மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன் – தொலைக்காட்சிப் பட அனுபவம்!

ஒருகாலத்தில் ‘டெலிபிலிம்’ என்ற பெயரில் கொஞ்சம் பெரிய சிறுகதையை வாசித்த அனுபவம் திரையில் காணக் கிடைத்தது.

இன்று, ‘டிவி மூவி’ என்ற பெயரில் சீரியலை விடக் கொஞ்சம் பெரிதான, தியேட்டரில் பார்க்கும் திரைப்படத்தைவிடச் சிறியதான ஒரு அனுபவத்தைத் தந்து வருகின்றனர் ஓடிடி தளங்களுக்கான பங்களிப்பாளர்கள்.

‘மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன்’ படத்தைப் பார்த்தபோது மேற்சொன்னது நினைவுக்கு வந்தது. ஏன், எதனால் என்றறிய அந்த படம் தந்த அனுபவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

எளிமையான கதை!

ஒரு ஆதரவற்றோர் இல்லம். அதில் இருந்துவரும் நான்கு சிறுவர்களும் ஒரு சிறுமியும் நெருக்கமான தோழர்களாக மாறுகின்றனர்.

ஆண்டுகள் செல்லச் செல்ல, அந்த கும்பலில் இருக்கும் ஒரு நண்பன் மீது காதல் கொள்கிறார் அந்தப் பெண். கல்லூரிப் படிப்பு, வேலை என்றானபிறகு அது மேலும் இறுகுகிறது.

ஒருநாள், அந்தக் காதலர் கொலை செய்யப்படுகிறார். அவரது காதலியோ காவல் துறையில் எஸ்.ஐ. ஆக வேலை செய்பவர்.

உண்மை தெரிய வந்ததும், அவர் என்ன செய்வார்? காதலரின் கொலைக்குக் காரணமானவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிப்பார்? அப்படித்தான், இக்கதையிலும் கொலையாளிகளைக் கண்டறிகிறார் அந்த காதலி.

ஒரு ரவுடி உடன் கூட்டு சேர்ந்து சட்ட விரோதச் செயலில் ஈடுபடும் ஒரு இன்ஸ்பெக்டர் தான் அவரது காதலர் கொலையாவதற்கான காரணம்.

அதனை அறிந்ததும், நண்பர்கள் உதவியுடன் அவர்கள் இருவரையும் தனித்தனியாகக் கொலை செய்யத் திட்டமிடுகிறார் அப்பெண்.

அதற்காக, அந்த இன்ஸ்பெக்டர் இருக்கும் காவல்நிலையத்திற்கு மாற்றலாகிச் செல்கிறார். அவரது நடவடிக்கைகளைக் கண்காணிக்கிறார்.

குறிப்பிட்ட நாளில், திட்டமிட்டபடியே மூன்று நண்பர்களும் காவல் நிலையம் வருகின்றனர். இரவு நேரத்தில் கரண்ட் ‘கட்’ செய்துவிட்டு இன்ஸ்பெக்டரை கொலை செய்வதே அவர்களது திட்டம்.

ஆனால், அரைமணி நேரம் முன்னதாக இன்ஸ்பெக்டரை பார்க்க வருகிறார் அந்த ரவுடி. என்ன செய்வது என்று அவர்கள் திகைக்கும்போது, சொல்லிவைத்தாற்போல கரண்ட் ‘கட்’ ஆகிறது. துப்பாக்கி சுடும் சத்தமும் கேட்கிறது.

அதன்பிறகு, இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்க்கின்றனர். கொலையானவரின் எஸ்.ஐ. காதலியோ, நண்பர்களோ அக்கொலைகளைச் செய்யவில்லை.

ப்படியானால் கொலைகளைச் செய்தது யார்? என்ன காரணம்? ‘மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன்’ திரைக்கதையின் மீதி அதையே சொல்கிறது. உண்மையைச் சொன்னால், ரொம்பவே எளிமையான கதை இது.

தொலைக்காட்சிப் படமா?

சேகர் சந்திராவின் ஒளிப்பதிவில் படத்தின் பட்ஜெட் நமக்கு மறந்து போகிறது. அந்த அளவுக்கு அவர் உருவாக்கியிருக்கும் ஒவ்வொரு பிரேமும் ‘ரிச்’ ஆக உள்ளன.

அதற்கு ஏற்றாற்போல பின்னணியில் கொஞ்சம் துணை நடிகர்களையும் பயன்படுத்தியிருக்கலாம். அதனைச் செய்யாத காரணத்தால், ஒரு நாடகம் பார்க்கும் உணர்வேற்படுகிறது.

ப்ரீத்தி – பாபுவின் படத்தொகுப்பில் காட்சிகள் ஒவ்வொன்றும் ‘கூர்மை’யாக வெட்டப்பட்டுள்ளன. ஆனால், திரைக்கதையின் முடிச்சுகளை அடுத்தடுத்து அவிழ்க்கும் உத்தியில் கவனம் செலுத்தாமல் விட்டிருக்கின்றனர்.

மணிகாந்த் கத்ரியின் பின்னணி இசை ஆங்காங்கே ‘த்ரில்’ ஊட்டுகிறது. சில இடங்களில் காட்சிக்குத் தேவையான உணர்வையூட்ட உதவியிருக்கிறது.

நடிப்பைப் பொறுத்தவரை, இந்த படத்தின் பிரதானமாக வரலட்சுமியே முன்னிறுத்தப்படுகிறார்.

உண்மையில் ஆரவ் தொடங்கி மஹத், சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், யாசர், அமித் பார்கவ், சுப்பிரமணிய சிவா உட்பட அனைவருக்கும் ஒரேமாதிரியான முக்கியத்துவமே காணக் கிடைக்கிறது.

குறைவான பட்ஜெட்டின் காரணமாக, அதிகபட்சமாக ஒரு டஜன் நபர்களே ஒரு ஷாட்டில் தோன்றுகின்றனர்.

அது, நாடக மேடையின் முன்னே நின்றாற் போன்ற அனுபவத்தை உண்டு பண்ணுகிறது.

கதையும் அதற்கேற்ற காட்சிகளும் ஓரிடத்தையே சுற்றி வருகின்றன. அதேநேரத்தில், ஒரு வீடியோ பதிவு அல்லது சீரியல் பார்ப்பது போலல்லாமல் பெருந்திரையில் பார்க்கும் உணர்வும் கிடைக்கிறது.

இவையனைத்தும் சேரும்போது திரையில் நாம் பெறும் காட்சியனுபவம் ஒரு கலவைத்தோற்றத்திற்கு மாறுகிறது. ‘டிவிடி மூவி’ அல்லது ‘டிவி மூவி’ என்று பதம் பிரிக்கப்படுவது போல, இப்படம் ஓடிடி தள ரசிகர்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒன்று என்பது புரிந்து போகிறது.

அடுத்தது என்ன?

ஒரு ‘த்ரில்லர்’ படத்தில் ‘அடுத்தது என்ன’ என்ற கேள்வி நீள்வதும், அதற்கான பதில்கள் குறிப்பிட்ட நேரத்தில் நமக்குக் கிடைப்பதும் மிக முக்கியம். ‘மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷனில் அது நிச்சயம் இருக்கிறது. ஆனால், அது நம்மை சுவாரஸ்யப்படுத்தாமல் சோர்வுற வைக்கிறது.

படபடவென்று அடியாட்களை அடித்து நொறுக்கும் நாயகன், என்னென்ன செய்தார் என்று ‘ஸ்லோமோஷனில்’ விளக்குவது ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைப்பதில் ஒருவகை பாணி.

இந்த படத்தில் வரும் அதிரடித் திருப்பங்களையும், அவற்றின் பின்னணியையும் அடுத்தடுத்துச் சொல்வது அந்த வகையிலானது. ஆனால், அதுவே ‘இவ்ளோதானா உங்க பில்டப்பு’ என்று ரசிகர்கள் சோர்ந்துபோகவும் காரணமாகிறது.

மஹத் ராகவேந்திரா – வரலட்சுமி சரத்குமார் ஜோடியின் காதல் உரையாடலில் இருந்து இந்த படத்தின் திரைக்கதை தொடங்குகிறது. முதலில் மஹத்தை காட்டிவிட்டு, சில நிமிடங்கள் கழித்து வரலட்சுமி பார்வையில் அக்காட்சிகள் சொல்லப்பட்டிருப்பது அருமை.

ஆனால், அந்த பாராட்டு தொடரும்படியாகப் பின்பாதி திரைக்கதை அமையவில்லை.

ஒரு காட்சியின் முடிவில் உருவாகும் சஸ்பென்ஸ், அடுத்த காட்சியிலேயே உடைபடுவது போரடிக்கிறது.

ஆனால், அதனை ஒரு உத்தியாக எண்ணியே பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர் தயாள் பத்மநாபன்.

கொலையானவர்கள் மீது எந்தக் கோணத்தில் குண்டு பாய்ந்துள்ளது என்ற குற்றவியல் விசாரணை அடிப்படை இக்கதையில் கணக்கில் கொள்ளப்படவில்லை. அவ்வாறு லாஜிக் பார்க்கத் தொடங்கினால், இந்த கதையில் பல ஓட்டைகள் தென்படும்.

‘மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன்’ படத்தில் பசவண்ணா ஆதரவற்றோர் இல்லம் காட்டப்படுகிறது. அப்படியொரு ஆன்மிகவாதி, தத்துவியலாளர் குறித்து தமிழ் மக்களுக்குப் பெரிதாகப் பரிச்சயம் இல்லை.

ஏற்கனவே இயக்குனர் தயாள் பத்மநாபன் கன்னடத்தில் இயக்கிய படத்தின் ரீமேக் என்ற வகையில், அந்த அம்சத்தைத் தமிழில் வைத்திருக்கவே வாய்ப்பு அதிகம்.

இப்படிப் பல்வேறு கேள்விகளுக்கான பதில்களை நாமாகப் புரிந்து கொள்வதே, இப்படத்தின் மாபெரும் பலவீனம்.

அதேநேரத்தில், படத்தைப் புறக்கணிக்கவிடாமல் தடுப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது இயக்குனரின் பல்லாண்டு கால அனுபவம்.

அடுத்த படத்தையாவது, தமது தனிப்பட்ட பலங்களை வெளிப்படுத்தும் வகையிலான படைப்பாகத் தர இயக்குனர் முன்வர வேண்டும்.

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment