பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்த பெங்களூரு அணி!

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி திடலில் நேற்று நடைபெற்ற 65-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா 11 ரன்களிலும், ராகுல் திரிபாதி 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் ஆடிய கிளாசன் அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார்.

கடைசி கட்டத்தில் ஹாரி புரூக் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்களை குவித்தது.

இதையடுத்து, 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. இதில், அதிகபட்சமாக விராட் கோலி 63 பந்துகளில் சதம் அடித்து ஆட்டம் இழந்தார். டூ பிளெஸ்ஸி 71 ரன்கள் எடுத்தார்.

மேக்ஸ்வெல் 5 ரன்களும், பிரேஸ்வெல் 4 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் விளையாடினர். ஆட்டத்தின் முடிவில், பெங்களூரு அணி 19.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது.

இதன் மூலம், 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி ஐதரபாத்தை வீழ்த்தி வெற்றிப் பெற்றது. இதன்மூலம் 14 புள்ளிகள் பெற்று 4வது இடத்திற்கு முன்னேறிய பெங்களூரு அணி, பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

Comments (0)
Add Comment