமார் அவர்களும் ஒன்றிணைந்து இவ்விழாவை ஆண்டுதோறும் முன்னெடுத்து நடத்தி வருகின்றனர்.

இவர்கள் இருவரில் திரு.லிங்குசாமி சிறந்த கவிஞரும் சிறந்த பிற கவிதைகளின் சுவைஞருமாவார்!

சிவகுமார் அவர்கள், நல்ல கவிதைகளின் தீவிரமான சுவைஞர் மட்டும்தான்.

இவ்விருவரின் இனிமையான இலக்கிய ஆர்வமும், அது தொடர்பான செயல்பாடுகளுமே இப்படியானதொரு, ‘ஹைக்கூ’ இலக்கிய வளர்ச்சித் திட்டமாக மலர்ந்திருக்கிறது.

ஒருவகையில் இவ்விருவருக்கும்கூட தமிழ் இலக்கிய உலகம் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

Comments (0)
Add Comment