வீராங்கனைகள் விவகாரத்தில் யாருக்கு அவமானம்?

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து மல்யுத்த வீராங்கனைகள் போராடி வருகின்றனர்.

புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவின்போது நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர். தடையை மீறி பேரணியாக சென்ற அவர்களை காவல்துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

இந்நிலையில் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வாக மல்யுத்த வீரர்கள் நாட்டிற்காக வென்றெடுத்த பதக்கங்களை ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசப்போவதாக கூறினார்கள்.

அத்துடன் இந்தியா கேட்டில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் எனவும் கூறினர். அதன்படி, போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள் நேற்று மாலை பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசுவதற்காக உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் வந்து சேர்ந்தனர்.

சாக்சி மாலிக், வினேக் போகத், பஜ்ரங் புனியா மற்றும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் ஏராளமான வீரர், வீராங்கனைகள் அங்கு வந்து சேர்ந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

அப்போது அங்கு வந்த விவசாய சங்கத் தலைவர் நரேஷ் திகாயித், பதக்கங்களை ஆற்றில் வீச வேண்டாம் என்றும், நடவடிக்கை எடுப்பதற்காக இறுதி அவகாசம் கொடுக்கலாம் என்றும் கூறினார்.

இதனால் கடைசி நேரத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மனம் மாறி போராட்டத்தை கைவிட்டனர். 5 நாட்களுக்குள் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் ஹரித்வார் வந்து பதக்கங்களை கங்கை நதியில் வீச உள்ளதாக வீராங்கனைகள் எச்சரித்துள்ளனர்.

Comments (0)
Add Comment