ஊர் சுற்றிக் குறிப்புகள் :
மிகை நடிப்பில்லாமல் மென்மையான, இயல்பான நடிப்பைப் பல திரைப்படங்களில் வழங்கியவர் அண்மையில் மறைந்த நடிகரான சரத்பாபு.
தெலுங்குப் படங்களில் அதிகமாக நடித்திருந்தாலும், தமிழில் ‘சலங்கை ஒலி’யில் கமலின் நண்பனாக, அண்ணாமலை-யில் ரஜினிக்கு ‘முதலாளி’யாக என்று பல பாத்திரங்களில் சரத்பாபு நடித்திருந்தாலும், அவரைத் தனித்துக் கவனப்படுத்தியிருந்தவர் இயக்குநர் மகேந்திரன்.
‘முள்ளும் மலரும்’ படத்தில் ‘லா பாயிண்ட்’ என்ற பாத்திரத்தை மென்மையாகக் கையாண்டிருப்பார்.
தனக்குத் தரப்பட்ட கதாபாத்திரத்தை மீறித் தன்னை அதில் காட்டிக் கொள்ளாதபடி தான் பல படங்களில் அவர் நடித்திருக்கிறார்.
மகேந்திரன் இயக்கிய ‘மெட்டி’ சரத்பாபுவுக்குக் குறிப்பிடத்தக்க படம். தனது தங்கை மீது பாசம் காட்டும் காளி பாத்திரத்தில் ‘முள்ளும் மலரும்’ படத்தில் ரஜினி நடித்திருப்பதைப் போலவே, தனது தங்கைகள் மீது பாசம் காட்டி, பெற்ற தந்தையிடம் சண்டை போடும் பாத்திரத்தில் நடித்திருப்பார் சரத்பாபு.
தந்தையாக நடிக்கும் செந்தாமரை ‘மை சன்’ என்று அழைக்கிற விதமும், அதை இறுக்கமான முகபாவத்துடன் சரத்பாபு எதிர்கொண்டு அவருடன் அடித்துப் புரள்கிற காட்சிகளும் அபூர்வமான காட்சிகள்.
தனிப்பட்ட முறையிலும் கூட இத்தனை ஆண்டுகளில் அவரைப் பற்றி எதிர்மறையான செய்திகள் எந்த ஊடகங்களிலும் வெளிவராதபடி இருந்திருக்கிறது அவருடைய வாழ்வு.
தமிழ்த் திரைப்படங்களில் ஆண் கதாபாத்திரங்களில் மென்மையான பாத்திரங்கள் என்று தனித்துப் பிரித்துப் பார்த்தால் – அதில் சரத்பாபுவின் முகமும் கண்டிப்பாக இருக்கும்.
– யூகி