டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் நினைவலைகள்!
1934-ம் ஆண்டில், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இயக்கத்தைச் சேர்ந்த சக தோழர்கள், நான் அவர்களோடு உடன்வர ஒப்புக்கொண்டால், சுற்றுலாச் செல்ல விரும்புவதாகத் தெரிவித்தார்கள்.
எங்களுடைய பயணத் திட்டத்தில் வெருலில் உள்ள பௌத்தக் குகைகள் கண்டிப்பாக இடம்பிடிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
நான் நாசிக் செல்ல வேண்டும் என்றும் அங்கே கட்சியினர் இணைந்து கொள்வார்கள் என்றும் திட்டமிடப்பட்டது.
அவுரங்காபாத்தைக் கடந்து தான் வெருலை அடைய இயலும். மேன்மைமிக்க நிசாமின் அரசாளுகைக்குரிய ஹைதராபாத் முகம்மதிய அரசின் கீழ்தான் அவுரங்கபாத் நகரம் இருக்கிறது.
நாங்கள் அவுரங்காபாத் செல்லும் வழியில் ஹைதராபாத் ஆளுகைக்கு உட்பட்ட தௌலதாபாத் எனும் இன்னொரு நகரை கடக்க வேண்டியிருந்தது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நகர் ஒருகாலத்தில் ராம்தியோ ராய் எனும் புகழ்பெற்ற இந்து மன்னரின் தலைநகராகத் திகழ்ந்தது.
தௌலதாபாத் கோட்டை பழம்பெருமை மிக்க வரலாற்றுச் சின்னமென்பதால், அப்பகுதிக்கு அருகே சுற்றுலா வருகிற யார் ஒருவருமே அக்கோட்டையைப் பார்க்க வருவதைத் தவிர்க்கமாட்டார்கள். ஆகவே. எங்கள் கட்சியினரும் தௌலதாபாத் கோட்டையைச் சுற்றிப் பார்ப்பதைத் தங்கள் பயணத் திட்டத்தில் சேர்த்துக் கொண்டார்கள்.
நாங்கள் சில பேருந்துகளையும், சுற்றுலாவுக்கான கார்களையும் வாடகைக்கு அமர்த்திக் கொண்டோம். ஏறத்தாழ முப்பது பேர் இருந்தோம். நாசிக்கில் இருந்து அவரங்காபாத் செல்லும் வழியில் இருந்த எயோலா நோக்கிப் பயணமானோம்.
ஒரு தாழ்த்தப்பட்ட சுற்றுலாப் பயணி புறநகர்ப் பகுதிகளில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் சிரமங்களைத் தவிர்க்கும்விதமாக, நாங்கள் எங்களது அடையாளங்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாமல் பயணிக்க விரும்பினோம்.
எங்கலெல்லாம் தங்கிச் செல்லத் திட்டமிட்டமோ, அங்குள்ள எம் மக்களுக்கு மட்டும் எங்கள் வருகையைத் தெரியப்படுத்தினோம். நிசாம் அரசின் பல்வேறு கிராமங்கள் வழியாகக் கடந்து சென்றாலும் மக்கள் எங்களைச் சந்திக்க வரவில்லை.
தௌலதாபாத்தில் நிலைமை வேறாக இருந்தது. நாங்கள் வருகிறோம் என்று எம் மக்களுக்கு முன்னரே சொல்லியிருந்தோம். எங்களுக்காக அவர்கள் நகரின் நுழைவாயிலேயே காத்துக் கொண்டிருந்தனர்.
“ஊர்திகளை விட்டுக் கீழிறங்கித் தேநீர் அருந்தி இளைப்பாறிய பின் கோட்டையைச் சுற்றிப்பார்க்கச் செல்லுமாறு” எங்களை அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
இந்த யோசனைக்கு நாங்கள் சம்மதிக்கவில்லை. எங்களுக்குத் தேநீர் பருக வேண்டுமென்கிற வேட்கை ஒரு பக்கம் இருந்தாலும், இருட்டுவதற்குள் கோட்டையைச் சுற்றிப்பார்க்கும் அளவுக்கு நேரமிருக்க வேண்டும் என்று கருதினோம்.
ஆகவே, கோட்டையைச் சுற்றிப்பார்த்து விட்டுத் திரும்ப வருகையில் தேநீர் பருகுகிறோம் என்று எங்கள் மக்களிடம் தெரிவித்துவிட்டுக் கிளம்பினோம்.
அதற்கேற்ப எங்களது ஊர்தி ஓட்டுநரிடம் பயணத்தைத் தொடருமாறு நாங்கள் சொன்னோம். பயணம் தொடர்ந்த அடுத்த ஒரு சில நிமிடங்களிலேயே நாங்கள் கோட்டை வாசலின் முன் இருந்தோம்.
அது ரமலான் மாதம். முகமதியர்கள் நோன்பு கடைப்பிடிக்கும் மாதம். கோட்டையின் நுழைவாயிலுக்குச் சற்று வெளியே கழுத்துவரை நீர் நிரம்பித் தளும்பிக் கொண்டிருந்த சிறிய குளமொன்று உள்ளது. அதனைச் சுற்றி அகலமான கற்களாலான படித்துறை காணப்படுகிறது.
எங்கள் முகங்கள், உடல்கள், ஆடைகள் என எல்லாம் நீண்ட பயணத்தால் தூசு படிந்து போயிருந்தன. நாங்கள் அனைவருமே கை, கால்களைக் கழுவிவிட்டுச் செல்ல விரும்பினோம்.
ஒரு சில கட்சி உறுப்பினர்கள் சற்றும் சிந்திக்காமல், குளத்து நீரை எடுத்துத் தம் முகம், கை, கால்களைப் படித்துறையில் இருந்தபடியே கழுவிக் கொண்டார்கள். இவையெல்லாம் முடிந்தபின்பு கோட்டையின் நுழைவாயிலை எட்டினோம்.
உள்ளே ஆயுதந்தாங்கிய வீரர்கள் காணப்பட்டார்கள். பெரிய கதவுகளைத் திறந்து, வளைவிற்குள் எங்களை அனுமதித்தார்கள். அங்கே இருந்த காவலரிடம் கோட்டைக்குள் செல்ல எப்படி அனுமதி பெற வேண்டும் என்று கேட்கத் தொடங்கினோம்.
அதே கணத்தில், வெண்தாடி அலைபாய்ந்து கொண்டிருந்த வயதாள முதியவர் பின்னால் இருந்து, “இந்த டேட்கள் (நீண்டத்தகாதவர்கள் எனப் பொருள் குளத்தை அசுத்தமாக்கிட்டாங்க” என்று கத்திக்கொண்டே வந்தார்.
சீக்கிரமே சுற்றுப்புறத்தில் இருந்த இளவயது மற்றும் வயதான முகமதியர்கள் அவரோடு இணைந்து கொண்டு, “இந்த டேட்களுக்குத் திமிரைப் பாரு. இந்த டேட்கள் அவங்க மதத்தை மறந்துட்டானுங்க. (அதாவது தாழ்வானவர்களாக தரங்கெட்டவர்களாக இருப்பது) இவனுங்களுக்குப் பாடம் புகட்டியே ஆகணும்” என்று எங்களை வசைபாடினார்கள்.
அவர்கள் எங்களை மிக மோசமாக அச்சுறுத்தும் மனநிலையில் இருந்தார்கள்.
நாங்கள் ஊருக்குப் புதியவர்கள், உள்ளூாரின் பழக்க வழக்கங்கள் தெரியாது என்றோம்.
அப்போது நுழைவாயிலை வந்தடைந்திருந்த உள்ளூார்த் தீண்டத்தகாதவர்களை நோக்கி வெறுப்பு நெருப்பை உமிழத் துவங்கினார்கள்.
“இந்த வெளியூர் ஆளுங்க கிட்டே இந்தக் குளத்தைத் தீண்டத்தகாதவங்கப் பயன்படுத்தக் கூடாதுன்னு ஏன் நீங்க சொல்லல?” என்கிற கேள்வியைக் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.
பாவம் மக்கள்! நாங்கள் குளத்திற்குள் அடியெடுத்து வைத்தபோது அவர்கள் அங்கில்லை. யாரையும் விசாரிக்காமல் நாங்கள் குளத்தைப் பயன்படுத்தியது எங்கள் தவறு மட்டுமே. தாங்கள் ஒன்றும் தவறு இழைக்கவில்லை என்று வெளிப்படுத்தினார்கள்.
முகமதியர்கள் என்னுடைய விளக்கத்தைக் கேட்கத் தயாராக இல்லை. எங்களையும், உள்ளூர் மக்களையும் தொடர்ந்து திட்டிக்கொண்டே இருந்தார்கள்.
அவர்களின் வசைபாடல் எங்களை ஆவேசம் கொள்ள வைக்கிற அளவுக்கு கொச்சையானதாக இருந்தது. அங்கே சுலபமாக கலவரம் மூண்டு, சில தலைகள் உருண்டிருக்கக் கூடும். நாங்கள் எங்களை ஒருவாறு கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது.
அப்போது எங்களுடைய பயணத்தை மொத்தமாக முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய கிரிமினல் வழக்கொன்றில் சிக்கிக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை.
கூட்டத்தில் இருந்த ஒரு முஸ்லிம் இளைஞர் அவரவரின் மதக் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு ஒழுக வேண்டும் எனத் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார்.
நான் ஓரளவிற்குப் பொறுமை இழந்தவனாக, சற்றே கோபம்மிக்கத் தொனியில், “இதைத்தான் உங்கள் மதம் கற்பிக்கிறதா? தீண்டத்தகாத ஒருவன் முகமதியராக மதம் மாறிய பின்பும் அவரை இக்குளத்து நீரைப் பயன்படுத்த அனுமதிக்க மறுப்பீர்களா?” எனக் கேட்டேன்.
இந்த நேரடியான கேள்விக் கணைகள் முகமதியர்களிடம் சற்றே மாற்றத்தை ஏற்படுத்தியதாகத் தோன்றியது. அவர்கள் பதிலளிக்காமல் அமைதியாக நின்றார்கள்.
நான் காவலரை நோக்கி அதே சினம்மிக்கத் தொனியோடு, “கோட்டைக்குள் நாங்கள் போகலாமா, போக முடியாதா? நாங்கள் நுழையக்கூடாது என்று சொல்லிவிட்டால், இங்கே நிற்க விரும்பவில்லை” என்றேன்.
காவலாளி என்னுடைய பெயரைக் கேட்டுத் துண்டுக் காகிதத்தில் குறித்துக் கொண்டார். அதனை உள்ளே இருந்த கண்காணிப்பாளரிடம் கொண்டு போய்க் காட்டிவிட்டு வெளியே வந்தார்.
நாங்கள் கோட்டைக்குள் செல்லலாம். ஆனால், கோட்டைக்குள் எங்கேயும் தண்ணீரைத் தொடக்கூடாது என்றார்.
அந்த ஆணையை நாங்கள் மீறாமல் இருப்பதை உறுதி செய்யும் வண்ணம் ஆயுதம் ஏந்திய காவலர் ஒருவர் எங்களோடு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்துவிற்குத் தீண்டத்தகாதவராகத் திகழும் ஒருவர். பார்சிக்கும் தீண்டத்தகாதவரே என்பதற்கு ஒரு நிகழ்வை விவரித்தேன்.
இந்துவிற்குத் தீண்டத்தகாதவராகத் தெரியும் ஒருவர். முகமதியருக்கும் தீண்டத்தகாதவரே மேற்சொன்ன நிகழ்வு புலப்படுத்தியிருக்கும்.
– புரட்சியாளர் அம்பேத்கரின் ‘விசாவுக்காக காத்திருக்கிறேன்’ என்ற நூலிலிருந்து…
நீலம் வெளியீடு.
தமிழில் பூ.கொ. சரவணன்