பள்ளிக்கூடங்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டது.
இந்நிலையில் வரும் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும் என்பதை பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 5-ம் தேதியும், 6 முதல் பிளஸ்-2 வரையான வகுப்புகளுக்கு ஜூன் 1-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இப்போது கோடை வெயிலின் தாக்கம் பல மாவட்டங்களில் அதிகம் இருப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ”தற்போது கோடை வெயில் அதிகமாக தெரிவதால் பள்ளிக்கூடங்கள் திறப்பதை மாற்றி அமைக்க ஆலோசனை நடத்தினோம். ஜூன் 5 அல்லது 7 ஆகிய தேதிகளில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இது தொடர்பாக முதலமைச்சரிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. ஆலோசனையின் அடிப்படையில் கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படும்” என அமைச்சர் கூறினார்.