‘கொடை வள்ளல்’ கொடுத்த வித்தியாசக் கொடைகள்!

‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தை புரட்சித்தலைவர் பெரும் பொருட்செலவில் தயாரித்து முடித்திருந்த நேரம்.

வி.ஐ.பி.க்கள் பலருக்கும் அந்தப் படத்தை போட்டுக்காட்டினார். எம்.ஜி.ஆரின் ஆஸ்தான புகைப்பட கலைஞர் ஆர்.என். நாகராஜராவும்  படத்தைப் பார்த்திருந்தார்.

அவரிடம் எம்.ஜி.ஆர், ‘படம் எப்படி?’ என அபிப்பிராயம் கேட்க, ‘நிச்சயம் நூறு நாள் ஓடும்’ என நாகராஜராவ் கூறினார்.

‘நீங்க சொன்னது பலிச்சா, நான் ஆயிரம் ரூபாய் தருகிறேன்’ என எம்.ஜி.ஆர். உறுதி அளித்தார்.

நூறு நாளையும் தாண்டி படம் ஓடியது.

சென்னையில் படத்தின் வெற்றிவிழா நடைபெற்றது.

ஆர்.என்.நாகராஜ ராவுக்கு அளித்த வாக்குறுதியை ஞாபகம் வைத்து விழா மேடையில் ஆயிரம் ரூபாய் பரிசளித்து கவுரவித்தார் மக்கள் திலகம்.

அப்போது  ஒரு பவுன் தங்கம் விலை 80 ரூபாய்.

அப்படியானால், ஆயிரம் ரூபாயின் அப்போதைய மதிப்பை கணக்கு போட்டுக்கொள்ளுங்கள்.

ம.பொ.சி.க்கு பரிசு

சிலம்புச்செல்வர் ம.பொ.சி.யின் 83-வது பிறந்தநாள் சென்னை ஏவி.எம். ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. எம்.ஜி.ஆர். தான் இதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

ம.பொ.சி.யின் சமுதாய சேவைகளை பாராட்டி பேசிய எம்.ஜி.ஆர், 83 ஆயிரம் ரூபாய் பணமுடிப்பு அளித்து மகிழ்வித்தார்.

அப்போது ம.பொ.சி. ‘எனக்கு நூறு வயது ஆகவில்லையே என வருத்தமாக உள்ளது. உங்கள் கையால் 1 லட்சம் ரூபாய் கொடுத்திருப்பீர்களே’ என நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

உடனே எம்.ஜி.ஆர். எழுந்து “அதனால் என்ன? நூறு வயசு ஆகட்டும். ஒரு லட்சம் தருகிறேன்’’ என்று சொன்னபோது, கூட்டம் ஆர்ப்பரித்தது.

புத்தக வாசிப்புக்கு மரியாதை

ஊட்டி மரப்பாலத்தில் ‘வேட்டைக்காரன்’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. மக்கள் திலகமும், சாவித்ரியும் பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டன.

அப்போது படப்பிடிப்பு குழுவில் உள்ள டிரைவர்களுக்கு வேலை கிடையாது என்பதால் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.

உணவுக்காக அன்று சீக்கிரமே ‘பிரேக்’ விடப்பட்டது.  ஓட்டல் அறைக்கு செல்வதற்காக, எம்.ஜி.ஆர். தனது காரை நோக்கி வந்தார்.

அவரது கார் ஓட்டுநரும் சீட்டாட்டத்தில் பங்கேற்று மும்முரமாக இருந்ததால் எம்.ஜி.ஆர் வந்ததை கவனிக்கவில்லை.

அப்போது சுப்பிரமணியன் என்ற டிரைவர் மட்டும் சீட்டு விளையாட்டில் கலந்து கொள்ளாமல், தனியே அமர்ந்து புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தார்.

அவரிடம் வந்த எம்.ஜிஆர். “என்னண்ணே.. நீங்க மட்டும் தனியா உட்கார்ந்து இருக்கீங்க’’ என்று சொல்லியதோடு அவர் படித்த புத்தகத்தை வாங்கிப் பார்த்தார்.

”இது நல்ல புத்தகமாச்சே.. சீட்டு விளையாடி வெறுமனே பொழுதை கழிக்காமல் உருப்படியா புத்தகம் படிக்கிறீங்களே’’ என பாராட்டினார்.

அத்துடன் அவரது புத்தக வாசிப்பை மெச்சி நூறு ரூபாய் பணமும் கொடுத்தார்

கார் முழுக்க கரும்பு

சென்னை வாகினி ஸ்டூடியோவில் ‘நல்லநேரம்‘ படப்பிடிப்பு  மூன்று மாதம் நடந்தது.

எம்.ஜி.ஆர். தனது காரில், படத்தில் நடித்த யானைக்கு கரும்பும், வெல்லமும் ஏற்றிக்கொண்டு வருவார்.

“நீங்க வாங்குற சம்பளம் இதுக்கே போயிடுமே’’ என தயாரிப்பாளர் தேவர் ஒரு நாள் சொன்னார்.

“போகட்டுமே.. வாயில்லா ஜீவன் தானே’’ என பதில் அளித்தார் மக்கள் திலகம்.

அதன்பின்னர், யானைக்கு கரும்பும், வெல்லமும், தனது காரில் கொண்டு வந்து கொடுக்கும் பழக்கத்தை கே.ஆர்.விஜயாவும் தொடர்ந்தார்.

– பி.எம்.எம்.

Comments (0)
Add Comment