இந்தியப் பிரதமராக நீண்ட நாள் பதவி வகித்தவரும், இந்திய சுதந்திர போராட்டத்தில் காந்தியின் நிழலாக இருந்தவருமான ஜவஹர்லால் நேருவின் நினைவு நாள் இன்று (27.05.2023) அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாளில் அவரைப்பற்றிய சில விஷயங்களைத் தெரிந்து கொள்வோம்:
ஜவஹர்லால் நேரு, தனது 15-வது வயது வரை வீட்டிலேயே கல்வி கற்றார். பணக்காரரான அவரது தந்தை மோதிலால் நேரு, மிகச்சிறந்த கல்விமான்களை வைத்து நேருவுக்கு கல்வி புகட்டினார்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் நேரு 9 முறை சிறைக்குச் சென்றார். இந்த காலகட்டத்தில் அவர் மொத்தம் 3,259 நாட்களைச் சிறையில் கழித்துள்ளார்.
ஜவஹர்லால் நேரு 11 முறை நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் துரதிருஷ்டவசமாக ஒரு முறைகூட அவருக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை.
ஜவஹர்லால் நேரு சிக்கனத்துக்கு பெயர்பெற்றவராக விளங்கினார். தனிப்பட்ட முறையிலோ, அரசு சார்பிலோ சுற்றுப் பயணங்களை மேற்கொள்ளும்போது மிகக்குறைந்த அளவிலேயே பணத்தை செலவு செய்தார்.
ஜவஹர்லால் நேரு தனது 13-வது வயதிலேயே அன்னிபெசண்ட் அம்மையாரின் தியாசபிக்கல் சொசைட்டியில் இணைந்து, தேசத்திற்காக சேவை செய்வதில் கவனம் செலுத்தினார்.
தனது வாழ்நாளின் கடைசிவரை மகாத்மா காந்திக்கு விசுவாசமானவராக, அவரது நிழலாக ஜவஹர்லால் நேரு வாழ்ந்தார்.
1922-ம் ஆண்டில் சவுரி சவுரா சம்பவத்துக்காக மோதிலால் நேரு உள்ளிட்ட பலரும் காந்தியை எதிர்த்தனர். ஆனால் தன் தந்தை மோதிலால் நேரு, காந்தியை எதிர்த்தபோதிலும், ஜவஹர்லால் நேரு காந்தியின் பக்கம் நின்றார்.
ஜவஹர்லால் நேரு பாசிசத்தை மிகக் கடுமையாக எதிர்த்தார். 1930-களில் நேருவை சந்திக்க முசோலினி விருப்பம் தெரிவித்தார். ஆனால் பாசிஸ்டுகள் மீதான வெறுப்பால் இந்த சந்திப்பை நேரு தவிர்த்தார்.
ஜவஹர்லால் நேருவைக் கொல்ல 1947, 1955, 1956 மற்றும் 1961-ம் ஆண்டுகளில் முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் அந்த முயற்சிகளில் இருந்து அதிர்ஷ்டவசமாக நேரு உயிர் தப்பினார்.
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களான எய்ம்ஸ், ஐஐடி, ஐஐஎம், என்ஐடி ஆகியவற்றை தொடங்கிவைத்த பெருமை நேருவையே சேரும்.
1964-ம் ஆண்டு மே 27-ம் தேதி மாரடைப்பால் நேரு காலமானார்.
அவரது இறுதி ஊர்வலத்தில் சுமார் 15 லட்சம் பேர் பங்கேற்றனர். காந்தியின் இறுதி ஊர்வலத்துக்கு அடுத்த மிகப்பெரிய இறுதி ஊர்வலமாக இது அமைந்தது.
– பிரேமா நம்பியார்