கழுவேற்றுதல், மூர்க்கன் என்ற இரு வார்த்தைகளையும் கேட்டவுடன், அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவே நமக்குத் தோன்றும்.
ஏனென்றால், பழங்காலத்தில் குற்றவாளிகளாகக் கருதப்பட்டவர்களைக் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட வழக்கம் அது.
அதன் பின்னிருந்தவர்கள் கொடூர மனம் படைத்தவர்களாகவே வரலாற்றில் குறிப்பிடப்படுகின்றனர்.
அப்படிப்பட்ட வார்த்தைகளைத் தாங்கிய ஒரு படத்தின் கதை சாதீய வேறுபாடுகளைப் பற்றிப் பேசுவதாக அமைந்தால் எப்படியிருக்கும்? நிச்சயம் சர்ச்சைகளுக்குத் தீனி போடும்.
அருள்நிதி, சந்தோஷ் பிரதாப், துஷாரா விஜயன், ராஜசிம்மன், யார் கண்ணன், முனீஸ்காந்த், சரத் லோகித்சவா உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘கழுவேத்தி மூர்க்கன்’ படம் சர்ச்சைக்குரிய படைப்பாக அமைந்திருக்கிறதா அல்லது அதற்கு நேரெதிரான திசையில் பார்வையாளர்களை இழுத்துச் செல்கிறதா?
எனதுயிர் நண்பனே..!
பள்ளி முடிந்ததும், அந்த சிறுவனைப் பின்தொடர்ந்து வருகிறார் இன்னொரு மாணவன். அவர்கள் வரும் பாதையில் எதிரே ஒரு மாடு வருகிறது. ஒரு சிறுவனை முட்டிச் சாய்க்கிறது.
உடனே, இன்னொரு சிறுவன் அவனைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறான். அங்கிருப்பவர்களை அழைக்கிறான். சிறிது நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவன் உயிர் பிழைக்கிறான்.
ஆனால், அவனது தந்தையோ உயிரைக் காப்பாற்றிய மாணவனை ஏளனமாகப் பார்த்துவிட்டு பத்து ரூபாய் தாளை நீட்டுகிறார். அதுவே, இரு சிறுவர்களும் வெவ்வேறு சாதியப் பின்புலத்தைச் சார்ந்தவர்கள் என்பதை நமக்குக் காட்டுகிறது.
மாடு முட்டிய மாணவரின் பெயர் மூர்க்கசாமி; அவரைக் காப்பாற்றியவரின் பெயர் பூமிநாதன். ஆண்டுகள் உருண்டோடுகின்றன. அந்த இரு சிறுவர்களும் வளர்ந்து பெரியவர்கள் ஆகின்றனர். உயிருக்குயிரான நண்பர்களாக ஆகின்றனர்.
ஒடுக்கப்பட்ட சாதியினராக அடையாளம் காணப்படுவதைத் தீவிரமாக எதிர்ப்பதைத் தன் பணியாகக் கொள்கிறார் பூமிநாதன்.
தன்னைப் போல கஷ்டப்படும் இளைய தலைமுறைக்குத் தோள் கொடுத்து உதவுகிறார். அவருக்கு எவ்விதத் தீங்கும் நேராமல் அரண் ஆக இருக்கிறார் மூர்க்கசாமி.
இருவரது நட்பு சாதீய சக்திகளுக்கு எரிச்சலூட்டுகிறது. அவர்களில் ஒருவராக மூர்க்கசாமியின் தந்தையும் இருக்கிறார். இருவரையும் பிரிக்கத் தகுந்த நேரம் பார்த்துக் காத்திருக்கிறார்.
இந்த நிலையில், ஒரு பெரிய கட்சியின் மாவட்டச் செயலாளர் ஒருவர் தனது பதவியை இழக்க பூமிநாதன் காரணமாகிறார். அதற்குப் பலி வாங்க, தான் உதவி செய்வதாகக் கூறுகிறார் மூர்க்கசாமியின் தந்தை.
அதன் தொடர்ச்சியாக, பூமிநாதன் கொல்லப்படுகிறார்; அவரைக் கொன்றதாக, மூர்க்கசாமியின் மீது பழி விழுகிறது.
அதன்பிறகு என்னவானது? உண்மையாகவே பூமிநாதனைக் கொன்றது யார்? அவர்களுக்குச் சட்டத்தின்படி தண்டனை கிடைத்ததா என்று சொல்கிறது ‘கழுவேத்தி மூர்க்கன்’.
பல திரைப்படங்களில் நாயகனும் அவரது நண்பராக வருபவரும் தோளோடு தோள் சேர்ந்து திரிவார்களே, அப்படிப்பட்டவர்களாக இதில் வரும் பூமிநாதனும் மூர்க்கசாமியும் இருக்கின்றனர்.
‘நண்பனே எனதுயிர் நண்பனே’ என்று பாடாத குறையாக இவர்களது நட்பு படத்தில் காட்டப்பட்டுள்ளது.
அசத்தும் அருள்நிதி!
கிடா மீசை, முரட்டுத்தனமான நடை, அலட்சியமான பாவனை என்று படம் முழுக்க வேறொரு நபராகவே தென்படுகிறார் அருள்நிதி.
ஆக்ஷன் காட்சிகளில் அசத்தும் நோக்கோடு மிகத்தெளிவாகத் தனது பாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பது அவரது புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது.
தமிழ் திரையுலகில் விஷால் போன்று அருள்நிதியின் ஆக்ஷன் காட்சிகளும் ரசிகர்களிடையே வெகுவான வரவேற்பைப் பெறுகின்றன.
இந்த படத்தில் குறைவான நேரமே வந்தாலும், அருள்நிதிக்கு இணையான வரவேற்பைப் பெறுகிறார் சந்தோஷ் பிரதாப்.
அவரது பாத்திரத்தை இயக்குனர் வடிவமைத்திருக்கும் பாங்குதான் இக்கதையைச் சிலாகிப்புக்குரியதாக மாற்றியிருக்கிறது.
துஷாரா ஏற்ற கவிதா பாத்திரம் தமிழ் சினிமாவுக்குப் புதிதல்ல. ஆனால், அதுவே காதல் காட்சிகளைக் கவிதைத்தனம் உள்ளதாக ஆக்கியிருக்கிறது. அவரைப் போலவே சாயாதேவி வரும் காட்சிகளும் நம் மனதில் சட்டென்று பதிகிறது.
வில்லனாக வரும் ராஜசிம்மன் மிரட்டியிருக்கிறார். அவருக்கு இணையான முக்கியத்துவம் யார் கண்ணன், முனீஸ்காந்த், சரத் லோகித்சவா, இன்ஸ்பெக்டராக வரும் பத்மென் ஆகியோருக்குக் கிடைத்துள்ளது.
’பரியேறும்பெருமாள்’ தாத்தாவுக்கு இதில் ‘சாமி’யில் வரும் கோட்டா சீனிவாசராவ் போன்றொரு பாத்திரம் தரப்பட்டுள்ளது. அதன் வழியே இயக்குனர் பேசியிருக்கும் அரசியல் வெளிப்படையாகத் திரையுலகம் பேசாத ஒன்று.
’கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் பலம் என்று ஸ்ரீதரின் ஒளிப்பதிவையும் இமானின் இசையமைப்பையும் சொல்லலாம். இரண்டுமே அந்த மண்ணின் மணத்தை நாம் உணரும் பிரமையை ஏற்படுத்துகிறது.
கிளைமேக்ஸில் இமானின் பின்னணி இசை வெளிப்படுத்தும் உக்கிரம் அபாரம். மகேந்திரனின் கலை வடிவமைப்பு, கணேஷ் குமாரின் சண்டைக்காட்சிகள் என்று பல அம்சங்கள் மிக அழகாக அமைந்துள்ளன.
’கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் பெருங்குறை பின்பாதியில் படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ள விதம். அந்த வகையில் நாகூரான் பணி நம்மைச் சோதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது.
பிளாஷ்பேக் உள்ளே இன்னொரு பிளாஷ்பேக் என்று எரிச்சல்படுத்துவதோடு குழப்பத்தையும் அதிகமாக்குகிறது. அதனைச் சீர்படுத்தியிருந்தால் படம் இன்னுமொரு உயரத்தைத் தொட்டிருக்கும்.
சில காட்சிகள் ‘கட்’ செய்யப்பட்டது போன்ற உணர்வெழுவதற்கும் அதன் பின்னணிக்கும் சம்பந்தம் இருக்கக்கூடும். யார் கண்டது?
சமீபத்தில் வெளியான விக்ரம் சுகுமாரனின் ‘ராவண கோட்டம்’ படத்தின் கதையும் களமும் ‘கழுவேத்தி மூர்க்கனோடு’ பெருமளவில் ஒப்பிடத் தகுந்தது.
ஆனால், இயக்குனர் கௌதம்ராஜ் தனது திரைக்கதையை அணுகிய விதம் முன்னதில் இருந்து வேறுபட்டு நிற்கிறது.
முகத்திலறையும் வசனங்கள்!
‘யார் போடுறாங்கறதை வச்சு ட்ரெஸ் அழகா தெரியாது’, ‘இங்கெல்லாம் மீசையை முறுக்கவே குறிப்பிட்ட சாதியில பொறக்க வேண்டியிருக்கு’ என்பது போன்ற வசனங்கள் ஆங்காங்கே தெறித்து விழுகின்றன.
அவற்றில் குறைகளைத் தேட விரும்புவோர் நிச்சயம் கஷ்டப்பட வேண்டியிருக்கும். அந்த அளவுக்குப் பாத்திரங்கள், வசனங்கள், கதை நகரும் விதத்தைக் கவனமாக வார்த்திருக்கிறார் இயக்குனர்.
அரசியல் கட்சிகளில் குறிப்பிட்ட சாதிகளைச் சார்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதையும் ரத்தினச்சுருக்கமாக விமர்சித்திருக்கிறார்.
படத்தின் முடிவும் பின்பாதி நகரும் விதமும் சிலருக்கு எரிச்சல் தரலாம். நிச்சயம் அதுவொரு குறைதான். ஆனால், அவற்றைத் தாண்டி சமூகத்திற்குத் தேவையான ஒரு பார்வையைத் தந்திருக்கிறது ‘கழுவேத்தி மூர்க்கன்’.
சாதீயத்தைக் கழுவேற்றுவது அவ்வளவு சுலபமல்ல என்ற எண்ணம் இரண்டாயிரத்திற்குப் பிறகு ஆழமாகப் பலரது மனதில் வேரூன்றியிருக்கிறது.
அதனைத் தகர்க்க முனைந்திருக்கிறது இப்படம். ஜனரஞ்சகமான படைப்பு என்ற பெயரில் கேலிக் கூத்துகளை நிரப்பாமல், மிகக்கவனமாகவும் நேர்த்தியாகவும் ஒரு கதையைத் தந்திருக்கிறார் இயக்குனர் கௌதம்ராஜ்.
படத்தின் வெற்றி தோல்வியைத் தாண்டி தமிழ் திரையுலகின் முன்னணி நாயகர்களின் நெருக்கமான வட்டத்தில் அவர் இடம்பெறப் போவது உறுதி.
அதற்கு ‘கழுவேத்தி மூர்க்கனில்’ நிரம்பியிருக்கும் நேர்த்தியே காரணமாக அமையும்!
-உதய் பாடகலிங்கம்