கடந்த 19-ம் தேதி போலி பாஸ்போர்ட் பயன்படுத்தியது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த முகமது ஷேக் இலியாஸ் என்பவரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கைதான இலியாஸ் அளித்த தகவலின் பேரில் ராயபுரத்தைச் சேர்ந்த முகமதுபுகாரி, தண்டையார் பேட்டையைச் சேர்ந்த சிவக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து போலி பாஸ்போர்ட் தயாரிக்க பயன்படும் கணினி, பிரிண்டர், பாஸ்போர்ட் அச்சடிக்கும் இயந்திரம், போலி ரப்பர் ஸ்டாம்ப், போலி விசா உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில் இந்த கும்பல் பாஸ்போர்ட் வாங்கித் தரும் ஏஜென்டுகளிடம் இருந்து பழைய பாஸ்போர்ட் மற்றும் விசா பேப்பர்களை வாங்கி அதில் உள்ள பக்க தாள்களைப் பிரித்து எடுத்துவிட்டு அதில் போலி ஆவணங்களை ஒட்டி இந்தியா மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களிடம் பணத்தைப் பெற்று கொண்டு போலி பாஸ்போர்ட் மற்றும் விசா தயாரித்து கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கும்பல் கடந்த நான்கு வருடமாக போலி பாஸ்போர்ட், விசாக்கள் தயாரித்து வந்ததும், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட்டுகள் தயாரித்து கொடுக்கப்பட்டதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.