பொருளாதாரத் துறையில் ஜனதா கட்சி சர்க்கார் இன்று மிகவும் துணிச்சலான நடவடிக்கையொன்றை எடுத்தது.
ஆயிரம் ரூபாய், ஐயாயிரம் ரூபாய், பத்தாயிரம் ரூபாய் கரன்ஸி நோட்டுகள் செல்லாது என்றும், இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் சர்க்கார் அறிவித்தது.
தேசியப் பொருளாதாரத்துக்கு பாதகமான பேரங்களுக்கு நிதி வசதியளிக்க கள்ளத்தனமான முறையில் மாற்ற இந்த உயர்ந்த மதிப்புள்ள கரன்சி நோட்டுகள் உதவுகின்றன என்று கருதப்படுகிறது.
எனவே இத் துணிச்சலான நடவடிக்கையை சர்க்கார் எடுத்தது.
இதற்கான அவசர சட்டத்தை ராஷ்டிரபதி இன்றிரவு பிறப்பித்தார்.
அவசர சட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது.
மிகவும் ரகசியமாக நடந்த மத்திய மந்திரி சபைக் கூட்டத்துக்குப் பின்னர் ராஷ்டிரபதி சஞ்சீவ ரெட்டி அவசர சட்டத்தை பிறப்பித்தார்.
ஆயிரம் ரூபாய், 5 ஆயிரம் ரூபாய், 10ஆயிரம் ரூபாய் கரன்சி நோட்டுகள் இன்றிலிருந்து எங்கும் செல்லாது. நாளை (ஜனவரி 17) பாங்குகள் அனைத்துக்கும், சர்க்கார் கஜானாக்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
1978 ஜனவரி 16ல் அலுவல் முடியும்போது தங்கள் வசமிருந்த இந்த உயர் மதிப்பு கரன்சி நோட்டுகளின் மொத்த மதிப்பைக் காட்டும் ரிட்டர்ன்களை (கணக்கு விவரம்) நாளை பிற்பகல் 3 மணிக்குள் தயாரித்து ரிசர்வ் பாங்குக்கு அனுப்ப இயலும் பொருட்டு பாங்குகளனைத்துக்கும், சர்க்கார் கஜானாக்களுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பாங்குகள், கஜானாக்கள் அல்லாமல் இந்த உயர் மதிப்பு கரன்சி நோட்டுகளை வைத்திருக்கும் இதர நபர்கள் குறிப்பிட்ட ரிசர்வ் பாங்கு அலுவலகங்களில் அல்லது ஸ்டேட் பாங்கு கிளைகளில், ரிசர்வ் பாங்கு அறிவிக்கும் இதர அரசுடமை பாங்குகளில் ஜனவரி 18, 19 தேதிகளில் இந்த உயர் மதிப்பு கரன்சி நோட்டுகளை அளித்து மாற்றிக் கொள்ளலாம்.
கரன்சி நோட்டுகளை மாற்றிக் கொள்ள விரும்பும் இத்தகைய நபர்கள், இவை எங்கிருந்து கிடைத்தது.
எப்போது கிடைத்தது, கிடைத்த விதம் ஆகிய விவரங்களை தெரிவிக்க வேண்டும். பொய்யான விவரங்களை தெரிவிப்போருக்கு 3 வருடம் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
6 வருட கோரிக்கை
உயர் மதிப்புள்ள கரன்சி நோட்டுகளை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என பார்லி மெண்டில் கடந்த 6 வருடங்களாகக் கோரப்பட்டு வந்திருக்கிறது.
நேர்முக வரிகள் விசாரணை கமிட்டி (வாஞ்சூ கமிட்டி)
1970-71ல் ரகசிய அறிக்கையொன்றில் வரி ஏய்ப்பு தடுப்பு நடவடிக்கையாக குறைந்த மதிப்புள்ள கரன்சி நோட்டுகளை கூட செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்திருந்தது.
முந்தைய சர்க்கார் இக்கருத்தை ஏற்கவில்லை.
10 தினங்களுக்கு முன் நிதி மந்திரி எச்.எம். படேல் தமது அமைச்சகத்துடன் இணைந்த எம்.பி.க்கள் ஆலோசனை கமிட்டி கூட்டத்தில் பேசுகையில் இத்தகைய பிரேரணை எதுவும் தற்போது பரிசீலனையில் இல்லை என்று தெரிவித்தார்.
ஆனால் அவர் இதனை திட்டவட்டமாக நிராகரிக்கவில்லை.
சொத்துக்கள் உருவிலோ அல்லது பாங்கி டிபா சிட்டுகளாகவோ வைத்திருக்கும் கணக்கில் வராத வருமானத்தைக் கண்டறிவதில் இந்நடவடிக்கை உதவாது என்றும்.
கணக்கில் வராத வருமானத்திலும், செல்வத்திலும் ஒரு பகுதி தான் ரொக்கமாக இருக்கும் என்று நம்பப்படுவதாகவும் இதுவரை சர்க்கார் கூறி வந்தது.
எனினும் கருப்புப் பணத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தயக்கம் இராதிருக்கும் பொருட்டு, சர்க்கார் இன்று இத்திடீர் நடவடிக்கையை எடுத்தது.
உயர் மதிப்பு நோட்டுகளை மாற்றிக் கொள்ள 1978 ஜனவரி 19-க்குள் விண்ணப்பிக்கத் தவறும் நபர் 1978 ஜனவரி 24-க்குள் ரிசர்வ் பாங்குக்கு தேவையான விவரத்தையும், கரன்சி நோட்டுகளையும் அனுப்பலாம்.
அவற்றுடன் தாமதத்துக்கான காரணங்களை விளக்கி அறிக்கையொன்றையும். தாக்கல் செய்ய வேண்டும்.
காரணங்கள் உண்மையானவை என்ற திருப்தி ரிசர்வ் பாங்குக்கு ஏற்பட்டால் கரன்சி நோட்டுகளை நிர்ணயிக்கப்பட்ட முறையில் மாற்றித் தரலாம்.
நன்றி: தினமணி வைரவிழா மலர் 1994