எப்படி ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை. நான் தாம்பரத்தைக்கூட தாண்டுவதில்லை. என்னையும் இந்த உலகம் பயணி என்று நம்புகிறது.
இன்று வெயில் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கும். அன்று காலையில் வெளுத்து வாங்கியது சூப்பர் வெயில்.
காலை 7.15 மணிக்கு கோடம்பாக்கத்தில் மின்சார ரயில். அடுத்து கட் செய்தால் 8.15 க்கு சிங்கப் பெருமாள்கோயில். யூ டியூப் வீடியோ படப்பிடிப்பு.
ரயில்வே ஸ்டேசனில் இருந்து வெளியே வரும் சாலையில் முனியான்டி விலாஸ்.
சுவையான பொங்கல் வடை. சக்தியும் பிரவீனும் சூடாக இட்லி சாப்பிட்டார்கள்.
அப்படியே நிமிர்ந்து பார்த்தால், ரயில்வே கேட்டில் பார்வைக்கு எட்டும் தூரம் வரையில் வாகன வரிசை. இப்படித்தான் தினமும் என்றார் நண்பர் சங்கர்.
கொஞ்ச தூரம்தான் குறுகலான சாலை. அடுத்த சில நிமிடங்களிலேயே பரந்து விரிந்த நெடுஞ்சாலை.
சில மாதங்களில் பைபாஸ் சாலை திறக்கப்படும் என்ற நம்பிக்கையான செய்தியும் இருக்கிறது. நாங்கள் சாஸ்திரம்பாக்கம் கிராமத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய கிராமம் வில்லியம்பாக்கம் அங்குதான் இருக்கிறது. வீடுகளைப் பார்த்தால் சிறு நகரம்போலவே தெரிந்தது.
புதிய நிலப்பரப்பு, வறண்ட நிலப்பகுதி, அதற்கடுத்து நெல் விளையும் பூமி, தூரத்தில் சிறு மலை என குறிஞ்சி, பாலை, மருதம் என மூவகை நிலங்களை சென்னைக்கு அருகில் தரிசிக்கும் வாய்ப்பு. வேகமாக நகர்மயமாகும் பகுதி.
அங்கு சென்னைக்கு மிக அருகில் என விளம்பரங்களுக்கும் பஞ்சமில்லை. அறுவடை முடிந்த வயல்வரப்புகளில் நடந்து மல்லித் தோட்டம் சென்றோம்.
ஒற்றை ஆளாக மல்லிகை விவசாயம் செய்துவருகிறார் அந்தப் பெண்மணி.
நோய்கள் அதிகம், மருந்தடிக்க செலவழிக்கும் பணம்கூட கிடைக்கவில்லை என்று வருந்தினார். இப்படி பல பிரச்னைகளுக்கு இடையிலும் விவசாயம் தொடர்கிறது.
நண்பகல் நெருங்கிய வேளை. குறுக்குப் பாதையில் பரந்துகிடந்த வறண்ட செம்மண் பரப்பில் நடந்தோம். அங்கே 100 நாள் வேலையில் பெண்கள் ஓய்வாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
கொஞ்ச தூரத்திலேயே மரங்களும் வயல்களுமாக பசுமையின் ஆட்சி. வெயில்கூட பெரிதாகத் தெரியவில்லை. கோடையிலும் ஏரி மடுவில் நீரோட்டம். மூன்று ஏக்கரில் நெல் பயிரிட்டிருந்த உமாபதியை சந்தித்தோம்.
கடந்த 20 ஆண்டுகளாக விவசாயம். ஆள் கூலியும் மருந்து செலவும் அதிகம் என்றார். அந்த இழப்பை சற்று ஈடுகட்டுவதற்காக சிறிய அளவில் மல்லிகைத் தோட்டம் வைத்திருக்கிறார்.
அறுவடைக்கு தயாராக நெற்கதிர்கள் மஞ்சள் பூத்திருந்தன. ஏதோ சொந்த ஊருக்கு வந்ததுபோல இருந்தது. நீரும் மோருமாக தந்து தாகம் தீர்த்ததுடன் மதியம் பசியும் தீர்த்து அன்புடன் உபசரித்து அனுப்பினார் சங்கர்.
மதியம் 3 மணி. சிங்கப்பெருமாள்கோயில் ரயில்வே ஸ்டேசனில் காத்திருந்தோம்.
ரயில் வரும் நேரத்தில் அதிக கூட்டம் கூடியிருந்தது. எங்கிருந்து வந்தார்கள் என்றே தெரியவில்லை. மீண்டும் கோடம்பாக்கம் வந்தபோது வெயில் வெகுவாக குறைந்திருந்தது. காரணம் மாலை. பயணங்களுக்குத் தூரமா முக்கியம். மனம் அடையும் மகிழ்ச்சிதானே அவசியம்.
நன்றி: சுந்தரபுத்தன்