இயக்குநர் சசியின் இயக்கத்தில் விஜய் ஆன்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’ படம் வெளிவந்தபோதே அதில் இடம் பெற்ற காட்சி மிகவும் பிரபலம்.
“ஆயிரம் ரூபாய் நோட்டை மதிப்பிழக்கச் செய்வது” பற்றி அதில் பிச்சைக்காரக் கதாபாத்திரம் பேசியிருக்கும்.
என்ன ஆச்சர்யம்?
படம் வெளிவந்த பிறகு அதே மாதிரி பண மதிப்பிழப்பு நடவடிக்கை அதிரடியாக எடுக்கப்பட்டது. இரண்டாயிரம் ரூபாய் நோட்டு புது வண்ணத்தில் அறிமுகப் படுத்தப்பட்டது.
மறுபடியும் வசதியான பெரும்புள்ளிகளின் வீட்டில் கட்டுக்கட்டாக இரண்டாயிரம் நோட்டுக்கட்டுகள் கைப்பற்றப்பட்டதாகச் செய்திகள் வெளிவர, சாதாரணப் பொதுமக்கள் வங்கிக்கு முன்னால் நின்று ஒற்றை நோட்டுக்குத் திணற வேண்டியிருந்தது.
இப்போது அதே ‘பிச்சைக்காரன்’ படத்தில் நடித்த விஜய் ஆன்டனி தானே இயக்கி இரண்டாம் பாகத்தில் நடித்து இயக்கி வெளியிட்டிருக்கிறார்.
இப்போதும் அந்தப் படம் வெளிவந்த சில தினங்களுக்குள் இரண்டாயிரம் நோட்டு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் செல்லாது என்கிற கெடுபிடியான அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.
மறுபடியும் வியாபாரிகள் அல்லாட வேண்டியிருக்கும், பெரும் பணத்தைப் பதுக்கியிருப்பவர்கள் பாதுகாப்பாகச் சென்ற முறை தப்பித்த மாதிரியே இம்முறையும் தப்பித்துக் கொள்வார்கள்.
ஏன்.. இரண்டாயிரம் ரூபாயை அப்போது அமலுக்குக் கொண்டு வந்தார்கள்? இப்போது ஏன் அதை மதிப்பிழக்க வைக்கிறார்கள்? சென்ற முறை நடந்த பண மதிப்பிழப்பின் போது, உருவான பொருளாதார நெருக்கடியைப் போல, இம்முறையும் நெருக்கடி உருவாகாது என்று சொல்ல முடியுமா? இப்போது புழக்கத்தில் இருக்கும் ஐநூறு ரூபாய் நோட்டுக்கும் இதே கதி வருமா?
நாடாளுமன்றத் தேர்தல் வருவதற்கு முன் சாதாரண ஆதார் அட்டை வைத்தபடி மதிப்பிழந்து வருகிற குடிமகன்கள் எதை எதை எல்லாம் எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது?
பலரும் இளம் சூட்டில் பெருமூச்சு விடுகிற நேரத்தில் ‘பிச்சைக்காரன்’ படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கி வெளியிடப்போவதாக அறிவித்திருக்கிறார் விஜய் ஆன்டனி.
பண மதிப்பிழப்புக்கும், பிச்சைக்காரன் திரைப்படங்களுக்குமான தொடர்பு முடிச்சுகள் தற்செயல் நிகழ்வாகவே இருக்கலாம். இருந்தாலும் கூட இப்படியா ஒரு ‘பிச்சைக்காரப்’ பொருத்தம் அமையவேண்டும்?
இனி ‘பிச்சைக்காரன்-3’ படம் வெளிவரும் போது, என்னென்ன மதிப்பிழப்புகள் இருக்குமோ?
வடிவேலு பாணியில் – நினைக்கும் போதே “கண்ணைக் கட்டுதே”!!
- லியோ