மல்யுத்த வீராங்கனைகளிடம் மல்லுகட்டும் பாஜக!

பேச்சு என்பதே இல்லை. வசவுகள், அடி, உதைகள் என்ற ரீதியிலான ஒரு மனிதர் தான் பிரிட்ஜ் பூசன்! ரவுடித் தனம், கட்டப் பஞ்சாயத்திற்கு பேர் போனவர்.

இவருக்கு பதவிக்கு மேல் பதவிகள் தந்தது பாஜக! இவர் மல்யுத்த வீராங்கனைகளிடம் தவறாக நடந்தார்! வெகுண்டு எழுந்தனர். பாஜக அரசு இவரை பாதுகாப்பதன் காரணம் என்ன?

இந்தியாவிற்கு உலக அளவில் பெருமை சேர்த்துக் கொடுத்த மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் என்ற இடத்தில் 23 ஏப்ரல் 2023 முதல் இரவு பகலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பல வருடங்களாக கொடூரமான பாலியல் தொந்தரவுகளை கொடுத்து வந்தார் என்ற புகார்களின் அடிப்படையில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் (president of wrestlers federation of India) பிரிட்ஜ் பூசன் சிங்கின் பேரில் குற்றவியல் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை. பாஜகவின் பாராளுமன்ற உறுப்பினரான பிரிட்ஜ் பூஷன் சிங் மிகுந்த அரசியல் செல்வாக்கு உள்ளவர்.

ஏற்கனவே, ஜனவரி 2023 இந்த வீராங்கனைகள் போராட்டத்தை தொடங்கிய போது, ”விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், நான் உரிய நடவடிக்கை எடுக்கிறேன். கவலைப்படாதீர்கள்” என வாக்குறுதி தந்ததன் அடிப்படையில் போராட்டத்தை கைவிட்டனர்.

அரசு இந்த புகார்கள் பற்றி விசாரிக்க ஐவர் குழுவை அமைத்தது. அந்த குழுவும் 5 ஏப்ரல் 2023 அன்று ஒரு அறிக்கையை ஒன்றிய அரசுக்கு சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் விவரம் என்னவென்று தெரியவில்லை.

காரணம், அந்த அறிக்கை வெளியிடப்படப்படாமல் ரகசியப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பாஜக அரசு குற்றவாளியை காப்பாற்றுவது நன்கு தெரிகிறது.

இந்நிலையில் 21, ஏப்ரல் 2023 அன்று பல புகார்களை டெல்லி காவல்துறையிடம் பாதிக்கப்பட்ட வீராங்கனைகள் அளித்தனர். ஆனால், டெல்லி காவல்துறை அந்த புகார்களை முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்யவில்லை.

எனவே, 23 ஏப்ரல் 2023 முதல் மல்யுத்த வீராங்கனைகள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் மீண்டும் தொடர் போராட்டத்தை தொடங்கினர். அவர்கள் இரவு பகலாக அந்த இடத்தில் அமர்ந்து போராடுவது இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் கவனம் பெற்றுள்ளது.

இந்த போராட்டத்தில் முன்னணியில் இருக்கக் கூடிய மூன்று பெண் வீராங்கனைகளும் – சக்ஸி மாலிக், வினேஷ் போக்கட், ரவிக்குமார் தயா- மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியாவும் உலக அளவில் புகழ்பெற்ற மல்யுத்த வீரர்கள். இவர்கள் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக பதக்கம் வென்றவர்கள்.

விளையாட்டுக்காக இந்திய அளவில் அளிக்கப்படும் உயரிய விருதான கேள்ரத்னா விருது பெற்றவர்கள். அர்ஜுனா விருது பெற்றவர்கள். சிலர் பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள். இப்போது ஆளும் பாஜக அரசே மேற்படி விருதுகளை இவர்களுக்கு வழங்கி உள்ளது.

ஆனால், இவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் வழங்க முன் வரவில்லை. காரணம், குற்ற செயல் செய்தவர் என்று மல்யுத்த வீராங்கனைகளால் குற்றம் சாட்டப்படுபவர் அவர்களது கட்சியைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் என்பதும், அவரது ஜாதி பின்புலமும் தான்.

23 ஏப்ரல் 2023 முதல் தொடர் போராட்டத்தை தொடங்கிய வீராங்கனைகள் உச்ச நீதிமன்றத்தையும் அணுகினர். முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை என்றும், அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் நீதிமன்றத்தை அணுகினர்.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திர சூட் அவர்களின் அமர்வின் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது . குற்றச்சாட்டுகள் மிகவும் கடுமையானதாக இருக்கிறது என்று கருத்தை தலைமை நீதிபதி வெளிப்படையாக தெரிவித்தார். இவை ஏன் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்படவில்லை என்று கேள்வியையும் எழுப்பினார்.

இதற்கு ஒன்றிய அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்ட பதில், ஆச்சரியம் அளிக்கக் கூடியது .முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு முன் முதல் கட்ட விசாரணை (preliminary enquiry) செய்ய வேண்டியுள்ளது என்று கூறினர்.

எதற்காக ஆச்சரியம் என்று கூறுகிறோம் என்றால், முதல் கட்ட விசாரணை என்பதை 4 மாதங்கள் செய்யக்கூடாது. ஓரிரு நாட்களில் அல்லது ஓரு வாரம் போதுமானது. ஆக, காலம் கடத்தி ஆறப் போட்டால் போராட்டம் பிசுபிசுத்துவிடும் என நினைத்திருக்கிறார்கள் போலும்!

உச்சநீதிமன்றம் எப்.ஐ.ஆர் ஏன் பதிவு செய்யவில்லை எனக் கூறிய நிலையில் வேறு வழி இன்றி, அரசு தரப்பில் 28, ஏப்ரல் 2023 அன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. எனவே, உச்சநீதிமன்றம் 4 மே 2023 அன்று வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தது.

போராட்டக்காரர்களின் தரப்பில், ‘முதல் தகவல் அறிக்கை பேரில் நடைபெறும் புலன் விசாரணையை கண்காணிக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்தது.

”புலன் விசாரணை முறையாக நடைபெறவில்லை என்று கருதினால், உரிய நிவாரணத்தை டெல்லி உயர்நீதிமன்றத்தில் கோரலாம்” என்று கூறியது உச்ச நீதிமன்றம்.

மேலும், ‘முதல் தகவல் அறிக்கை பதியவில்லை என்பதும், அவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதும் தான் வழக்கின் கோரிக்கை’ என்றும், ‘இந்த கோரிக்கை இரண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும்’ கூறி வழக்கை முடிவு செய்தது.

போராட்டக்காரர்கள் எதிர்பார்த்ததைப் போன்று புலன்விசாரணை சரியான திசையில் செல்லவில்லை. முதற்கட்டமாக குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்திருக்க வேண்டும். ஆனால், அது கூட நடக்கவில்லை.

இது மாதிரி வழக்குகளில் கைது செய்வது அவசியம். சென்னையில் இது போன்ற வழக்கில் – கலாஷேத்திரா வழக்கில் -ஹரி பத்மன் கைது செய்யப்பட்டு இன்று வரை சிறையில் உள்ளார் என்பது சுட்டிக் காட்டப்பட வேண்டும்.

இங்கு தமிழ்நாட்டில் கூட பாதிக்கப்பட்ட கலாஷேத்திரா மாணவிகள் பெரிய அளவில் வீதிக்கு வந்து போராடாமல் இருந்தால், ஹரி பத்மன் கைது செய்யப்பட்டு இருப்பாரா என்பது சந்தேகமே.

இந்த சந்தேகம் வருவதற்கு காரணம் இல்லாமல் இல்லை. பல பேர்களின் பற்களை கொடூரமாகவும், மூர்க்கமாகவும் பிடுங்கிய ஐபிஎஸ் அதிகாரி பல் பீர்சிங் பேரில் மிக்க தயக்கத்துடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த தமிழ்நாடு காவல்துறை, இதுவரை அவரை கைது செய்யவில்லை.

இது போன்ற வழக்குகளில் வேறு எவரேனும் குற்றம் சுமத்தப்பட்டு முதல் தகவல் அறிக்கை எதிர் கொண்டு இருந்தால், அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு இருப்பார்.

டெல்லி காவல்துறை அரவிந்த் கேஜ்ரிவால் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. டெல்லி மாநிலத்தைப் பொறுத்தவரை ,காவல்துறை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

இந்த போராட்டம் நடந்து கொண்டிருக்கையில், பல்வேறு நிர்பந்தங்களை போராட்டக்காரர்களுக்கு கொடுத்தது டெல்லி காவல்துறை.

போராட்ட இடத்தில் போடப்பட்ட விரிப்பு மழையினால் பாதிப்பு அடைந்த நிலையில், புதியதாக விரிப்புகளை கொண்டு வந்தபோது அதை தடுத்து நிறுத்தியது காவல்துறை.

மர கட்டில்களையும் இரவில் தூங்குவதற்கான சில ஏற்பாடுகளையும் செய்த போது அதையும் தடுத்து நிறுத்தினர் .இந்த தடுத்து நிறுத்தல், வன்முறை மூலம் நிகழ்ந்தது. இந்தியாவிற்கு புகழைத் தேடித் தந்த மல்யுத்த வீராங்கனைகளும் வீரர்களும் தாக்குதலுக்கு உண்டானார்கள்.

மின்வெட்டு செய்யப்பட்டது. தண்ணீர் வருவது துண்டிக்கப்பட்டது. உணவு கொடுப்பதும் தடுத்து நிறுத்தப்பட்டது. அவர்கள் தாங்கள் பெற்ற மெடல்களையும் விருதுகளையும் திருப்பி அளிப்போம் என்று கண்டனங்களை பதிவு செய்யக்கூடிய அளவுக்கு காவல்துறையின் தாக்குதல் இருந்தது.

வீதியில் வந்து மல்யுத்த வீராங்கனைகள் போராடுவது இந்தியாவிற்கு அவப்பெயரை உண்டாக்கும் என்று இந்த போராட்டத்தை கொச்சைப்படுத்தினார் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி. உஷா.

ஆனால், இந்த பேச்சால் கேரள மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை சந்தித்தார் உஷா! இதை சரி செய்ய அவரே போராட்ட களத்திற்கு நேராக வந்து ஆதரவு தெரிவிக்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது.

போராட்ட களத்திற்கு வந்து ஆதரித்த விவசாய தலைவர்கள்!

வீரம்செறிந்த போராட்டங்களை நடத்திய விவசாய சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளன.

போராட்ட களத்திற்கு வந்து அந்த சங்கத்தின் திகாயத் உள்ளிட்ட தலைவர்கள் இளம் வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்ததோடு, இதை நாங்கள் வேடிக்கை பார்க்கமாட்டோம். அரசு தன் பிடிவாதத்தை மாற்றாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரும் என எச்சரிக்கை தந்தனர். ஆடிப் போனார் பிரிட்ஜ் பூசன்! அதிர்ந்து போனது ஒன்றிய அரசு!

காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி என அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த போராட்டத்திற்கு ஆதரவை தெரிவித்துள்ளனர். பாஜகவை சேர்ந்த சில தலைவர்கள் கூட, இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

முதலில் போராட்டக்காரர்கள் அரசியல் கட்சிகள் எதுவும் அங்கே வந்து ஆதரவு தர வேண்டாம் என்று தெரிவித்தார்கள். பின்னர் நிலைமைகள் மாறுதல் அடைந்த வகையில் அரசியல் கட்சிகளின் ஆதரவுகளை ஏற்றுக் கொண்டார்கள் போராட்டக்காரர்கள்.

பத்து லட்சம் நிவாரணத்தின் பின்னணி என்ன?

போராட்டக்காரர்கள் அரசுக்கு கெடு விதித்துள்ளார்கள். மே 21 க்கு முன்னால் பிரிட்ஜ் பூஷன் சிங் கைது செய்யப்பட வேண்டும் என்பதே கெடு.

இல்லையென்றால் போராட்டம் மிகவும் கடுமையாகும் என்றும், உலக அளவில் இந்த போராட்டம் விரிவாக எடுத்துச் செல்லப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஒட்டு மொத்த இந்திய மக்களும் இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசை கவனித்த வண்ணம் உள்ளனர்! பிரிட்ஜ் பூசன் விவகாரம் பாஜக இமேஜை தரைமட்டமாக்கி உள்ளது! இன்னும் இவரை தூக்கி சுமந்தால் பாஜகவின் இமேஜ் படுபதாளத்திற்கு போகவும் வாய்ப்புள்ளது!

அமைதியான வழியில் நீதிக்காக போராடும் இந்த இளம் வீரர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். அவர்களுக்கு நீதி கிடைக்க நாமும் துணை நிற்போம்.

கட்டுரையாளர் – ஹரிபரந்தாமன்

ஓய்வுபெற்ற நீதிபதி

நன்றி:  அறம் இணைய இதழ்

Comments (0)
Add Comment