நடிகராக இருப்பதே மனதுக்கு நெருக்கமானது!

நடிகர் பசுபதி நெகிழ்ச்சி

தமிழ் சினிமாவில் வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை எனப் பல வகையான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் விமர்சகர்களின் பெரும் மதிப்பைப் பெற்றிருப்பவரான பசுபதிக்கு இன்று பிறந்தநாள் (மே-18)

மேடை நாடகங்களில் நடித்து சினிமாவுக்கு வந்தவர் பசுபதி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் நடிப்பதற்கு முன்பு கூத்துப்பட்டறையில் வளர்ந்தார்.

வாழ்க்கையிலும் சரி, தொழிலும் சரி, தனக்கு தனி இடம் வேண்டுமென நினைப்பவர் பசுபதி. எந்தக் கதாபாத்திரத்தைக் கொடுத்தாலும் அதை வெகு சிறப்பாக உள்வாங்கி கச்சிதமாக வெளிப்படுத்துவதுதான் பசுபதியின் சிறப்பு.

கிராமத்து எளியவர், சிறு நகரத்து மனிதர், பெருநகர பிரபலம், ரவுடி, தாதா, ஆசிரியர், மருத்துவர் என எப்படிப்பட்ட கதாபாத்திரத்தின் பின்னணி, சூழல், மண் சார்ந்த பழக்கவழக்கங்கள், உடல்மொழி என அனைத்தையும் சிறப்பாக பிரதிபலிப்பவர் பசுபதி.

அந்த வகையில் கூத்துப்பட்டறை நிறுவனரான எழுத்தாளரும் மாபெரும் நாடக ஆளுமையுமான ந.முத்துசாமியின் பெருமைக்குரிய சீடர்.

கூத்துப்பட்டறையில் அங்கம் வகித்த நடிகர் நாசர் மூலமாக பசுபதிக்கு கமல்ஹாசனின் அறிமுகம் கிடைத்தது. கமலின் பிரம்மாண்டக் கனவுப் படைப்பான ‘மருதநாயகம்’ படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கத் தொடங்கினார் பசுபதி.

ஆனால் அந்தப் படம் நின்றுபோனது. நாசர் இயக்கி நடித்த ‘மாயன்’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார் பசுபதி. ‘ஹவுஸ்புல்’, ‘தூள்’, ’இயற்கை’, ‘அருள்’ என பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் 2004-ல் கமல் தயாரித்து இயக்கி நடித்த ‘விருமாண்டி’ படம்தான் பசுபதியின் திரை வாழ்வில் முக்கியத் திருப்பமாக அமைந்தது.

அதன் பிறகு தொடர்ந்து ‘சுள்ளான்’, ‘மதுர’, ‘திருப்பாச்சி’ ஆகிய படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து வந்தவர் கமலின் ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படத்தில் நகைச்சுவை கலந்த வில்லனாக நடித்தார்.

‘மஜா’ படத்தில் நாயகன் விக்ரமுக்கு இணையான வேடத்தில் வடிவேலுக்குப் போட்டியாக நகைச்சுவையில் பட்டையைக் கிளப்பினார்.

விருதுநகர் மக்களின் அனல் நிறைந்த வாழ்க்கையின் அசல் பதிவாக அமைந்த இயக்குநர் வசந்தபாலனின் ‘வெயில்’ படத்தில் மையக் கதாபாத்திரத்தில் நடித்து விமர்சகர்கள் அனைவராலும் பாராட்டப்பட்டார்.

எஸ்.பி.ஜனநாதனின் ‘ஈ’ படத்தில் நடித்ததற்காகச் சிறந்த துணை நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதையும் தமிழக அரசின் விருதையும் பெற்றார்.

பொதுவாக கதாநாயகனாக நடித்து முதல் படம் வெற்றிபெற்றுவிட்டால் பலரும் தொடர்ந்து நாயக வேடத்திலேயே நடிக்க விரும்புவார்கள்.

ஆனால் ’வெயில்’ படத்துக்குப் பிறகு அதேபோல் நாயகனாக நடிப்பதற்குத் தேடி வந்த வாய்ப்புகளை மறுத்தார்.

நட்சத்திரமாக இருப்பதைவிட நடிகராக இருப்பதே மனதுக்கு நெருக்கமானது என்று பலர் கூறினாலும் அந்தக் கூற்றை உண்மையாகப் பின்பற்றும் மிகச் சிலரில் ஒருவர் பசுபதி.

பசுபதியை நிறைய திரைப்படங்களில் பார்க்க முடிவதில்லை என்பது நடிகர்களின் ஏக்கமாக இருக்கிறது. ஆனால் அவரோ தன் மனதுக்கு பிடித்த நல்ல வேடங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். இதைப் பல பேட்டிகளில் அவரே கூறியிருக்கிறார்.

சிறந்த நடிகரான பசுபதிக்கு அவர் விரும்பும் கதாபாத்திரங்கள் அமைய வாழ்த்துவோம்.

நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment