கதையின் மூலம் கே.எஸ் ரவிகுமார் பள்ளிப்பட்டிலிருந்து சினிமா கனவோடு சென்னை வந்தவர்களுள் ஒருவர் கே.எஸ் ரவிகுமார்.
அன்றைய முன்னணி இயக்குநர்களாக இருந்த பாரதிராஜா, விக்ரமன் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.
புது வசந்தம் படத்தை விக்ரமனுடன் சேர்ந்து இயக்கிய கே.எஸ்.ரவிகுமாருக்கு முதல் படத்தினை இயக்க வாய்ப்பு கிடைத்தது. ரஹ்மான் – ரகுவரன் உள்ளிட்டோர் நடித்த க்ரைம் த்ரில்லரான புதியாத புதிர் படத்தை இயக்கி முதல் படைப்பிலேயே முத்திரை படைத்தார்.
அவ்வளவுதான், அதன்பிறகு இவர் எடுத்த அனைத்து படங்களும் ரசிகர்களிடம் டாப்-நாட்ச் என்ற பெயரை எடுத்தது.
கே.எஸ் ரவிகுமாருக்கு நன்கு செட்டான ஹீரோ கமல்; கமலுக்கு நன்கு பரிச்சியமான இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார். அவ்வை சண்முகி படத்தில் இணைந்த இந்த காம்போ, தாங்கள் முதன் முதலில் இணைந்து நடித்த இந்த படத்திலேயே மாபெரும் வெற்றி கண்டது.
இந்தக் கூட்டணி, அடுத்து தெனாலி மற்றும் பஞ்ச தந்திரம் ஆகிய படங்களிலும் சேர்ந்து தமிழின் மெகா ஹிட் படங்களைக் கொடுத்தன. பிறகு, ஒரு நல்ல க்ரைம் த்ரில்லர் கொடுக்க வேண்டும் என எண்ணிய கே.எஸ் ரவிகுமார், கமல்ஹாசனை வைத்து உலகத்தரமான படம் ஒன்றை கொடுத்தார்.
அதுதான் ‘தசாவதாரம்’. இந்த படம்தான் கமல்ஹாசனிற்கு உலகநாயகன் என்ற படத்தையும் கொடுத்தது. வசூல் மற்றும் விமர்சனத்திலும் மெகா ஹிட் அடித்தது. இப்போது பார்த்தாலும், “ஏ எப்புட்ரா..” எனும் அளவிற்கு படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.
இவர்கள் கடைசியாக இணைந்த மன்மதன் அம்பு திரைப்படம் வசூலில் வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்களால் நல்ல ஃபீல் குட் படமாக பார்க்கப்படுகிறது.
கமலுடன் எப்படி கே.எஸ் ரவிகுமாருக்கு செட் ஆனதோ, அதே போல ரஜினியுடன் சேர்ந்தும் கலக்கினார். முத்து மற்றும் படையப்பா படத்தில் இடம் பெற்றிருந்த பஞ்ச் டைலாக்குகள் இன்று வரை பலரால் நினைவு படுத்தப்படுகிறது.
ரஜினியை வைத்து எடுத்திருக்கும் இரண்டு படங்களிலுமே ஹீரோவின் கதாப்பாத்திரத்திற்கு எந்தளவிற்கு பவர் கொடுத்திருப்பாரோ அந்த அளவிற்கு ஹீரோ பேசும் பஞ்ச் வனங்களுக்கும் பவர் கொடுத்திருப்பார்.
கடைசியாக இவர் ரஜினியை வைத்து இயக்கிய லிங்கா திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாமல் போனது.
குணச்சித்திர நடிகராகவும் கலக்கல்..
கே.எஸ் ரவிகுமார் நல்ல இயக்குநர் மட்டுமல்ல, திறமைமிகு நடிகராகவும் வலம் வருபவர். தான் இயக்கும் படங்களில் கடைசி சீனிலோ அல்லது ஆரம்ப சீனிலோ தலைக்காட்டிவிட்டு போவது 90’ஸ் கிட்சின் அழகான நினைவுகளுள் ஒன்று. இது, இவரது ட்ரேட் மார்க் ஆக பார்க்கப்பட்டது.
தான் இயக்காத படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க ஆரம்பத்தார் ரவிகுமார்.
சில படங்களில் துணை கதாப்பாத்திரமாக, சில படங்களில் வில்லனாக, சில படங்களில் இயக்குநர் கதாப்பாத்திரத்திலேயே வந்தார். அதற்கு எடுத்துக்காட்டாக ரெமோ, கோமாளி, அய்யோக்யா போன்ற படங்களைக் கூறலாம்.
கம்-பேக் கொடுப்பது எப்போது?
நடிகர் மற்றும் இயக்குநராக வலம் வரும் கே.எஸ் ரவிகுமார், தன்னுடன் வேலைபார்க்கும் டெக்னீஷியன்ஸ் மற்றும் துணை இயக்குநர்களை சரியாக நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
பிரபல இயக்குநர் சேரன் கூட, இதனால்தான் கே.எஸ் ரவிகுமாரை விட்டு பிரிந்ததாகக் கூறப்படுகிறது. அதோடு இவர் சமீப காலங்களில் இயக்கிய படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் போனது.
இதனால், அவரது இயல்பான படங்களை தற்போது ரசிகர்களால் பார்க்க முடியவில்லை.
படையப்பா, முத்து, பஞ்ச தந்திரம் போன்ற கதைகளை இயக்கி இவர் கம்-பேக் கொடுப்பது எப்போது என்ற கேள்வி எப்போதும் ரசிகர்களின் மனங்களில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
– நன்றி ஜீ தமிழ் இதழ்