– உச்சநீதிமன்றம் தீர்ப்பு
ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் தமிழ்நாடு அரசு அளித்த ஆவணங்கள் எங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் உள்ளன என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை பகுதியில் அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றவை.
இதுதவிர பல மாவட்டங்களில் கோவில் விழாக்களையொட்டியும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்தது.
இதற்கிடையே நீதிமன்ற உத்தரவால் ஜல்லிக்கட்டுக்கு இடையில் தடை ஏற்பட்டது. இதை கண்டித்து பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராடினர்.
தமிழ்நாடு அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்தது. இதன் காரணமாக தற்போது தமிழர் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த மனுக்களை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு நவம்பர் 23-ம் தேதி விசாரிக்கத் தொடங்கியது.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவுசெய்து கொண்ட அரசியல் சாசன அமர்வு, மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி ஒத்தி வைத்தது.
இந்நிலையில் இந்த மனுக்கள் மீதான வழக்கு நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தீர்ப்பை வாசித்த நீதிபதிகள், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை என்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு அளித்த ஆவணங்கள் எங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் உள்ளன என்றும் பண்பாட்டின் ஒரு பகுதியாக அறிவித்த பிறகு நீதிமன்றம் அதில் தலையிட முடியாது என்றும் கூறினர்.
தமிழக அரசின் சட்டத்திருத்தம் அடிப்படை உரிமைகளை மீறவில்லை எனக் கூறிய நீதிபதிகள், அவை சட்ட விதிகளுக்கு உட்பட்டே உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.