டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க வேண்டும் என ராகுல் காந்தி கூறியிருந்தார்.
இதனிடையே சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு விழா நடைபெறுவதால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளன.
இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இதேபோல் ஆம் ஆத்மி கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளன.
இதேபோல் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தனது கருத்தை விசிக தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், சாவர்க்கர் பிறந்தநாள் மே-28 அன்று புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைத் பிரதமர் மோடி திறக்க உள்ளார் என்றும் மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களைப் புறக்கணித்துவிட்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வை நடத்துகிறார் என்றும் இது சிங்காரித்து மனையில் குந்தவைத்து மூக்கறுக்கிற கதையாகவுள்ளது என்றும் பதிவிட்டுள்ளார்.
இதனை விசிக சார்பில் கண்டிக்கிறோம் எனவும், அத்துடன், இந்த நிகழ்வைப் புறக்கணிப்பதாகவும் முனைவர் தொல். திருமாவளவன் பதிவிட்டுள்ளார்.