முதலமைச்சரின் பயணம்; முதலீட்டுக்காகவா, சுற்றுலாவுக்கானதா?

முனைவர் குமார் ராஜேந்திரன்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு ஒன்பது நாள் பயணமாகச் சென்றிருக்கிறார்.

வெளிநாடு பயணப்படுவதற்கு முன்பே அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10, 11 தேதிகளில் தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க இருப்பதால், அதற்குப் பல தொழில் முதலீட்டு நிறுவனங்களை அழைப்பதற்காகத் தான் இந்தப் பயணம் என்பதும் முதலில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே 2021-ல் நடந்த தேர்தலின்போது ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு தமிழ்நாட்டில் பொருளாதாரத்தை உயர்த்த இருப்பதாகத் தெரிவித்திருந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கடந்த ஆண்டில் மார்ச் மாதம் துபாய், அபுதாபி நாடுகளுக்கு ஸ்டாலின் சென்றபோது ரூ.6100 கோடி மதிப்புக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதையடுத்து அங்குள்ள 27 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பதங்கள் நடந்து 13 ஆயிரத்து 826 கோடி ரூபாய் அளவுக்கு தமிழ்நாட்டில் முதலீடு செய்யப்பட்டது.

அதைப் போலத் தான் இப்போதும் சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் சுமார் 350 நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் தரப்பில் தமிழ்நாடு முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் குறித்த விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

“இது முதலீட்டிற்கான பயணமல்ல, முதலீடு செய்வதற்கான பயணம்’’ என்றும், “சுற்றுலாப் பயணம்’’ என்று சிலச்சில விமர்சனங்கள் எழுப்ப‍ப்பட்டிருக்கின்றன.

இந்தக் குற்றச்சாட்டிற்குப் பதில் அளித்திருக்கிற தமிழ்நாடு நிதியமைச்சரான தங்கம் தென்னரசு “தற்போது குற்றம்சாட்டும் திரு.எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு 13 நாட்கள் பயணித்தார்.

அதற்கு முன்பு அவருடைய மகன் மிதுன் அதே நாடுகளுக்குச் சென்று வந்தது ஊழல் பணத்தை முதலீடு செய்வதற்குத் தானா? உலக முதலீட்டாளர்கள் மாநாடு’’ என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி நடத்தியது “உலகச் சுற்றுலா மாநாடு’’ என்று பதில் அளித்திருக்கிறார்.

ஒரு மாநில முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தை அவர் நிறைவு செய்வதற்குள் அதற்கு அரசியல் சார்ந்த அர்த்தங்களைக் கற்பிக்க வேண்டியதில்லை. “சுற்றுலாப் பயணம்’’ என்றெல்லாம் சுருக்கிப் பார்க்க வேண்டியதும் இல்லை.

இதற்கு முன்பு தமிழ்நாட்டில் முதலமைச்சராகப் பொறுப்பு வகித்த பலர் வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறார்கள்.

அவர்கள் சென்று வந்த பிறகு தமிழ்நாட்டிற்கான அதன் பலனைக் கிடைக்கச் செய்திருக்கிறார்கள்.

அறிஞர் அண்ணா 1968 ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்குப் பயணம் போனபோது, அங்குள்ள பல தொழில் நிறுவனங்களைப் பார்வையிட்டார்.

தற்போது பரவலாக இருக்கும் பொக்லைன் இயந்திரத்தை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையைப் பார்வையிட்ட அவர் தமிழ்நாட்டிற்கு அதே தொழிற்சாலையை அமைக்க விரும்பினார்.

கலைஞர் கருணாநிதி தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது 1970 ஆம் ஆண்டு முதல் பல வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறார்.

இங்கிலாந்து, பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, இத்தாலி, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று தொழில் முதலீட்டாளர்களைத் தமிழ்நாட்டில் தொழில் துவக்க அழைத்திருக்கிறார். ஜப்பானுக்குச் சென்றபோதும் அங்குள்ள பல தொழிற்சாலைகளைப் பார்வையிட்டார்.

மக்கள் திலகம் தன்னுடைய திரைப்படங்கள் சார்ந்த பணிகளுக்காகப் பல நாடுகளுக்குப் பயணப்பட்டிருந்தாலும், 1977 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்குச் சென்றிருக்கிறார்.

பிறகு அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் அங்கும் சென்று வந்தபிறகு தான் 1981 ல் சென்னையில் இந்திய ஆட்சிப் பணியாளர்கள் உள்ளிட்ட பலருக்குப் பயிற்சி அளிக்கும் அண்ணா மேலாண்மை நிறுவனத்தைத் துவக்கினார்.

மெக்சிகோ நகருக்கு நேரில் சென்று பார்வையிட்ட பிறகே கரும்புச் சக்கையிலிருந்து செய்தித்தாள் தயாரிக்கும் நவீனத் தொழில்நுட்பத்தைத் தமிழ்நாட்டுக்கு வாங்கி வந்த பிறகு அதே தொழில்நுட்பத்துடன் தொழிற்சாலை துவக்கப்பட்டது.

தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பும்போது, பல தொழில்களுக்கான முதலீடுகள் மட்டுமல்ல, பல தொழில்நுட்ப வசதிகளும் தமிழகத்தை வந்தடைந்திருக்கின்றன.

இவற்றை எல்லாம் “சுற்றுலாப் பயணம்’’ என்கிற சிறு வார்த்தையின் கீழ் அடக்கிவிட முடியாது. இதை வெறும் பயணமாகப் பார்க்காமல், பயணங்களின் விளைவாகச் சம்பந்தப்பட்ட மாநிலத்திற்கு என்ன கிடைக்கிறது என்பதே முக்கியம்.

குமார் ராஜேந்திரன்

சென்ற அ.தி.மு.க ஆட்சியின் போது தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்குப் பயணப்பட்டுத் திரும்பிய பிறகு சுமார் 5080 கோடி அளவுக்கு முதலீடு ஈர்க்கப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்தன.

2024 ஆம் ஆண்டு ஜனவரியில் நடக்க இருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்குப் பல்வேறு தொழிலதிபர்களை அழைக்கும் வித‍த்தில் தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டிருக்கிற வெளிநாட்டுப் பயணமும் அவர் எதிர்பார்க்கிற முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு ஈட்டித் தரும் என்று நம்புவோம்.

சில ஆண்டுகளுக்கு முன் அரசுப் பணியாளர் தேர்வாணையம் 9 ஆயிரம் பணியிடங்களுக்கான தேர்வை நடத்தியபோது, அதற்கு விண்ணப்பித்தவர்கள் மட்டும் 20 இலட்சம் பேர்.

அந்த அளவுக்கு வேலைவாய்ப்புக்கான தேடல் இருக்கிற நிலையில், காத்திருக்கும் ஏராளமான இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கும் நிலையில் இத்தகைய உலக முதலீட்டாளர்கள் மாநாடும், தமிழ்நாடு முதலமைச்சரின் சுற்றுப்பயணமும் அமையட்டும்.

Comments (0)
Add Comment