மே 21- சர்வதேச தேநீர் தினம்
உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிக மக்களால் பருகப்படும் திரவம் தேநீர். டீ, சாய், தேயிலை தண்ணீர் உட்படப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டாலும், புத்துணர்ச்சியூட்டும் அதிசயம் என்றே டீ பிரியர்கள் சொல்வார்கள்.
நமது மனநிலையை நொடியில் மாற்றும் சக்தி டீக்கு உண்டு. காபி குடிக்கும் பழக்கம் இருந்தாலும், ஒருபோதும் அது டீ குடிப்பதற்கு ஈடாகாது. டீ வெறியர்களைப் பொறுத்தவரை அதற்கு இணையான ஒன்று இந்த உலகில் வேறில்லை.
சைனா ‘டீ’!
இந்தியாவின் வடகிழக்கு, சீனாவின் தென்மேற்கு, மியான்மர் பகுதிகளில் தேயிலை முதன்முதலாக விளைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அது பற்றிய உண்மைகள் முழுதாகத் தெரியாவிட்டாலும் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில் தேநீர் பயன்பாட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதிகமாகப் பலன் தரும் பணப்பயிர்களில் ஒன்றான தேயிலை இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படுகிறது.
குறிப்பாக வளரும் நாடுகள் அதிகம் இருக்கும் ஆப்பிரிக்காவிலிருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்கு வேலை வாய்ப்புக்கான முக்கியக் காரணமாகவும் விளங்குகிறது.
இந்தியாவிலும் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பே பெரும்பாலான மலைப்பகுதிகள் தேயிலைத் தோட்டங்களாக மாற்றப்பட்டன.
இன்றளவும் உயர்தர தேயிலை ஏற்றுமதி செய்யப்பட, மீதமுள்ளவை இங்குள்ள சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
சமத்துவ பானம்!
காபி குடிப்பதே அந்தஸ்தில் உயர்ந்தது என்று நினைப்பவர்கள் ஒருபுறமிருக்க, பலருக்குப் புத்துணர்ச்சியூட்டும் அருமருந்தாக விளங்குகிறது தேநீர்.
காபி கிளப் என்ற வார்த்தை பிரயோகம் முடங்கிவிட்ட இந்நாளில் ‘டீக்கடை’ என்ற சொல்லை எங்கும் காண முடிவதே இதற்குச் சாட்சி.
அன்றாட சமூக அரசியல் நிகழ்வுகளை பகிரும் இடமாகவும் சமத்துவத்தை வளர்க்கும் இடமாகவும் இருந்து வருகின்றன டீக்கடைகள்.
கண்ணாடிக் குவளைகளில் வேறுபாடு காட்ட விரும்புபவர்கள், இப்போது ஒருமுறை பயன்படுத்தத்தக்க காகிதக் குவளைகளின் பக்கம் கவனம் திருப்பினாலும் எவ்வித வேறுபாடுகளுக்கும் இடம் தராமல் கம்பீரத்துடன் இருக்கின்றன.
இது போல டீ கிளாஸ் பின்னிருக்கும் ஓராயிரம் அரசியல்களைப் புறந்தள்ளிவிட்டால், ஒரு தலைமுறையே பல அருமையான நினைவுகளை மீட்டெடுக்க முடியும்.
பள்ளி, கல்லூரி, தொழில்முறை நட்புகள் மற்றும் உறவுகளுக்கு அப்பாற்பட்ட பிணைப்புகளை அசை போட முடியும்.
சுழன்றடிக்கும் சுவை!
ஏலக்காய், கிராம்பு, பட்டை என்று பல்வேறு வாசனைப்பொருள்களை டீயில் கலந்தாலும் கலக்காவிட்டாலும், பால் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இனிப்புச் சுவையை சேர்த்தாலும் சேர்க்காவிட்டாலும், தேயிலையின் அடிநாதமாக இருக்கும் அடிப்படைச்சுவை என்றும் மாறாது. சூடாகப் பருக வேண்டும் என்பதற்கு மாறாக ‘ஐஸ் டீ’ குடிப்பவர்கள் கூட இதனை ஒப்புக்கொள்வார்கள்.
காரணம் ஒரு முறை டீயின் சுவையை ரசிக்கத் தொடங்கிவிட்டால் காலம்காலமாக அது நம் நாக்கில் சுழன்று கொண்டே இருக்கும்.
மே 21- சர்வதேச தேநீர் தினம். இந்நாளில் தேயிலையையும் அதனை விளைவிப்பவர்களையும் நினைவிலிருத்திப் போற்றுவோம்!
ரோஜாவை என்ன பெயர் சொல்லி அழைத்தாலும் அதன் மனம் மாறாது.
என்னதான் பல்வேறுபட்ட வகைகளில் டிஎன் தயாரித்தாலும் அதன் அடிப்படையான சுவை என்றும் மாறாது.
டிக்கி மருத்துவ குணங்களும் கூட உண்டு. சில நேரங்களில் உணவுக்குப் பதிலாக தீயையும் கொள்பவர்களும் உண்டு.
எல்லாவற்றுக்கும் அப்பால் வளரும் நாடுகள் பலவற்றில் வறுமையை விரட்டும் ஆயுதமாகவும் தேயிலை உற்பத்தி திகழ்கிறது.
இதனாலேயே ஐநாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மே 21-ஆம் தேதியை சர்வதேச தேயிலை தினமாக கொண்டாடி வருகிறது.
பருகப் பருக இன்பம்!
பிரிவைப் பற்றி பேசுவதை எழுதுவதைப் நினைப்பதை விட, ஒரு பாத்திரத்தில் அதனை நிரப்பி பருகும் அனுபவத்துக்கு இணை ஏதுமில்லை.
நாவைத் தொட்டு தொண்டைக்குழிக்குள் டி துளி இறங்குகையில் கண்ணை மூடிக்கொண்டால் பேரானந்தம் நம் முன்னே கைகட்டி நிற்கும்!
– பார்வதி நாதன்