கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தை சேர்ந்தவர்கள் கஸ்தூரி – அருள்மூர்த்தி தம்பதியினர். இவர்களது மகன் கீர்த்தி வர்மா. இவர் நான்கு வயதில் வீட்டின் மாடியில் விளையாடியபோது எதிர்பாராத விதமாக வீட்டை ஒட்டி சென்ற மின் கம்பியை பிடித்துள்ளார்.
அப்போது மின்சாரம் தாக்கி கீர்த்தி வர்மா தனது இரண்டு கைகளையும் இழந்துள்ளார். மகனின் இந்த நிலையை கண்ட அருள்மூர்த்தி வீட்டை விட்டு சென்று விட்டார்.
இதனால் எந்த ஆதரவும் இல்லாததால் கஸ்தூரி, இரண்டு கைகள் இல்லாத மகனுடன் வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஜீனூர் கிராமத்தில் தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து கூலி வேலை செய்து மகனை படிக்க வைத்தார்.
இரண்டு கைகளும் இல்லை என்றாலும் தன்னம்பிக்கையை கைவிடாத கீர்த்தி வர்மா நெடுமருதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தார்.
இந்த நிலையில் நேற்று வெளியான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவன் கீர்த்தி வர்மா 437 மதிப்பெண்கள் எடுத்து பள்ளி அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இரண்டு கைகள் இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கையுடன் போராடி சாதனை படைத்த மாணவனை அவரது தாய் கஸ்தூரி மற்றும் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
மாற்றுத்திறனாளி மாணவர் கீர்த்தி வர்மாவின் சாதனையை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கீர்த்தி வர்மாவின் தாயாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், அந்த மாணவனுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும், உயர்கல்வி படிப்பதற்கான உதவிகளையும் அரசு செய்து தரும் என உறுதி அளித்தார்.