மழைநீர் வடிகால் பணிகளை இரவு நேரத்தில் செய்க!

– ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி வேண்டுகோள்

தமிழகத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கிறது. சென்னையில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இதனால் பகல் நேரத்தில் மக்கள் வெயிலால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சென்னையில் தற்போது மழை நீர் வடிகால் பணி நடந்து வருகிறது. இந்தப் பணி பகல் நேரத்தில் செய்யப்பட்டு வருகிறது. பகல் நேரத்தில் பணி நடப்பதால் வெயிலால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

பகல் நேரத்தில் வெப்பம் அதிகரித்து வருவதால் தொழிலாளர்கள் வெயிலால் பாதிக்கப்படாத வகையில் இரவு நேரங்களில், மழை நீர் வடிகால் பணிகள், சாலைப் பணிகளை மேற் கொள்ளுமாறு அனைத்து ஒப்பந்ததாரர்களையும் சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், “இரவில் தொடங்கும் பணிகளை காலை 11 மணிக்குள் முடிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்கு எலக்ட்ரோல் பானம் வழங்க வேண்டும். வெப்ப அலை அதிகமாக இருக்கும் நேரத்தில் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு இடையிடையே போதிய ஓய்வு வழங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதேபோல் அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பினர் கூறும்போது, வெப்ப அலையால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க தனியார் கட்டுமான துறையினர் வேலை நேரத்தை மாற்ற வேண்டும்.

தொழிலாளர்களுக்கு குடிநீர், மோர், குளுக்கோஸ் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

தொழிலாளர்களுக்கு வெயிலின் தாக்கத்தால் தலை சுற்றல், மயக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாநகராட்சியின் முயற்சி வரவேற்கத்தக்கது.

ஆனால் அது முறையாக அமல்படுத்தப்படுமா? என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தொழிலாளர்களுக்கு ஓய்வு தேவை.

அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கும் இதற்கு உரிமை உண்டு. இல்லயென்றால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வாழ்வாதார இழப்புக்கு வழிவகுக்கும் என கூறியுள்ளனர்.

நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment