இந்தியாவில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பிட்ட சில பகுதிகளில் 115 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெப்பநிலை அதிகரித்தும் காணப்பட்டது.
இந்த கோடைக் காலத்தில் இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு வெப்பநிலை அதிகமாகவே பதிவாகி வருகிறது.
ஏற்கனவே அதிக வெப்பத்தால் தகித்துக்கொண்டிருக்கும் பூமி, அடுத்த சில ஆண்டுகளில் முதல்முறையாக ஒரு முக்கிய வெப்பநிலை வரம்பைக் கடக்கக்கூடும் என்று காலநிலை விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
இபோதிருந்து 2027-ஆம் ஆண்டுக்குள், தற்போது நிலவும் பூமியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஷிஸுக்கு மேல் உயர 66% வாய்ப்புள்ளதாக ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டின் நிலப்பகுதிகளில் கடுமையான வெப்ப அலைகள் வீசக்கூடும், மாதக்கணக்கில் மழை கொட்டித் தீர்க்கலாம், வறட்சி ஏற்படுவதோடு பொருளாதார இழப்புகளும் இருக்கலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
மனித நடவடிக்கைகளால் வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயு உமிழ்வுகள், எல் நினோ போன்ற காலநிலை மாறுபாடுகள் காரணமாக இதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மேற்குறிப்பிட்ட காரணங்களால் தொடந்து அதிகரித்து வரும் வெப்பநிலையால் பூமி மனிதன் வாழதகுதியற்ற ஒன்றாக மாறிவருகிறதா? என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த பீட்டர் டைன்ஸ் தனது ட்விட்டர் பதிவில் இப்படிக் கூறியுள்ளார்.
“இந்தியாவில் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. பல பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக அதிக ஈரப்பதம் இருக்கும் தகவல்கள் வெளியாகிறது. அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இணைந்து காணப்படுவது மிகவும் ஆபத்தானது.
இரவு வெப்பநிலை பல பகுதிகளில் 30 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக உள்ளது. 10 லட்சத்துக்கும் அதிகமானோர் வெளியே தூங்குகின்றனர்” என அதில் தெரிவித்துள்ளார்.
சூரியக் குடும்பத்தில் பூமி மட்டுமே உயிரினங்கள் வாழ தகுந்த பகுதியாக உள்ளது.
ஆனால், மனித செயல்பாடுகளால், புவி வெப்பமயமாதல், பனிப்பாறை உருகுதல், காலநிலை மாற்றம் என பல இடர்களை பூமி சந்திந்து வருகிறது.
அதன் விளைவு பூமியில் உயிரினங்களின் இருப்பையே கேள்விகுறியாக்கியுள்ளது.
இந்த உலகை பாதிப்பில்லாமல் பாதுகாக்க இன்னமும் கூட நமக்கு வழிகள் இருக்கின்றனர்.
அதற்கான நடவடிக்கைகளை ஒட்டுமொத்த மனிதகுலமும் உடனடியாக எடுக்க வேண்டும் என்பதை தற்போது இருக்கும் காலநிலை நமக்கு உணர்த்துகிறது.
நன்றி: தீக்கதிர்