ஒடிசா ரயில் விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை!

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7.20 மணிக்கு மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.

முதலில் ஹெளராவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் தடம்புரண்டிருந்த பெங்களூரு-ஹெளரால் மீதும், நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலுடனும் மோதி விபத்துக்குள்ளானதும் தெரியவந்துள்ளது.

விபத்து குறித்து தகவலறிந்ததும் தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படையைச் சோ்ந்த வீரர்கள் உள்பட உள்ளூர் மக்களும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட பயணிகள் பாலசோர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், சோரோ, கோபால்பூா் மற்றும் காந்தாபடா பகுதிகளில் அமைந்துள்ள மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், ரயில் விபத்தில் சிக்கியிருந்த பெட்டிகளிலிருந்து 207 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233ஆக அதிகரித்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரயில் விபத்தில் இதுவரை 233 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்து நடந்தது கொல்கத்தா – சென்னை ரயில் என்பதால் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

விபத்து குறித்து ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விபத்து குறித்து கேட்டறிந்தார்.

அப்போது தேவையான உதவிகளை தமிழ்நாடு அரசு செய்யும் என ஒடிசா முதலமைச்சரிடம் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். அத்துடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் தலைமையில் அதிகாரிகள் கொண்ட குழுவை ஒடிசா விரைய வலியுறுத்தியுள்ளார்.

இந்தக் குழு காலை விமானம் மூலம் ஒடிசா சென்றடைகிறது. இந்நிலையில், கோரமண்டல் ரெயில் விபத்து தொடர்பாக தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது.

ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக தமிழக அரசு சார்பில் 044 2859 3990, 94458 69843 ஆகிய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 94458 69848 என்ற வாட்ஸ் அப் எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசா மாநிலத்தின் பாலாசோர் மாவட்டம் அருகே சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் பலரும் சிக்கியுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஒடிசாவில் ரயில் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சமும், கடுமையான காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று ரயில்வேதுறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார். ஒடிசா ரயில் விபத்து அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன் எனவும் உயிரிழந்த குடும்பங்களுடன் எனது எண்ணம் உள்ளது எனவும் மீட்புப் பணிகள் வெற்றியடையவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், ஒடிசா ரயில் விபத்தால் மனவேதனை அடைந்துள்ளேன் எனவும், ரயில்வே அமைச்சருடன் பேசி உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ள அவர், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  ஒடிசா ரயில் விபத்து செய்தியறிந்து வேதனை அடைந்தேன் எனவும் உயிரிழந்த குடும்பங்களுக்கு என் இரங்கல் எனவும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் எனவும், மீட்புப் பணிகளுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் அளிக்குமாறு காங்கிரஸ் தொண்டர்களையும் தலைவர்களையும் கேட்டுக்கொள்வதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Comments (0)
Add Comment