தீராக் காதல் – இனிக்கும் தருணங்கள்!

திகட்டத் திகட்டக் காதலைக் கொட்டும் திரைப்படங்கள் இப்போது ரொம்பவே அரிது.

புதுமுக நாயகர்கள் கூட ஆக்‌ஷன், த்ரில்லர், பொலிடிகல், ஃபேண்டஸி வகைமை திரைப்படங்களுக்குத் தாவி வரும் சூழலில் முழுக்க ரொமான்ஸ் படமொன்றில் நடிக்க யார் தான் தயாராக இருப்பார்கள்? போலவே, ஒரு திரையரங்கில் காதல் படம் ஓடினால் அதனை முழுதாகப் பார்த்துத் தீர்க்க எத்தனை ரசிகர்கள் வருவார்கள்?

இது போன்ற கேள்விகளுக்கு நடுவே, ‘நாங்க வந்துட்டோம்ல’ என்று காலரை தூக்கி விட்டுக்கொண்டு நுழைந்திருக்கிறது ‘தீராக் காதல்’ குழு. இப்படத்தில் நிறைந்திருக்கும் காதல் நம் மனதில் நினைவலைகளை எழுப்புகிறதா அல்லது திரையரங்கை விட்டே நம்மை துரத்தியடிக்கிறதா?

காதல் தீருமா?

ஒரு ஆண் / பெண் வாழ்க்கையில் ஒருமுறை தான் காதல் வருமா? கண்ணதாசன் எப்போதோ பதிலைச் சொன்னபிறகும், இன்றும் அந்த கேள்வியை எழுப்புவது குறைந்தபாடில்லை.

அதனை ஒரு ஆண், அவரது மனைவி, முன்னாள் காதலி என்று மூன்று பாத்திரங்களைக் கொண்டு கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரோகின் வெங்கடேசன்.

கௌதமும் (ஜெய்) வந்தனாவும் (சிவதா) ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்ட தம்பதி. இவர்களுக்கு ஆர்த்தி (விருத்தி விஷால்) என்றொரு மகள்.

ஒருமுறை மங்களூருக்கு வேலை விஷயமாகச் செல்கிறார் கௌதம். ரயில் பயணத்தின் இடையே, தன் முன்னாள் காதலி ஆரண்யாவைச் (ஐஸ்வர்யா ராஜேஷ்) சந்திக்கிறார்.

கல்லூரிக் காலத்தில் வளர்ந்த இவர்களது காதல், ஆரண்யா பெற்றோரின் பிடிவாதத்தால் சுக்குநூறாக உடைந்தது பழைய கதை. அந்த நேரத்தில், ஆரண்யாவும் தனது குடும்பத்தின் கட்டுப்பாட்டை மீறி கௌதமுடன் செல்லத் தயாராக இல்லை.

நடந்ததை மறந்துவிட்டு, வெகு இயல்பாக ஆரண்யாவை எதிர்கொள்கிறார் கௌதம். ஆனால், ஆரண்யாவோ ரொம்பவே பதற்றமாகிறார். காரணம், கணவர் பிரகாஷ் (அம்ஜத் கான்) உடனான அவரது மண வாழ்வு சுகமானதாக இல்லை.

ஆரண்யாவைச் சந்தித்த பூரிப்பில் இருக்கும் கௌதம், மங்களூரில் இருக்கும் நாட்களில் அவரைத் தொடர்ந்து சந்திக்கிறார்; இருவரும் மனம் விட்டுப் பேசுகின்றனர்; தங்களது வாழ்வில் நடந்தவற்றைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

மங்களூரில் பணியை முடித்துவிட்டு மீண்டும் சென்னைக்குத் திரும்பும்போது, மீண்டும் பேசவே கூடாது என்ற உறுதியுடன் இருவரும் பிரிகின்றனர்.

முன்னாள் காதலர்கள் முடிவெடுத்தாலும், விதி அவர்களை விடுவதாக இல்லை.

ஒருநாள் பிரகாஷ் உடனான மோதல் உச்சகட்டத்தை அடைய, அவரை விட்டு விலகி வெளியே வருகிறார் ஆரண்யா. பெற்றோரிடம் செல்லாமல் தனியாக வாழத் தீர்மானிக்கிறார்.

அப்போது, அவரது மனக்கண்ணில் ஆறுதலான நபராகத் தென்படுவது கௌதம் மட்டுமே. ஆனால் தனது மனைவி, மகள் உடன் ஒரு கூட்டுப்பறவை போல வாழ்ந்துவரும் கௌதமினால் ஆரண்யாவின் நெருக்கத்தைச் சமாளிக்க முடியவில்லை; அவருக்கு ஆறுதல் அளிக்கவும் இயலவில்லை.

கௌதமின் விலகல் ஆரண்யாவை இன்னும் காயப்படுத்துகிறது. அதன் விளைவாக, கௌதம் இருக்கும் அபார்ட்மெண்டுக்கே குடி வருகிறார் ஆரண்யா.

கௌதமின் மகள், மனைவியிடமும் அறிமுகமாகிறார். அது மட்டுமல்லாமல், ‘அவர்களை விட்டுவிட்டு என்னோடு வாழ வா’ என்று கௌதமுக்கு அழைப்பு விடுக்கிறார்.

கௌதம் என்ன முடிவெடுத்தார்? வந்தனாவுக்கு உண்மை தெரிந்ததா? முடிவில் கௌதம் – ஆரண்யா காதல் என்னவானது? என்று சொல்கிறது ‘தீராக்காதல்’.

காதலர்கள் பிரிந்தாலும் காதல் தீருமா என்ற கேள்வியை எழுப்புகிறது இப்படம்.

அசத்தும் மூவர்!

மொத்தப் படமும் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதாவைச் சுற்றியே நகர்கிறது. அதற்கேற்ப, தங்களது பாத்திரத்தின் முக்கியத்துவம் உணர்ந்து மூவரும் அசத்தல் நடிப்பைத் தந்திருக்கின்றனர்.

ஒரே நேரத்தில் இரு பெண்களிடம் மாட்டிக்கொண்டு விழிக்கும் வேடத்தை இதற்கு முன்னும் ஓரிரு படைப்புகளில் ஜெய் தாங்கியிருக்கிறார்.

என்றாலும், இதில் அவரது பாத்திர வார்ப்பு ‘ஜெண்டில்மேன்’ வகையறாவில் அமைந்துள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் இடங்களில் மனிதர் அசத்தியிருக்கிறார்.

ஷிவதாவுக்கு இதில் ‘அண்டர்பிளே’ செய்யும் வேடம். தான் சொல்லாமலேயே கணவர் உதவி செய்வதை உணருமிடங்களில் சின்னச் சின்ன பார்வைகளில் மனதில் உள்ளதை வெளிப்படுத்தி நம் கவனத்தை அள்ளிக்கொள்கிறார்.

அதேநேரத்தில், கணவருக்கு வேறொரு பெண்ணுடன் நட்பிருப்பதைக் கண்டு கண்ணீர் சிந்தாமல் இருக்கும் வகையிலான பாத்திரத்தை ஏற்றதற்குப் பாராட்டுகள்!

நியாயமாகப் பார்த்தால், ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்ற பாத்திரத்தைக் கண்டு ரசிகர்கள் கொதிப்படைய வேண்டும். ஆனால், படத்தில் அவர் வரும் காட்சிகள் இரக்கம் கொள்ளும் வகையில் உள்ளன.

இன்று, பல சீரியல்களில் அது போன்ற பாத்திரங்கள் வில்லிகளாக காட்டப்படுகின்றன. ஆனால், கயிறு மேல் நடப்பது போல வெகுலாவகமாக அப்பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா.

இடைவேளைக்குப் பிறகு ஜெய்யை அவர் அணுகும் காட்சிகள் அனைத்தும் ‘அல்வா’ சாப்பிடுவது போல நடிப்பை வெளிப்படுத்த ஏதுவாக உள்ளன.

இந்த மூவர் கூட்டணியைத் தவிர்த்துப் பார்த்தால், விருத்தி விஷால் நடிப்பு துருதுருவென்றிருக்கும் குழந்தையைப் பார்த்த அனுபவத்தைத் தருகிறது.

ஜெய்யின் அலுவலக நண்பராக வரும் அப்துல் லீயைப் பொறுத்தவரை, ‘இரும்புத்திரை’க்குப் பிறகு கிடைத்த பெரிய வாய்ப்பு.

அதனைச் சரியாகப் பயன்படுத்தி சதீஷ், சூரி, சந்தானம் போன்றவர்கள் நாயகர்களாகிச் சென்றபிறகு ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பியிருக்கிறார்.

அம்ஜத் கான் ஏற்ற பிரகாஷ் பாத்திரத்தின் பின்னணி விவரிக்கப்படாதது ஒரு குறை. ஆனால், அவர் வந்துபோகும் காட்சிகள் ஐஸ்வர்யாவின் பாத்திரம் மீது இரக்கம் கொள்ள வைக்கின்றன.

மாரிமுத்து, ஸ்ரீஜா உட்படச் சில கலைஞர்கள் ஓரிரு இடங்களில் மட்டுமே தலைகாட்டியிருக்கின்றனர்.

ஒரு விளம்பரப் படம் பார்ப்பது போல பளிச்சென்று ஒவ்வொரு பிரேமையும் அமைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் நீலமேகம்.

படத்தில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் அழகாகத் தெரிய மெனக்கெட்டிருக்கிறார். ராமு தங்கராஜின் கலை வடிவமைப்பு காட்சிகளுக்கு அழகூட்ட உதவியிருக்கிறது.

‘த்ரில்’ ஊட்டும் வாய்ப்புகள் இருந்தும், காதலுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து காட்சிகளை அடுக்கியிருப்பது, கதையின் மையத்தில் இருந்து விலகக்கூடாது என்ற படத்தொகுப்பாளர் பிரசன்னாவின் அக்கறையைக் காட்டுகிறது.

ஒரு நீரோடை நகர்வதைப் போல காட்சிகளைக் கோர்த்திருக்கிறது; அருவியின் ஆர்ப்பரிப்பு போல காட்சியனுபவம் இருக்க வேண்டாமா என்று கேட்பவர்களின் கருத்துகளைப் புறந்தள்ளியிருக்கிறது.

சித்து குமாரின் பின்னணி இசையானது, காட்சிகளின் பின்னே காதலை இழைய விட்டிருக்கிறது.

உசுரான்கூட்டில், நீ சொல்லாட்டி, ஒத்தையாக நிக்குறேனே பாடல்களில் காதல் திகட்டத் திகட்ட நிறைந்திருக்கிறது.

வாலு பார்ட்டி பாடல்கள் குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும்.

ஜி.ஆர்.சுரேந்திரநாத், இயக்குனர் ரோகின் வெங்கடேசன் கூட்டணியின் கதை, வசனம் ஒரு நேர்த்தியான படைப்பைத் திரையில் காணும் அனுபவத்தைத் தருகிறது.

‘ஒரு காதலி எப்போதும் காதலியாகத்தான் இருப்பா’, ‘சேர்ந்து வாழ வேண்டியவங்களை எல்லாம் பிரிச்சு வைக்குறாங்க, பிரிஞ்சு வாழ வேண்டியவங்களை சேர்த்து வைக்குறாங்க’, ’எனக்கு உங்கிட்ட பர்ஸ்ட்டு மாதிரி இருக்கணும்’ என்பது போன்ற வசனங்கள் நம்மைத் திரைக்கு வெகு அருகில் இழுத்துச் செல்கின்றன.

இதற்கு முன்னர் த்ரில்லர், ஹாரர் வகையில் அமைந்த அதேகண்கள், பெட்ரோமாக்ஸ் படங்களை இயக்கியிருக்கிறார் ரோகின் வெங்கடேசன். அவற்றில் இருந்து விலகி, இதில் முற்றிலுமாக ஒரு காதல் படத்தைத் தந்திருக்கிறார்.

என்னதான் விதவிதமாகக் கதையையும் களங்களையும் பிடித்தாலும் ரொமான்ஸ், செண்டிமெண்ட் காட்சிகளை நேர்த்தியாகக் கையாள்வது அவருக்குக் கைவருவதை ஒப்புக்கொண்டே தீர வேண்டும்.

யாருக்குப் பிடிக்கும்?

இன்றைய தேதியில் காதல் படங்களைப் பார்க்க காதலர்களே திரையரங்குகளுக்கு வரும் நிலைமை உள்ளது. அவர்களில் பலர் படம் பார்க்காமல் தங்களது ஊடல் கூடல்களில் கவனம் செலுத்துவதையும் நாம் கடந்து வந்தாக வேண்டும்.

அப்படியொரு நிலைமைக்கு ஆளாகாமல், ரொம்பவே பக்குவமானதொரு காதல் கதையைத் தந்திருக்கிறார் ரோகின் வெங்கடேசன். ‘தீராக் காதல்’ படத்தின் பலமும் பலவீனமும் அதுவே.

படத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷின் பெற்றோர் பற்றியோ, உறவினர்கள் பற்றியோ பெரிய விவரணைகள் இல்லை. இருவரையும் சேர்ந்தாற்போலப் பார்க்கிற வில்லன்கள் எவரும் கதையில் கிடையாது.

’மரித்துப் போன காதலொன்று மீண்டும் உயிர்த்தெழுந்தது’ என்ற ஒற்றைவரியின் பின்னே செல்லும் திரைக்கதை, அது நியாயம்தானா இல்லையா என்ற கேள்வியை எழுப்புவதோடு நின்றுகொள்கிறது. அது போதும் என்பவர்களுக்கு இப்படம் பிடிக்கும்.

ஏதோ ஒரு அபார்ட்மெண்டில் வசித்துக்கொண்டு, ஏதோ ஒரு காரில் பயணித்துக்கொண்டு, எங்கேயோ வேலை பார்த்து கைநிறைய சம்பாதிக்கும் சில மேட்டுக்குடி மக்களின் வாழ்க்கையும், அதில் நிறைந்திருக்கும் காதலும் எங்களுக்கு எதற்கு என்று கேட்கும் சாதாரண மக்களுக்கு இப்படம் பிடிக்காது.

உண்மையைச் சொன்னால், அது போன்ற எதிர்க்கணைகளை எல்லாம் பொருட்படுத்தாத காரணத்தால் தான் ‘தீராக்காதல்’ தீர்ந்துபோகாமல் திரையில் நிறைகிறது. இனிக்கும் தருணங்களைப் பார்வையாளர்கள் மனதில் நிழலாடச் செய்கிறது.

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment