கழகத்தை ஒன்றிணைத்த பெருமை படைத்தவர்!

அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் பற்றி ஏ.சி.சண்முகம்

நாங்கள் அண்ணியார் என்று அன்போடு அழைக்கும் ஜானகி எம்.ஜி.ஆர் அவர்களுடைய நூற்றாண்டு துவங்கியிருக்கிறது.

நூறாண்டைத் தொட்டு அம்மா அவர்களுடைய பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

1971 ஆம் ஆண்டில் வேலூரில் உள்ள முத்துரங்கம் கலை கல்லூரியில் மாணவர் மன்றப் பொதுச் செயலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

திராவிடர் மாணவர் முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் இருந்தேன்.

அப்போது தான் முதன்முதலில் நான் ஜானகி அம்மையாரை பார்க்கக் கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தோம்.

அதற்கு அடுத்து ஒரு ஆறு மாதம் காலத்திற்குப் பிறகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அப்போது நான் மூன்றாவதாண்டு படித்துக் கொண்டிருந்தேன். தமிழகத்தின் அனைத்து கல்லூரி மாணவர் பேரவைத் தலைவராக இருந்தேன்.

அப்போது தலைவர் வெளியேற்றப்பட்ட செய்தி அறிந்ததும் நாங்கள் ஆரணி, வேலூர் உள்ளிட்ட எல்லாப் பகுதிகளிலும் அந்தந்த மாணவர்கள் அமைப்போடு இணைந்து ஆங்காங்கு ஊர்வலங்கள், பேரணிகள் நடத்தினோம்.

போராட்டங்கள் நடத்தி சுமார் 15 நாட்கள் தமிழகத்தையே ஸ்தம்பிக்க வைத்த பெருமை எங்கள் மாணவர் பட்டாளத்தையே சேரும்.

அந்த மிகப் பெரிய வாய்ப்பு நான் அனைத்துக் கல்லூரி மாணவர் தலைவராக இருந்ததால் எனக்கு கிடைத்தது.

புரட்சித்தலைவருக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய பேரணிகளும் ஊர்வலங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தினோம்.

அதற்கடுத்து புரட்சித்தலைவருடைய பலத்தை நிரூபிக்கும் விதமாக திண்டுக்கல் நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. அதில் சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.திமு.க.வேட்பாளரான மாயத்தேவர் வெற்றி பெற்றார்.

வட ஆற்காடு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் அப்போது மாவட்ட மாணவர் அமைப்பாளராக நியமிக்கப்பட்டேன்.

அப்போது சென்னையில் அ.தி.முக இயக்கத் துவக்க விழா. சட்டமன்றக் கல்லூரி மாணவர்கள் எல்லோரும் இணைந்து இரண்டு மூன்று நாட்கள் சென்னை முழுவதும் வால்போஸ்டர்களை ஒட்டினோம். .

அந்த மாநாட்டிலே 21 நண்பர்கள் பேசினார்கள். அதில் கடைசியாக வட ஆற்காடு மாவட்ட சார்பில் நான் பேசினேன். அப்போது  நான் பேச ஆரம்பித்த இரண்டு நிமிடத்திலேயே புரட்சித்தலைவரின் வாகனம் உள்ளே வந்துவிட்டது.

“புரட்சி தலைவர் வாழ்க… மக்கள் திலகம் வாழ்க” என்று மக்கள் கோஷமிட்டனர்.

அந்த மேடையிலே தான் ‘புரட்சி நடிகர்’ என்ற பெயரை மாற்றி  ‘புரட்சித் தலைவர்’ என்று கே.கிருஷ்ணசாமி அவர்கள் அறிவித்தார்கள. அன்று முதல் நாங்கள் புரட்சித் தலைவர் என்று தான் அழைக்க ஆரம்பித்தோம்.

அப்பொழுது நான் வடஆற்காடு மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டே இருப்பேன்.

சுற்றுப் பயணத்தை முடித்து ராமாபுரம் தோட்டத்திற்கு செல்ல இரவு 11 மணிக்குமேல் ஆகிவிடும்.

ஆனால் அந்த நேரத்தில்கூட உணவு கிடைக்கக்கூடிய ஒரே இடம் இராமவரம் தோட்டம்தான். இரவில் அங்கு உணவருந்திவிட்டு திரும்பி வந்து மறுநாள் காலையில் தலைவரைச் சந்திப்போம்.

நான் தோட்டத்திற்கு செல்லும்போதெல்லாம் அண்ணனையும் அண்ணியாரையும் சந்தித்துவிட்டு உணவருந்திய பின் தான் வருவேன். வீட்டிற்கு செல்லும்போதெல்லாம் அண்ணியார் என் படிப்புப் பற்றி விசாரிப்பார்கள்.

அரசியலைவிட, கல்விதான் முக்கியம் என எனக்கு அறிவுரை சொல்வார்கள். நான் அவரிடம், “படித்து கட்டாயம் பட்டம் வாங்குவேன்” என்று சொல்வேன்.

அந்த அளவிற்கு அண்ணி அவர்கள் பாசத்துடன் பழகி வந்தார்கள். அவர்கள் எப்போதும் என்னை ”தம்பி என்றுதான் உரிமையுடன் அழைப்பாளர்கள்.

80-களில் நான் ஆரணியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது எனக்கு திருமணம் நிச்சயம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. ஜானகி அம்மா தலைமையில் தான் திருமண நிச்சய நிகழ்ச்சிகள் எல்லாம் நடந்தன.

ஆரணியிலே புரட்சித்தலைவர் முதல்வர் தலைமையிலேயே திருமணம் நடக்க வேண்டும் என்று  அவரிடம் கேட்டோம். புரட்சித்தலைவரிடம் நான் மூன்று தேதிகளை எழுதிக் கொடுத்தேன்.

அப்போது அவருக்கு வேலை அதிகமாக இருந்ததால் தேதி குறித்து தர இயலவில்லை. அதன்பின் ஜானகி அம்மா எனக்காக தலைவரிடம் பேசினார். அப்போது ஆரணியில் மிகப்பெரிய மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த மாநாட்டில் தான் என்னுடைய திருமணம் நடந்தது. கோட்டையில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாவட்ட எல்லையில் இருந்து ஆரணி நகரம் முழுவதும் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு சுமார் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை மக்கள் கூட்டம் வெள்ளமாக திரண்டிருந்தனர்.

இளவரசர் சார்லஸ் திருமணத்தைப் பார்க்க மகாராஜா எம்.ஜி.ஆர். வருகிறார் என்றும், சார்லஸ் திருமணத்தைப் பார்க்காதவர்கள் ஏ.சி. சண்முகம் திருமணத்தை பார்த்தால் போதும் என்றும் பலரும் கூறினார்கள்.

அதே அளவிற்கு துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் என் திருமணத்தைப் பற்றி இரண்டு பக்கங்களில் துக்ளக்கில் எழுதினார்.

அப்போது தலைரை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் எல்லாம் செய்திருந்தோம். அப்போதுதான் தலைவர் முதன்முதலாக ”சத்துணவுத் திட்டம்” என்ற திட்டத்தை  எனது திருமண மேடையில் தான் அறிவித்தார்.

நான் அப்பொழுது எம்எல்ஏவாக இருந்தேன். இந்த நிகழ்ச்சியின்போது தலைவர் சுவாராஸ்யமான ஒரு செய்தியைச் சொன்னார்.

அதாவது, “சண்முகம் திருமணத்திற்கு நான் சற்று தேதி தள்ளி கொடுக்கலாம் என்று நினைத்திருந்தேன்.

ஆனால் அவர் எங்கள் வீட்டினுடைய செல்லப்பிள்ளை என்பதால், அவருடைய அண்ணியார் அவருக்காக பலமுறை என்னிடம் கேட்டுக் கொண்டதால், சண்முகம் கொடுத்த தேதியிலேயே திருமணம் நடத்த முடிவு செய்து வந்தேன்” என்னைத் தங்களது செல்லப்பிள்ளையாக பாவித்து பேசியது இன்றும் என் நினைவில் இருக்கிறது.

இப்படிதான் அம்மாவுடைய அரவணைப்போடு நான் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திலே வளர்ந்து வந்தேன்.

தலைவரிடம் திருமணத்திற்கு வரச் சொல்லி யார் அழைப்பிதழ் கொடுத்தாலும் பத்தாயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை அவர் கையில் என்ன இருக்கிறதோ அதை அப்படியே எடுத்துக் கொடுத்து விடுவார்.

பொதுவாக ஏழைகளுக்கு அதிகமாகக் கொடுக்கும் பழக்கம் கொண்டவர். திருமணத்திற்கு அவர் நேரில் வந்தால் கூட மணமகனுக்கு தனியாகவும், மணமகளுக்கு தனியாகவும் கவரில் பணம் வைத்துக் கொடுப்பார்.

தலைவர் கொடுத்திருந்தாலும், ஜானகி அம்மாவும் நகைகளாகவோ அல்லது பணமாகவோ  தனியாக மணமக்களுக்கு கொடுக்கும் பழக்கம் கொண்டிருந்தார்.

இப்படி தலைவரோடு போட்டி போட்டுக் கொண்டு கொடை உள்ளத்தோடு வாழ்ந்த தலைவி ஜானகி அம்மா அவர்கள்.

அது போன்று தலைவர் அவர்கள்  எட்டாவது வள்ளலாக வாழ்ந்ததற்கு அடித்தளமாக உடன் ஊக்குவிக்கின்ற வாய்ப்பை அம்மா அவர்கள் பெற்றிருந்தார்கள்.

எப்பொழுது தலைவர் என்ன நிதி அறிவித்தாலும், என்ன உதவி அறிவித்தாலும் அதில் அம்மாவின் பங்கும் இருக்கின்றது.

ஜானகி அம்மாவுடைய ஈகை உள்ளமும், பெருந்தன்மை வாய்ந்த குணமும், சாந்தமான முகமும் தலைவருடைய பிரச்சினைக்கு எல்லாம் பல்வேறு விதத்திலே ஆறுதல் தரக்கூடியதாக இருந்தது.

அப்படிப்பட்ட அம்மா அவர்கள் என்னுடைய குடும்ப நிகழ்ச்சிகளில் பலமுறை கலந்து கொண்டு ஆசீர்வதித்துச் சென்றிருக்கிறார்கள்.

என்னுடைய மைத்துனர் ரவிக்குமார் அவருடைய திருமணத்திற்கு  தலைவருடன் அம்மாவும் வந்தார்.

அதேபோல என்னுடைய தம்பி திருமணத்திலே கூட அவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

என்னுடைய இனிய நண்பர் ரவீந்திரனுடைய திருமணத்திற்கு அம்மாவை அழைத்து அவர்களுடைய தலைமையில் தான் திருமணத்தை நடத்தினேன்.

புரட்சித்தலைவருடைய இறுதி ஊர்வலத்தின்போது ஈமச்சடங்கு செய்த பொருட்களை நான் சுமந்து சென்றதை மிகப்பெரிய வாய்ப்பாக நான் கருதுகிறேன்.

ஒரு வளர்ப்பு பிள்ளையாகத்தான் நான் தலைவருக்கும் அம்மாவுக்கும் இருந்திருக்கிறேன்.

விடுதலைப் புலிகள் இயக்கம் சார்பாக நடத்தப்பட்ட பிரபாகரன் கூட்டத்தில் கூட எத்தனையோ அமைச்சர்கள் வெளியே இருந்தபோது கூட நான் அந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றிருக்கிறேன்.

அதேபோல டெல்லி செல்லும் போதெல்லாம் அம்மா அவர்கள் புரட்சித் தலைவரோடு வருவார்கள். அப்படி பல்வேறு நிகழ்ச்சிகளிலே அம்மா அவர்களோடு நாங்கள் கலந்து கொண்டிருக்கிறோம்.

1985-ல் ஒரு பாலிடெக்னிக் ஆரம்பித்தேன். அந்த கல்லூரிக்கு ‘தாய் மூகாம்பிகை’ பாலிடெக்னிக் என்று பெயர் சூட்டியவர் தலைவர்தான். ஆனால், தலைவர் மறைந்த பிறகு அம்மா அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றார்.

புரட்சித்தலைவர் மறைந்த பிறகு அவருடைய பெயரை முதன்முதலாக நாம் வைக்க வேண்டும் என்று தாய் முகாம்பிகை பொறியியல் கல்லூரிக்கான அரசாணையை மாற்றி, டாக்டர்.  எம்.ஜி.ஆர்.  பொறியியல் கல்லூரி என்ற பெயரை எனக்குக் கொடுத்தது ஜானகி அம்மா அவர்கள்தான்.

எம்.ஜி.ஆர். பொறியியல் கல்லூரி வளர்ந்து எம்ஜிஆர் பல்கலைக்கழகமாக மாறி 35 ஆண்டுகாலம் நடந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது ஜானகி அம்மாவால் தான் நடந்தேறியது.

தமிழகத்தில் முதன்முதலாக தலைவரின் பெயர் சூட்டி ஒரு நிறுவனம் நடத்திய பாக்கியமும் எனக்கு கிடைத்தது.

ஜானகி  எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வராக பொறுப்பேற்று டெல்லிக்கு விஜயம் செய்தார்கள். அப்போது நாங்களும் அவருடன் சென்றிருந்தோம்.

அம்மா அவர்கள் இந்தியில் நன்றாகப் பேசக்கூடியவர்கள். பிரதமர் ராஜீவ்காந்தியை சந்தித்து 20 நிமிடங்கள் பேசினார்.

அப்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒரு பிளவு இருந்தது.  அரசு வெற்றி பெற வேண்டுமானால், நம்பிக்கைத் தீர்மானம் வெற்றி பெற வேண்டுமானால் காங்கிரஸ் தயவு வேண்டும் அல்லது 36 சட்டமன்ற உறுப்பினர்களின் தயவு வேண்டும்.

அப்போது அம்மா எங்களிடம், “புரட்சித் தலைவர் இந்திரா காந்தி அம்மாவோடு மிகவும் நெருக்கமாக இருந்தவர். பல்வேறு கட்டங்களிலே கூட்டணியாக நாங்கள் இருந்திருக்கிறோம்.

நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டோம். உங்களுக்கு நிச்சயமாக உறுதுணையாக இருப்போம். இந்த ஆட்சி தொடரும்” என்று காங்கிரஸ் தலைமையில் இருப்பவர்கள் சொல்லி இருக்கிறார்கள் என்று கூறிய ஜானகி அம்மா நிம்மதியாக வந்தார்கள்.

ஆனால் நாங்கள் அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தோம். அப்போது அம்மாவிடம், “36 சட்டமன்ற உறுப்பினர்களும் உட்கார்ந்து பேசி நம்முடைய ஆட்சியைத் தக்கவைத்து கொள்வோம்” என்று சொன்னோம்.

அதற்கு அவர், “இல்லை… அவர்கள் நிச்சயமாக தைரியமாக அழுத்தம் திருத்தமாக பிரதமர் சொல்லி இருக்கிறார்கள். ஒரு பக்கம் நீங்களும் முயற்சி எடுங்கள். நம் ஆட்சி நிச்சயமாக தொடரும்” என்று அம்மா அவர்கள் முழு நம்பிக்கையோடு இருந்தார்கள்.

அன்று காலையிலே ஜானகி அம்மா தலைவருடைய சமாதிக்குச் சென்று பின்னர் சட்டமன்றத்திற்கு வருகிறார்கள்.

அப்போது கூட ஜானகி அம்மாவிடம் சொன்னோம், “மற்றவர்களின் பேச்சில் நம்பிக்கை இல்லை. ஏதோ பிரச்சினை நடந்து கொண்டிருக்கிறது” என்று சொன்னோம்.

ஆனால் உள்ளே நுழையும் போது கூட பிரதமர் ராஜீவ்காந்தியை நம்பி ஜானகி அம்மா உள்ளே சென்றார்கள். ஆனால் உள்ளே சென்ற பிறகுதான் அவர்கள் எதிர்த்து வாக்களித்தார்கள்.

வாக்குக் கொடுத்து அந்த வாக்கை தவறவிட்டவர் திரு. ராஜீவ் காந்தி. இது தமிழகத்திற்கு ராஜீவ்காந்தி செய்த மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதையடுத்து ஜானகி அம்மா ஆட்சியை ராஜினாமா செய்துவிட்டு அதன்பிறகு தேர்தலைச் சந்தித்தார்கள். அந்தத் தேர்தலில் வேட்பாளர்களை அறிவித்தார்கள். அந்தத் தேர்தலிலே நான் ஒரு வேட்பாளரை அவருக்கு அறிமுகம் செய்தேன்.

அப்போது ஸ்ரீரங்கம் வேட்பாளர் ராமச்சந்திரன் என்று அம்மாவிடம் சொன்னேன். உடனே அம்மாவின் முகம் மாறிவிட்டது. “என்ன ஐயா பெயரை இப்படி சொல்கிறீர்கள்” என்று கேட்டார்,

அப்போது நாங்கள், “இல்லை அம்மா எம்ஜிஆரை நாங்கள் தலைவர், புரட்சித்தலைவர், இதய தெய்வம் என்றுதான் அழைத்து பழக்கப்பட்டிருக்கிறோம். ராமச்சந்திரன் பெயர் அவருடையது என்பது எங்களால் உணர முடியவில்லை” என்று கூறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டோம்.

ஜானகி அம்மா எந்த மேடையிலும் தலைவரின் பெயரை ராமச்சந்திரன் என்று சொன்னதே கிடையாது. அவரின் பெயரை உச்சரிப்பதே ஒரு தவறான செயல் என்று வாழ்ந்தார்கள்.

அப்படிப்பட்ட ஒரு இலக்கணமாக வாழ்ந்தவர்கள் ஜானகி அம்மா. அந்த அளவிற்கு புரட்சித்தலைவரின் பெயரைக் கூடச் சொல்லாமல் ஒரு தெய்வத்தன்மையோடு வணங்கி வாழ்ந்தவர் ஜானகி அம்மா அவர்கள்.

ஆனால் இந்த மக்கள் அன்று அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் அப்போது இரண்டு கட்சியின் இரு பிரிவுகள தோற்றன. திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது. சில எம்.எல்.ஏ.க்கள் புரட்சித் தலைவி தலைமையில் வந்திருக்கலாம்.

ஜானகி அம்மா அவர்களைத் தேர்தல் முடிந்தவுடன் நாங்கள் மூன்று மணி நேரம் கலந்து பேசினோம்.  தொடர்ந்து அம்மாவே இந்த இயக்கத்தை  நடத்த வேண்டும் என்று எல்லோரும் சொன்னோம்

ஆனால் அம்மா அவர்கள் தீர்க்க தரிசனமாக அன்றைய தினம் ஒரு முடிவு எடுத்தார்கள். அது எங்களுக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது.

ஆனால் அம்மா அவர்கள் தெளிவாக எடுத்த முடிவு பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்தது.

அதாவது அம்மா எங்களிடம், “நாம் இரண்டு இயக்கங்களாக இரண்டு பட்டு இருந்ததால் தான் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தது. நாம் இரண்டு பட்டு இருந்தால், தலைவருடைய பெயர் இருக்காது. தலைவருடைய புகழ் இருக்காது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சீரழிந்துவிடும், சிதறிப் போய்விடும். ஆகவே தலைவருடைய புகழ் வேண்டும் என்று நினைக்கின்றவர்கள், தலைவருடைய ஆட்சி மீண்டும் வேண்டும் என்று நினைக்கின்றவர்கள், இதுதான் நல்ல முடிவு சிந்தித்துப் பாருங்கள்” என்று சொன்னார்கள்.

அப்போது எல்லோரும் அப்படியே அமைதியாக இருந்துவிட்டோம். “சரி அம்மா இந்த முடிவு நல்ல முடிவு தான். நாம் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்ற நிர்வாகிகளை இணைப்போம்” என்று சொன்னோம்.

அதற்கு அவர், “வேண்டாம் நாம் தலைவர் வழியிலே வந்தோம். பெருந்தன்மையாக இருப்போம். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்று படுகிறது. அதற்கு முழு ஆதரவு அளிக்கப்படுகிறது” என்று எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் அறிவித்தார்கள்.

இதேபோல் அவருடைய பெருந்தன்மைக்கு உதாரணமாக இன்னொன்றைச் சொல்லலாம். இன்று செயல்பட்டு கொண்டிருக்கும் அண்ணா திராவிட முன்னேற்ற தலைமைக் கழகம் ஜானகி  எம்.ஜி.ஆர். பெயரிலே இருந்தது.

அப்போது 1971-ல் சத்யா திருமண மண்டமாக இருந்தது. அந்த திருமண மண்டபத்தை கட்சி அலுவலகமாக மாற்றி இயக்கத்தை நடத்த முடிவு செய்து தலைவரிடம் வலியுறுத்தினோம்.

அப்போது ஜானகி  எம்.ஜி.ஆர். அவர்கள் தன் சொந்த பணத்தில் வாங்கிய அந்த இடத்தை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பெருந்தன்மையோடு தந்தார்.

ஆகவே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், இரட்டை இலை சின்னம் இன்றும் நிலைத்துக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு ஜானகி அம்மா அவர்கள் தான் காரணம்.

அன்றைக்கு ஜானகி அம்மா இயக்கத்தின் இணைப்பை பெருந்தன்மையோடு விட்டுக்கொடுக்காமல் இருந்திருந்தால் அதிமுக அணியே ஒரு கேள்விக்குறியாக மாறி இருந்திருக்கும்.

இந்த மிகப்பெரிய வாய்ப்பை இயக்கத்திற்குத் தந்தவர்கள் நம்முடைய ஜானகி  எம்.ஜி.ஆர். அவர்கள்.

அவரின் பெருந்தன்மையால்தான்  மீண்டும் இந்த புரட்சித் தலைவரின் கட்சி நன்றாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

புரட்சித்தலைவர் இன்னும் தெய்வமாக வாழ்ந்து கொண்டிருக்க ஜானகி அம்மாவின் பெருந்தன்மையும் ஒரு காரணம்.

ஜானகி அம்மா நினைத்திருந்தால் புரட்சித் தலைவரின் உடைமைகள் அனைத்தையும் எடுத்து வைத்திருக்க முடியும்.

ஆனால் எல்லா சொத்துக்களையும் காது கேளாதோர் பள்ளிக்கும், ஏழை மக்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் நன்கொடையாக வழங்க மூல காரணமாக இருந்தவர்கள் ஜானகி அம்மா அவர்கள்.

இப்படி ஜானகி அம்மா தலைவருக்கு உற்ற துணையாக வாழ்ந்ததோடு அவருக்குச் சமமான கொடை வள்ளல் தன்மையோடு இருந்தார்.

புரட்சித் தலைவருடைய புகழ் நிலைத்திருக்க ஜானகி அம்மா தலைவரின் இறுதிக்காலம் வரை துணை நின்றார்கள் என்பதுதான் வரலாறு.

நூறாண்டு காலமல்ல 200 ஆண்டு காலமல்ல எத்தனை நூறாண்டு காலங்கள் கடந்தாலும் ஜானகி எம்.ஜி.ஆருடைய புகழ் ஒளிர்ந்து கொண்டேதான் இருக்கும்.

அதற்கு உறுதுணையாக நாங்களும் தலைவர் மற்றும் ஜானகி அம்மாவின் புகழை போற்றுவதற்கு உறுதுணையாக இருப்போம். இந்த டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகமும் துணை நிற்கும்.

 அந்த இடத்தின் நிலம் வாங்க மூல காரணமாக இருந்தவர் அந்த இடத்தின் சொந்தக்காரரான ஜானகி எம்ஜிஆர் அவர்கள்.

ஜானகி எம்.ஜி.ஆர். அவர்கள் அதிமுக பொதுச் செயலாளராக இருந்தவர்தான். ஜானகி எம்.ஜி.ஆர். அவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே முதல் பெண் முதல்வர் என்ற பெயரைப் பெற்றவர். அதிமுகவை ஒன்றுபட்டு இணைத்த பெருமையும் அவரையே சாரும்.

ஆகவே, அவருக்கு ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுக அலுவலகத்தில் மூன்றாவதாக ஜானகி எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலையை வைக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்

அதேபோல் தமிழகத்தின் முதல் பெண் முதல்வராகவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பல மாநாடுகளுக்கு ஒத்துழைத்தவருமான ஜானகி எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகத்தில் ஒரு சிலையை வைத்து தர வேண்டும் என புதிய நீதி கட்சியின் சார்பிலும் முன்னாள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் நான் அன்போடு தமிழக முதல்வர் தளபதி அவர்களிடம் அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன்.

தமிழும் தமிழ் மக்களும் இருக்கின்ற வரை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் புகழும், ஜானகி எம்.ஜி.ஆர். அவர்களுடைய புகழும் நிலைத்து நிற்கும்.

வாழ்க தலைவரும் ஜானகி எம்.ஜி.ஆர். அவர்களும்.

– ஏ.சி.சண்முகம். தலைவர், புதிய நீதிக்கட்சி

அன்னை ஜானகி – 100

நூற்றாண்டுச் சிறப்பு மலர்

வெளியீடு: மெரினா புக்ஸ்

தரணி காம்ப்ளெக்ஸ்,
1A, திருநாத முதலி நகர்,
திருப்பத்தூர். – 635 601

  • அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டுச் சிறப்பு மலரைப் பெற கீழே உள்ள இணைப்பைத் தொடுக…

https://marinabooks.com/detailed?id=1499-0326-2509-9479

Comments (0)
Add Comment