ஆய்வாளர் சுபாஷினியின் அனுபவம்
திருகோணமலை மாவட்டத்தில் கண்ணிக பகுதியில் உள்ள பழமையான வெல்கம் விகாரைக்கு, முதலாம் ராஜராஜன் ஆட்சியின்போது (993-1070 கி.பி) தமிழ் பௌத்தர்கள் வழங்கிய பல்வேறு (எருமை, விளக்கு, காசு, பசுக்கள், எண்ணெய்) நன்கொடைகளை பதிவு செய்யும் 16 தமிழ் கல்வெட்டுகள் தற்போது அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த விகாரை ராஜராஜப்பெரும்பாளை (முதலாம் ராஜராஜனின் பெரிய விகாரை) எனவும் அழைக்கப்படுகிறது.
இது தொடர்பான பதிவொன்றை ஆய்வாளர் சுபாஷினி தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அங்கு சென்றிருந்தபோது எடுத்த சில புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
அவற்றில், நின்ற நிலையில் கருங்கல்லால் செதுக்கப்பட்ட உறுதியான முகத்தோற்றம் கொண்ட புத்தரின் உருவச் சிலை உள்ளது.
பெரும்பள்ளி இருந்தமைக்கான சான்றாக கட்டுமானப் பகுதிகள் விரிந்து பரந்த நிலையில் ஆங்காங்கே காட்சியளிக்கின்றன.
தமிழ் பௌத்தம் செழித்த ஒரு விகாரை என இது குறிப்பிடப்படுகின்றது. இங்குள்ள தமிழ் கல்வெட்டுக்கள் ராஜராஜன் காலத்து செய்திகளைப் பதிந்துள்ளன.
இக்கல்வெட்டுக்களை இலங்கை முதுபெரும் வரலாற்றறிஞர் டாக்டர். எஸ். பத்மாநாபன் வாசித்தளித்திருக்கின்றார்.
இவர் இலங்கையின் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் என்பதோடு யாழ் பல்கலைக் கழகத்தின் 4-வது வேந்தராக பதவி வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.