வென்று காட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ்!

16-வது ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 5 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 16-வது ஐபிஎல் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைடன்ஸ் அணிகள் மோதின.

முன்னதாக இந்த இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்து, மழைக் காரணமாக நேற்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அதன்படி டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தோ்வு செய்தது.

முதலில் களமிறங்கிய குஜராத் அணியில் ரித்திமான் சாஹா – சுப்மன் கில் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் சோ்த்தது.

சென்னையின் அபார பந்து வீச்சால் சுப்மன் கில் 7 பவுண்டரிகளுடன் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ரவீந்திர ஜடேஜா வீசிய அந்த ஓவரில் சுப்மன் கில் கிரீஸை விட்டு சற்று விலக, பின்னால் வந்த பந்தை பிடித்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டம்பிங் செய்தார் தோனி.

அடுத்து வந்த சாஹா 5 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தமிழக வீரர் சாய், 47 பந்துகளுக்கு 8 பவுண்டரிகள், 6 சிக்ஸா்கள் உள்பட 96 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.

ஹர்திக் பாண்ட்யா 21 ரன்களுடன் களத்தில் இருந்தார். சென்னை அணி தரப்பில் பதீரனா 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது.

தொடக்க வீரர் ருதுராஜ் 3 பந்துகளில் 4 ரன்கள் எடுத்த நிலையில், மழை திடீரென குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

மழை நின்றதும் பவர் பிளே ஆப் முறைப்படி சென்னைக்கு 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு, 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

முதலில் களமிறங்கிய ருதுராஜ் 26 ரன்களும், கான்வே 47 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து, ரஹானே 27 ரன்களும், ராயுடு 19 ரன்களும் எடுத்தனர்.

கேப்டன் டோனி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இதனால் சென்னை ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

12 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடிய நிலையில் துபே 32 ரன்களும், ஜடேஜா 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இறுதியில் 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் ஐபிஎல் 2023 தொடரில் 5-வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது.

5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Comments (0)
Add Comment