வெண்ணை திரளும் வேளையில் உடையும் ‘கூட்டணி பானை’!

இந்திய அரசியல் வானிலை ‘சட்டென்று’ ஒரே நாளில் மாறி, எதிர்க்கட்சி தலைவர்களை திணறடித்து திக்குமுக்காட வைத்துள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று, ஆட்சி அமைத்ததும், பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று திரண்டு விட்டதாக பிரமாண்ட பிம்பம் கட்டமைக்கப்பட்டது.

அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

ஜென்ம விரோதியாக காங்கிரஸ் மீது இதுவரை வன்மம் காட்டி வந்த மேற்குவங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, ’’காங்கிரஸ் பலமாக உள்ள மாநிலங்களில், அந்த கட்சிக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும்’’ என்றார்.

மம்தா கருத்துக்கு சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆதரவு கரம் நீட்டினார். இவரும், மம்தா போன்று காங்கிரசின் பரம பகைவர்.

துணை முதலமைச்சர் தேஜஸ்வியிடம், மாநிலத்தை நிர்வாகம் செய்யும் முழு பொறுப்பையும் ஒப்படைத்து விட்டு, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க நாடு தழுவிய ’’நகர் வலம்’’ புறப்பட்டுள்ள பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு, பேரானந்தம்.

புழு எதுவும் வைக்காத தூண்டிலிலேயே மம்தாவும், அகிலேஷும் மாட்டிக் கொண்டதில் அவருக்கு அளவில்லா மகிழ்ச்சி.

அந்த இரு மாநிலங்களில் உள்ள மொத்த எம்.பி.க்கள் எண்ணிக்கை 122.
இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம் ஆகிய 6 மாநிலங்களில் உள்ள எம்.பி.க்கள் எண்ணிக்கைக்கு சமம்.

இரண்டு திமிங்கலங்கள் மாட்டியதையடுத்து உற்சாகமடைந்த நிதிஷ், தனது மாநில தலைநகர் பாட்னாவில் பிரதான எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இந்தக்கூட்டத்தில் காங்கிரசுடன் தி.மு.க., திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட பிராந்திய கட்சிகள் கலந்து கொள்ள இருந்தன.
இந்த நிலையில் தான் வெண்ணை திரண்டு வரும்போது தாழி உடைந்த கதை நிகழ்ந்துள்ளது.

தனது பிரதமர் கனவை நனவாக்கும் முயற்சியில், எதிர்க்கட்சிகளை ஓரணியில் நிதிஷ்குமார் திரட்டிட திட்டம் தீட்டிய அதே நாளில் அவரது தலையில் இரண்டு சம்மட்டி அடிகள் விழுந்துள்ளன.

என்ன அடி?

டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிகாரத்தை குறைத்து, ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் அவசரச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் எதிர்க்கும் படி, ஒவ்வொரு மாநில கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார், கெஜ்ரிவால்.
காங்கிரஸ் தலைவர் கார்கேயை சந்திக்க நேரம் கேட்டிருந்தார் கெஜ்ரிவால்.

ஆனால் பஞ்சாப் மற்றும் டெல்லியை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள், ”ஒரு போதும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு கரம் நீட்டகூடாது’’ என போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

ஏன்?

அந்த இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஓட்டுக்களை தின்றவர் கெஜ்ரிவால். அவரால் தான் பஞ்சாபில் காங்கிரஸ் தோற்றது. டெல்லியில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்த கோபமும், ஆத்திரமும் இரு மாநில காங்கிரசாரிடம் நீரு பூத்த நெருப்பாக உள்ளது.

இதனால் கெஜ்ரிவாலை சந்திக்க கார்கே நேரம் ஒதுக்கவில்லை.
“ஆம் ஆத்மியிடம் ஒட்டும் வேண்டாம்..உறவும் வேண்டாம்’’ என்பது இரு மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கருத்தாக உள்ளதால், நிதிஷ்குமாரின் ஒருங்கிணைப்பு முயற்சியில் பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இன்னொரு அடி என்ன?

மே.வங்க மாநிலத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றிபெறவில்லை. அதாவது. பூஜ்யம்.

இந்நிலையில் அந்த மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் சாகர் திகிக் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பைரோன் விஸ்வாஸ் வெற்றி பெற்றார்.

சட்டசபையில் காங்கிரசின் ஒரே எம்.எல்.ஏ.வாக இவர் இருந்து வந்தார்.
அவரை இரு தினங்களுக்கு முன்பு, திரினாமூல் காங்கிரசில் இணைத்துக் கொண்டார் மம்தா.

“நான், எனது சொந்த செல்வாக்கால் ஜெயித்தேன். மக்களுக்கு நன்மை செய்ய திரினாமூல் கட்சியில் சேர்ந்துள்ளேன்’’ என விஸ்வாஸ் பேட்டி வேறு கொடுத்து விட்டார்.

இதனால் மம்தா மீது மேற்குவங்க காங்கிரசார், ஆவேசமும் ஆத்திரமும் அடைந்துள்ளனர்.

“மம்தாவுடன், ஜென்மத்துக்கும் கூட்டணி வைக்கக்கூடாது’’ என்பது அங்குள்ள காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடாக உள்ளது.

கெஜ்ரிவாலும், மம்தாவும் தங்கள் அணியில் இணைய, மூன்று மாநில காங்கிரசார், போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், நிதிஷ்குமாரோ, ‘முதல் கோணல் முற்றும் கோணலாக போய்விடுமோ? என, கன்னத்தில் கைவைத்து கவலையில் ஆழ்ந்துள்ளார்.

– பி.எம்.எம்.

Comments (0)
Add Comment