முள்ளிவாய்க்கால்: மீளாத்துயரின் மீள் நினைவுகள்!

இன்னும் உலகளாவிய தமிழர்கள் மத்தியில் ஆறாத ரணம். ஈழத்தமிழர்கள் மத்தியிலோ மனதில் பதிந்திருக்கும் வலியுடன் கூடிய அழுத்தமான வடு.

காலம் தாழ்ந்தும் இலங்கையில் மிகவும் கொடூரமாக நடந்த இன அழிப்புக்கு உரிய நீதி இன்னும் வழங்கப்படவில்லை.

சர்வதேச அளவில் பல முறை தங்கள் குரலை எடுத்துச் சென்றும், அந்தக் குரல்களுக்கு உரிய எதிர்வினை இன்று வரை இல்லை.

வல்லரசுகளின் காதிலோ அல்லது வல்லரசாகத் தங்களைக் கருதிக் கொண்டிருக்கும் நாடுகள் மத்தியிலோ ஏன் எம் தமிழரின் துயரமும் கொடுமையும் படவில்லை?

விடுதலைக் குரலைப் பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்புடன் ஏன் இப்படி ஒடுக்கினார்கள் மனித உரிமை பற்றிப் பேசும் நாடுகள்?

– இப்படிப் பல கேள்விகளுக்கு இன்னும் கால வெளியில் பதில் இல்லை.

இனப் பாகுபாட்டால் எழுந்த ஒடுக்குமுறையால் பல்வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்கள் நாற்றுக்களைப் போலத் தான்.

அங்கங்கே சென்ற நாடுகளில் எல்லாம் தங்கள் மொழி, இன அடையாளத்துடன் வளர்த்திருக்கிறார்கள். தங்கள் அடையாளமான தமிழ் மொழியையும் பரவலாகக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

இந்தச் சூழலில் மறுபடியும் பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் வெளியிட முயன்று பல பிரச்சினைகளால் சிக்கல்களைச் சந்தித்த இந்த நூலைக் கொண்டு வந்திருக்கிறோம்.

அன்றைய ஆவணங்களைக் காலத்தின் இன்னொரு பக்கத்திற்குக் கொண்டு வரும் சிறு முயற்சியே இது.

இவை நேற்றையப் பதிவுகள் என்றாலும், கால ஓட்டத்தில் தமிழ்ச்சமூகம் மறந்துவிட முடியாத பதிவுகளும் கூட.

தமிழகத்தில் தஞ்சை விளாரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பல இடர்ப்பாடுகளுக்கிடையே உருவானபோது, அந்த விழாவுக்கு உருவாக்கப்பட்ட இந்த நூலுக்காக ஓராண்டுக்கு மேலாக உழைப்பு தேவைப்பட்டது.

அன்றைய செய்தித்தாள்கள், பத்திரிகைகள், நூல்கள், பேச்சுகள், பலருடைய நேர்காணல்கள் என்று அனைத்தையும் சில நண்பர்களுடன் சேர்ந்து பதிவு செய்தோம். இந்தப் பதிவுகளில் எந்தப் பாரபட்சமும் இல்லை.

அன்றைய யதார்த்தம் சார்ந்த பதிவுகள் இவை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கூடவே காட்சிபூர்வதாகவும் ஆவணப்படமாகக் கொண்டு வந்தோம். அதை இந்த நூலுடன் இணைப்பாக வழங்கியிருக்கிறோம்.

இதற்குத் தூண்டுதலாக இருந்தவர் முனைவர் ம.நடராசன் அவர்கள். இதை எந்தப் பொருளாதார நோக்கம் சார்ந்தும் நான் பண்ணவில்லை. அன்று பதிவு பண்ணினோம்.

தற்போது திரும்பவும் கொண்டு வந்து உங்கள் பார்வைக்கு வைத்திருக்கிறோம்.

தமிழரின் எழுச்சியையும், முக்கியமான வீழ்ச்சியையும் ஆய்வு செய்ய முயலும் யாருக்காவது இந்த நூலில் உள்ள செய்திகள் பயன்பட்டாலே போதும்.

ஆனால் நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்தவர்கள் அப்படியே சரிந்திருப்பதில்லை. வீழ்த்த வைத்த சூழல் மீண்டும் எழவும் வைக்கும்.
இது தான் தமிழ் உயிர்கள் புதைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மண் நமக்கு உணர்த்தும் நம்பிக்கை.

பரிதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட “முள்ளிவாய்க்கால் – குருதி தோய்ந்த குறிப்புகள்” நூலுக்கான முன்னுரை.

மணா

Comments (0)
Add Comment