பிரிட்டன் அரச குடும்பம் பயன்படுத்த முடியாத பட்டம்!

ஒரு மனிதரின் வாழ்வில்தான் எத்தனை மாற்றங்கள் பாருங்கள். ஒரு காலத்தில் அவர் வேல்ஸ் இளவரசர். அதன்பிறகு அவர் மன்னர் எட்டாம் எட்வர்ட். இறுதியாக விண்ட்சர் கோமகன்.

ஆம். அமெரிக்க கைம்பெண்ணான வாலிஸ் சிம்ப்சனை திருமணம் செய்ததால், மன்னர் எட்டாம் எட்வர்ட்டின் அரச பதவி பறிபோனது.

காதலுக்காக அவர் மணிமுடியைத் துறக்க, அவரது தம்பி ஆல்பர்ட், ஆறாம் ஜார்ஜ்ஜாக அரியணை ஏறினார். அதன்பின் தம்பி அண்ணனுக்குத் தந்த பட்டம்தான் விண்ட்சர் கோமகன் என்ற பட்டம்.

விண்ட்சர் கோமகனும், அவரது மனைவி வாலிஸ் சிம்ப்சனும் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தார்கள்.

இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஹிட்லரின் நாஜி ஜெர்மன் அதிகாரிகளுடன் விண்ட்சர் கோமகன் உறவாடியிருந்தார். ஜெர்மனிக்கு ஒருமுறை பயணம் செய்திருந்தார்.

இரண்டாம் உலகப் போரின்போது பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸ் உள்பட அந்த நாட்டின் பாதியை ஜெர்மன் படைகள் கபளீகரம் போது, விண்ட்சர் கோமகன் ஸ்பெயின் நாட்டுக்குத் தப்பியோடி இருந்தார்.

‘இங்கே விண்ட்சர் கோமகன்னு ஒருத்தர் இருந்தாரே. அவரை எங்கேப்பா?’ என்று தேடினார் ஹிட்லர்.

நாளை பிரிட்டனைக் கைப்பற்றினால், விண்ட்சர் கோமகனை அங்கே பொம்மை மன்னராக நியமிக்கலாம் என்பது ஹிட்லரின் திட்டம்.

ஆனால் அதற்கு இடம்கொடுக்காமல், விண்ட்சர் கோமகனை கரிபியன் கடலில உள்ள பகாமாஸ் தீவுக் கூட்டத்தின் ஆளுநராக பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அறிவித்தார். அருமையான ஒரு ராஜதந்திர காய்நகர்த்தல் அது.

இரண்டாம் உலகப்போர் ஓய்ந்தபிறகு விண்ட்சர் கோமகன் அவரது மனைவியுடன் மீண்டும் பிரான்ஸ் நாட்டில் வந்து குடியேறினார். இப்போது எலிசபெத் பிரிட்டனின் அரசியாக மாறிருந்தார். 

நாஜி ஜெர்மனியுடன் பெரியப்பா, ஊடாடிய காரணத்தால், ராணி எலிசபெத் அவர் மீது கோபத்தில் இருந்தார். எலிசபெத்தின் திருமணம், முடிசூட்டு விழாக்களுக்கு விண்ட்சர் கோமகன் அழைக்கப்படவில்லை.

இந்தநிலையில் முதிய வயதை எட்டியிருந்த விண்ட்சர் கோமகன், தொண்டைப் புற்றுநோய் காரணமாக உடல்நலம் குன்றியிருந்தார். அவரது அமெரிக்க மனைவி வாலிஸ் சிம்ப் சனுக்கும் வயதாகி இருந்தது.

ஒருமுறை தனது தாய் மேரியின் நினைவுப்பலகை ஒன்றைத் திறந்து வைக்க விண்ட்சர் கோமகன் லண்டன் வந்தபோதுகூட ராணி எலிசபெத் அளித்த விருந்துக்கு அவர் அழைக்கப்பட வில்லை. ராணி எலிசபெத் அவரை கண்டுகொள்ளவே இல்லை.

நோயின் பிடியில் சிக்கி விண்ட்சர் கோமகன் தவித்த நிலையில், ராணி எலிசபெத்துக்கும் அவருக்கும் இடையில் இருந்த நீண்டநாள் மனக்கசப்பு நீங்கியது.

எத்தனை நாளைக்குத்தான் இப்படி முறுக்கிக் கொண்டே இருக்க முடியும்?

பிரான்ஸ் நாட்டுச் சுற்றுப்பயணத்தின் போது, பெரியப்பா விண்ட்சர் கோமகனை நேரில் சந்தித்தார் ராணி எலிசபெத். தம்பி மகளிடம் அப்போது இரண்டு கோரிக்கைகளை வைத்தார் விண்ட்சர் கோமகன்.

‘நான் இறந்தால் என்னை விண்ட்சர் கோட்டையில் அரச குடும்பத்தினரைப் புதைக்கும் அதிகாரபூர்வ கல்லறைத் தோட்டத்தில் புதைக்க வேண்டும்.

நான் இறந்தபின் என் மனைவிக்கு ஒரு சிறிய உதவித்தொகையை வழங்க வேண்டும்’ இவைதான் விண்ட்சர் கோமகன் வைத்த இரண்டு கோரிக்கைகள்.

‘அதற்கென்ன? செய்து விட்டால் போகிறது பெரியப்பா’ என்று ஒப்புதல் தந்தார் ராணி எலிசபெத்.

ராணி எலிசபெத், பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் முடித்துத் திரும்பிய 10 நாட்களில் விண்ட்சர் கோமகன் இறந்து போனார். அவரது உடல் பிரிட்டனுக்குக் கொண்டு வரப்பட்டது.

விண்ட்சர் கோட்டையில் உள்ள புனித ஜேம்ஸ் சிற்றாலயத்தில் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, காண்டர்பரி பேராயர், யார்க் பேராயர், அரச குடும்பத்தினர் புடைசூழ விண்ட்சர் கோமகனின் இறுதிநிகழ்ச்சி நடைபெற்றது.

பெரியப்பா விண்ட்சர் கோமகனின் விருப்பப்படியே அவரது உடல் விண்ட்சர் கோட்டையில் அரச குடும்பத்தினரைப் புதைக்கும் அதிகாரபூர்வ கல்லறைத் தோட்டத்தில் புதைக்கப்பட்டது.

இதன்மூலம் கொடுத்த வாக்குறுதியை நிறை வேற்றினார் ராணி எலிசபெத்.

விண்ட்சர் கோமகனின் 75 வயது மனைவியான கோமகள் வாலிஸ் சிம்ப்சன் மிகவும் துக்கத்தில் இருந்தநிலையில், பெரியம்மாவின் தோளில் கைவைத்து ஆறுதல் கூறினார் ராணி எலிசபெத்.

ராணி எலிசபெத் செய்த இன்னொரு செயல்தான் மிக வித்தியாசமானது.

விண்ட்சர் கோமகன் என்ற பட்டத்தை, பிரிட்டன் அரச குடும்ப வரலாற்றில் இனி யாருமே பயன்படுத்த முடியாத வண்ணம் அந்த பட்டத்தை ஒழித்தார் ராணி எலிசபெத்.

இதன்மூலம், மறைந்த பெரியப்பாவுக்கு மகத்தான ஒரு மறைமுக மரியாதையைச் செய்தார் அவர்.
********
எழுத்தாளர், மோகன ரூபன் எழுதிய பேரரசி என்ற நூலில் இருந்து ஒரு பகுதி… 

Comments (0)
Add Comment