வழக்கமான சினிமா பேட்டிகளில் சக நடிகர் நடிகைகள், அவர்களது பெருமைகள், பெருந்தன்மைகள் தாண்டி சம்பந்தப்பட்ட படத்தின் கதையையோ அல்லது அதற்காக மெனக்கெட்ட விதத்தையோ சிலாகித்திருப்பதை மட்டுமே காண முடியும்.
மாறாக, சில நேரங்களில் சாதாரண பேட்டிகளில் கூட சினிமா சிறப்பிதழுக்கான உள்ளடக்கம் வெளிப்படக் கூடும்.
‘தி நியூஸ் மினிட்’ தளத்தில் நடிகை ரஜீஷா விஜயன் பற்றிய கட்டுரையைப் படித்தபோது, அப்படியொரு எண்ணம் உண்டானது.
கலைப்புலி தாணு தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், நட்டி உள்ளிட்டோர் நடித்த ‘கர்ணன்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் ரஜீஷா. அதன்பிறகு தா.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய்பீம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
2016இல் ‘அனுராக கரிக்கின் வெள்ளம்’ திரைப்படத்தில் அறிமுகமானாலும் ‘பைனல்ஸ்’, ‘ஜூன்’, ’ஒரு சினிமாக்காரன்’, ‘ஸ்டேண்ட்அப்’, ‘லவ்’ உட்பட சில படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.
ஆனால், அனைத்திலும் அவரது நடிப்பு ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் சக கலைஞர்களாலும் கொண்டாடப்படுகிறது.
‘பரியேறும் பெருமாள்’ பார்த்துவிட்டு மாரி செல்வராஜ் ரசிகையானவர், தானு அலுவலகத்தில் இருந்து கர்ணன் பட வாய்ப்பு வந்ததும் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
“இயக்குனர் மாரி செல்வராஜ் தனது கலையாக்கத்தின் மூலமாக, சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க விரும்புகிறார். அவர் ஒரு சிறந்த கதை சொல்லி என்று தெரியும்.
அவரது வார்த்தைகள் சக்திமிக்கதாக இருந்தாலும், அவர் காட்சிகளையும் பயன்படுத்துகிறார்.
திரையில் ஒரு மாயையை, தனக்கான அரசியலை வெளிப்படுத்த விரும்புகிறார். மாற்றத்தைப் பற்றி பலர் பேசினாலும், அதனைச் செயல்படுத்திக் காட்டுவது வெகு சிலர்தான்.
மக்களுடன் பிணைப்பில் இருக்க சினிமா ஒரு சக்திவாய்ந்த ஊடகம். சாதாரண மக்களும் கூட அடிப்படை கருத்தாக்கத்தைப் புரிந்துகொள்வார்கள்.
சாதீயம் பற்றி மணிக்கணக்கில் பேசினாலும், சினிமாவில் அதனை வெளிப்படுத்தும்போது எல்லோரிடமும் பலமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
சினிமாவில் ஒலி, காட்சி, இசை, பாடல், நடனம் என்று பல கலைகளில் உச்சம் தொட முடியும் என்பதால், அது சக்திமிக்கதாக உள்ளது.
தான் முன்வைக்கும் கருத்தில் மட்டுமே நிற்காமல், இத்திரைப்படத்தை அழகாக உருவாக்கியிருக்கிறார்” என்று இயக்குனர் மாரி செல்வராஜின் திறமையை மெச்சும்படி பேசுகிறார்.
கர்ணன் படத்தில் டப்பிங் பேச நினைத்தும் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்கிறார் ரஜீஷா.
“கர்ணன் படம் முழுக்க தமிழ்நாட்டின் தெற்குப்பகுதியில் (திருநெல்வேலி) நடக்கிறது. அங்குள்ள வட்டாரத் தமிழ் தனித்துவமான பேச்சுவழக்கைக் கொண்டது என்பதால், எங்களில் சிலர் டப்பிங் பேசவில்லை.
சென்னைத் தமிழாக இருந்தால் நானே பேசியிருப்பேன்” என்று அதற்கான காரணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நிறைய படங்களில் நடிப்பதைவிட தரமான படங்களில் நடிப்பது என்றிருக்கும் ரஜீஷா, ”எனது உண்மையான பெயரை மறந்துவிட்டு, நான் நடித்த கதாபாத்திரங்களின் பெயரை வைத்து அடையாளம் கண்டாலும் மகிழ்ச்சியடைவேன்” என்கிறார்.
தான் நடிக்கும் படங்களில் ஸ்கிரிப்ட் படித்துவிட்டு ஒப்புக்கொள்ளும் வழக்கத்தையும் கொண்டிருக்கிறார்.
“சவால் இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை? அதனால், சவால்மிக்க பாத்திரங்களிலேயே நான் நடிக்கிறேன். ஏதாவது கற்றுக்கொள்ள முடிகிற அல்லது வேறுபட்டு தோற்றமளிக்கிற பாத்திரங்களை விரும்புகிறேன்.
எனது வாழ்க்கையில் செய்யும் வேலையே பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது. ஆதலால், அது ஒரேமாதிரியாக இருப்பதை நான் விரும்பவில்லை.
ஒரு படத்திற்கு ஸ்கிரிப்ட்தான் முதுகெலும்பு. அதன்பின் வசனங்களில் மேம்படுத்துவது, எடுக்கும் விதம் மற்றவை எல்லாம் வரும்.
ஆனால், அந்த ப்ளூப்ரிண்டை பார்க்க விரும்புகிறேன். இரண்டாவது, திரையில் எனக்கு கிடைக்கும் நிமிடங்களை பற்றி நான் கவலைப்படுவதே இல்லை.
ஒரு படத்தில் எனது பாத்திரத்தை கழித்தால் என்ன மிச்சமிருக்கிறது என்று பார்ப்பேன். அதுவே, அப்பாத்திரத்தின் முக்கியம் என்னவென்பதைச் சொல்லிவிடும்.
மூன்றாவது, இதற்கு முன் ஏற்ற பாத்திரங்களை விட வித்தியாசமானதாக இருக்க வேண்டுமென்று நினைப்பேன்” என்கிறார்.
அதேபோல, ஒரு கதாபாத்திரத்தை வேறுபடுத்த என்னதான் காஸ்ட்யூம்களும் மேக்கப்பும் உதவினாலும், சம்பந்தப்பட்டவரின் உடல்மொழி மட்டுமே நிச்சயமான வேறுபாட்டைக் காண்பிக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறார் ரஜீஷா.
“மேக்கப்பையும் காஸ்ட்யூமையும் குறைத்து மதிப்பிடாவிட்டாலும், எனது உடல்மொழி சரியாக இல்லாவிட்டால் குறிப்பிட்ட வயது திரையில் தென்படாது. ஒரு பள்ளி மாணவியாக நடிக்க ஸ்கூல் யூனிபார்ம் மட்டுமே போதாது.
‘ஜூன்’ படத்தில் மாணவியாக நடிக்கும்போது வேறுமாதிரியாக நடப்பேன். கல்லூரி முடித்தபின்பும், அதற்குப் பின் திருமணமாகும் காட்சியிலும் வேறு மாதிரியாக நடந்திருப்பேன்.
ஒவ்வொரு வயதிலும் நீங்கள் எத்தனை அடிகள் எடுத்து வைக்கிறீர்கள் என்பது மாறுபடும்.
இப்படிப்பட்ட சின்னச்சின்ன விஷயங்கள்தான் வேறுபாட்டை காண்பிப்பதாக நினைக்கிறேன்” என்று ரஜீஷா சொல்லும்போது அவர் நடித்த கதாபாத்திரம் கண் முன்னே வருகிறது.
ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பிற்காக ‘ஹோம் ஒர்க்’ செய்யும் வழக்கமுள்ள ரஜீஷா, கர்ணன் படத்திற்காக 10 நாட்கள் முன்னதாகவே படப்பிடிப்பு நடக்குமிடத்துக்குச் சென்றிருக்கிறார்.
“திருநெல்வேலியிலுள்ள மக்கள், கலாசாரம், அவர்கள் தோற்றமளிக்கும் விதம் என்று எதுவும் தெரியாது. வெறுமனே அவர்களை போன்று ஆடையணிந்துகொண்டு அந்த இடத்தைச் சுற்றி வந்தேன்.
தோல் நிறம் மாறுவதோ, அந்த ஆடைகளை அணிவதோ விஷயமல்ல. அந்த இடத்தில் ஒரு பெண் எப்படி நடக்கிறார், பேசுகிறார் என்பது உட்பட எல்லாமே முக்கியம். அதே மீட்டரில் வசனம் பேசாவிட்டால், டப்பிங்கில் அதனை சரி செய்ய முடியாது” என்று அதற்கான காரணத்தை விளக்குகிறார்.
சமகால மலையாள நடிகைகளில் பார்வதி, நிமிஷா சஜயன் போன்றோரை பிடிக்கும் என்று சொல்லும் ரஜீஷா, ‘800’ எனும் முத்தையா முரளிதரன் குறித்த வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கத் தேர்வானவர்.
அப்படம் குறித்த கேள்விக்கு, தற்போது அப்பட நிறுவனத்துடன் தொடர்பில் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
“எனக்குத் தெரியாத விஷயத்தைப் பற்றி இதற்கு மேல் எதுவும் பேசக்கூடாது” என்றிருக்கிறார்.
சினிமா, நடிப்பு, சக கலைஞர்கள், தயாரிப்பு தொடர்பான சர்ச்சைகள் என்று பல விஷயங்களில் தெளிவுடன் சிந்தித்துப் பேசும் ரஜீஷா, இதுவரை சுட்டித்தனமிக்க பாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருப்பது முரணான விஷயம்தான்.
-உதய் பாடகலிங்கம்