கருங்காப்பியம் – சிரிப்பூட்டுகிறதா, பயமூட்டுகிறதா?

ஆக்‌ஷன், ரொமான்ஸ், பேமிலி ட்ராமா, த்ரில்லர் என்று குறிப்பிட்ட வகைமைப் படங்களே ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வெளியாகும். அதுவொரு சீசன் என்று சொல்லும் அளவுக்குப் பல படங்கள் ஒரே வரிசையில் அணிவகுக்கும்.

2010 வாக்கில் வெளியான காஞ்சனா, பீட்சா, டிமாண்டி காலனி, யாமிருக்க பயமே உட்பட மிகச்சில படங்களே காவிய அந்தஸ்தைப் பெற்றன. ஆனாலும், அவற்றைப் பின்பற்றிப் பல படங்கள் நம்மை பயமுறுத்தும் வகையில் தயாராகின.

பேய்ப்படங்கள் என்றால் தியேட்டருக்கு கொத்துக்கொத்தாக ரசிகர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை அவற்றின் பின்னிருந்தன.

பல படங்கள், அந்த நம்பிக்கை நரைத்து தொய்ந்து போன பின் வெளியாகியிருக்கின்றன.

அதற்குச் சமீபத்திய உதாரணமாகியுள்ளது டி.கார்த்திகேயன் இயக்கத்தில் ரெஜினா கேசண்ட்ரா, காஜல் அகர்வால், கலையரசன், ரைசா வில்சன், ஜனனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘கருங்காப்பியம்’.

கொரோனா காலத்து கதை!

கொரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வீடுகளுக்குள் முடங்கியிருந்தது அனைவரும் அறிந்த ஒன்று. அப்படியொரு காலகட்டத்தில், நாயகி ரெஜினா கேசன்ட்ரா பொழுதுபோகாமல் தவிக்கிறார்.

தன்னிடம் இருந்த அத்தனை புத்தகங்களையும் படித்துத் தீர்க்கிறார். அதன்பிறகு, தன் தோழியின் உறவினர் பணியாற்றும் ஒரு நூலகத்திற்குச் செல்கிறார்.

அங்கு, பழைய புத்தகங்கள் இருக்கும் அடுக்கில் ‘கருங்காப்பியம்’ எனும் புத்தகம் இருப்பதைக் காண்கிறார். அதனை எடுத்துப் படிக்கத் தொடங்குகிறார்.

நூறாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட அந்த புத்தகத்தில், கொரோனா கால ஊரடங்கின்போது நிகழும் சம்பவங்கள் கதைகளாக விரிகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அமானுஷ்யத்தை நமக்குள் நிறைக்கின்றன.

அது மட்டுமல்லாமல், கதையில் வரும் பாத்திரங்கள் அந்தப் பெண்ணின் கண் முன்னே தோன்றுகின்றன. அதனைக் கண்டு அவர் மிரண்டு போனாலும், கதை படிப்பதை மட்டும் நிறுத்துவதில்லை.

ஐந்தாவது கதை மட்டும் நூல் எழுதப்பட்ட காலத்தில் நிகழ்வதாகச் சொல்லப்படுகிறது. உண்மையில், அந்தக் கதையில் வரும் மையப் பாத்திரம்தான் கருங்காப்பியத்தை எழுதுவதாகக் காட்டப்பட்டுள்ளது.

அதாவது, தனது வாழ்வு என்னவாகும் என்பதை முன்பே உணர்ந்து அந்த நபர் அதனை எழுத்தில் பதிவு செய்திருப்பது தெரிய வருகிறது.

இறுதியாக, நம் கையில் இந்த கருங்காப்பியம் ஏன் கிடைத்தது என்று அந்தப் பெண் யோசிக்கிறார். அதற்குப் பதில் கிடைக்கும்போது, படமும் முடிவடைகிறது.

கொரோனா காலத்து கதை என்பதால், திரையில் குறைவான நபர்களே நடமாடுகின்றனர். அந்தக் குறை தெரியாமல் அடுத்தடுத்த காட்சிகளுக்குத் தாவுகிறார் இயக்குனர்.

ஆனால், பேய்க்கதைகளைக் கொண்டு விதவிதமாகப் பயமுறுத்தினாலும், சிரிக்க வைத்தாலும் நமக்கு ஒரு படம் பார்க்கும் உணர்வே உருவாவதில்லை. அதுவே, இக்கதையை ‘வெப்சீரிஸ்’ ஆக எடுத்திருக்கலாமோ என்று எண்ண வைக்கிறது.

கலக்கல் காஜல்!

‘கருங்காப்பியம்’ படத்தின் நாயகியாக ரெஜினா முன்னிறுத்தப்பட்டாலும், உண்மையில் காஜல் அகர்வால் பாத்திரத்தை மையப்படுத்தியே இக்கதை அமைந்துள்ளது.

அதற்கேற்றாற்போல, மிகச்சீரிய வகையில் அவரது இருப்பு திரையில் கலக்கலாக அமைந்துள்ளது.

அதேநேரத்தில், தொலைக்காட்சியில் பாடல்களைத் தொகுத்து வழங்குபவர் ஏதேதோ பேசுவாரே, அது போலவே ரெஜினாவின் பாத்திரம் வார்க்கப்பட்டுள்ளது.

திரைக்கதை நம் பொறுமையைச் சோதிப்பது போலத் தோன்றுவதற்கும் அது மட்டுமே காரணம்.

கலையரசன், ரைசா வில்சன், ஜனனி, லொள்ளுசபா மனோகர், வீஜே பார்வதி, ஷரா, குட்டி கோபி, டிஎஸ்கே, ஆதவ் கண்ணதாசன், ஜான் விஜய் ஆகியோர் மட்டுமே ஒவ்வொரு கதையிலும் நம் மனதை ஆக்கிரமிக்கின்றனர்.

இவர்கள் தவிர்த்து கருணாகரன், யோகிபாபு, வீஜே அபிஷேக், லஷ்மிபிரியா, ஷெர்லின் சேத், புகழ் உட்படப் பலர் இதில் கௌரவமாகத் தலைகாட்டியிருக்கின்றனர்.

அனைவரையும் மீறி வேற்றுக்கிரகவாசியாக வரும் நொய்ரிகாவின் அழகு நம்மை அசர வைக்கிறது.

ஒரு பேய்ப்படம் பார்க்கும் உணர்வை ஊட்டுவதில் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு, படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி, இசையமைப்பாளர் பிரசாத் எஸ்.என். மூவரும் போட்டி போட்டு உழைத்துள்ளனர்.

செந்தில் ராகவனின் கலை வடிவமைப்பு, குறைவான நடிப்புக் கலைஞர்களின் இருப்பை மறக்கடிக்க முயல்கிறது. இயக்குனர் டி.கார்த்திகேயன், ஏற்கனவே டீகே என்ற பெயரில் யாமிருக்க பயமே, காட்டேரி, கவலை வேண்டாம் படங்களை இயக்கியவர்.

ரொம்பவே சீரியசான காட்சிகளில் கடுமையான முகபாவனைகளுடன் காமெடியை உருவாக்குவது அவரது முந்தைய படங்களிலும் உண்டு.

கருங்காப்பியத்தைப் பொறுத்தவரை லொள்ளுசபா மனோகர் வரும் பகுதி மட்டுமே அந்த பாணியில் முழுமையாக நம்மைத் திருப்திப்படுத்துகிறது.

வரவேற்பு இல்லையா?

நீண்டகாலமாகத் தயாரிப்பில் இருந்த உணர்வு படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு இருந்தால் பரவாயில்லை; தப்பித்தவறிக் கூட படம் பார்ப்பவர்களிடம் அந்த எண்ணம் ஒட்டிவிடக் கூடாது.

அந்த வகையில் சறுக்கியிருக்கிறது ‘கருங்காப்பியம்’.

ஏற்கனவே சிலமுறை படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் ஏதேதோ காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது. அதுவே, ’இந்தப்படம் ரொம்பப் பழசு’ என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டது.

வழக்கமாக, பேய்ப்படம் என்றால் நிகழ்காலத்தில் பேயின் அட்டகாசங்கள் விவரிக்கப்படும்; எங்கோ ஓரிடத்தில் ‘பிளாஷ்பேக்’ ஆக பேய் உருவான கதை தனியே சொல்லப்படும்.

அந்த பார்முலாவை உடைத்து ‘யாமிருக்க பயமே’ தந்தவர் டீகே. பேய்க்கு பிளாஷ்பேக்கே கிடையாது என்று ரசிகர்களைத் திணறடித்தவர்.

அப்படிப்பட்டவர், இந்த படத்தில் ‘கருங்காப்பியம்’ உருவான கதையை தனி எபிசோடாக தருகிறார். அதைத் தவிர, நான்கு தனி எபிசோடுகளை கொண்டு நம்மைப் பயமுறுத்த முயன்றிருக்கிறார்.

பேய்ப்படங்களின் சுவாரஸ்யமே திரும்பத் திரும்பச் சில பாத்திரங்களைத் திரையில் பார்ப்பதுதான். இதில் அந்த அம்சம் ’மிஸ்ஸிங்’. அதுவே, ஒரு ’மினி சீரியல்’ பார்த்த எண்ணத்தை விதைக்கிறது.

அது மட்டுமல்லாமல், சில கதைகளில் அரை டஜன் பேர் ‘சும்மா’ தலைகாட்டியிருக்கின்றனர்.

அது படம் பார்ப்பவர்கள் திரையுடன் ஒன்றுவதைத் தவிர்க்கும். அதனாலோ என்னவோ, தியேட்டரில் படம் பார்ப்பதையே வழக்கமாக வைத்திருக்கும் ரசிகர்களால் இப்படம் புறக்கணிக்கப்படுவதைக் காண முடிகிறது.

ஓடிடி வெளியீட்டின்போது, அது தலைகீழாகிப் பெரும் வரவேற்பைப் பெறவும் வாய்ப்புண்டு. அவ்வாறு நிகழ்ந்தால், அதற்கும் திரைக்கதையே காரணமாக அமையும்.

இந்த முரண் தான் தியேட்டரில் படம் பார்ப்பதற்கும் ஓடிடியில் பார்ப்பதற்குமான வித்தியாசம்.

என்ன சொன்னாலும், கருங்காப்பியத்தில் ஒவ்வொரு எபிசோடும் ஒரு சிறுகதை போன்று அமைந்திருப்பதை மறுக்க முடியாது.

இன்றும் பி.டி.சாமி, கோட்டயம் புஷ்பநாத், இந்திரா சௌந்தர்ராஜன் போன்ற எழுத்தாளர்கள் விதவிதமாக அமானுஷ்யத்தை எழுத்தில் விவரிப்பதை ரசிப்பவர்கள் இருக்கவே செய்கின்றனர். அவர்களைப் போன்றவர்களுக்கு இப்படம் இனிக்கும்!

  • உதய் பாடகலிங்கம்
Comments (0)
Add Comment