சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் புதிய கொரோனா!

 – வாரத்துக்கு 6.5 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் பகுதியில் கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. அங்கிருந்து 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைந்திருப்பதால் சர்வதேச அளவிலான பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு நீக்கியிருக்கிறது.

எனினும் கொரோனா பெருந்தொற்று முழுமையாக ஓயவில்லை. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் முன்னாள் விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் உள்ளிட்டோர் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் இறுதியில் தொடங்கி சீனா முழுவதும் கொரோனாவின் ஒமிக்ரான் எக்ஸ்.பி.பி. வகை வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது.

தற்போது வாரத்துக்கு 4 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. வரும் ஜூன் மாதத்தில் சீனாவில் கொரோனா தொற்று உச்சத்தை எட்டும். அப்போது வாரத்துக்கு 6.5 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்படும் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

எனவே சீனாவில் இருந்து ஒமிக்ரான் எக்ஸ்.பி.பி. வைரஸ் உலக நாடுகளுக்கு பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளதென்றும் சீனாவின் அண்டை நாடுகள் உட்பட அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் சுகாதாரத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments (0)
Add Comment