பணியிடங்களில் தரப்படும் பாலியல் தொல்லைகள்!

 பிரிட்டனில் தாங்கள் வேலை பார்க்கும் பணியிடங்களில் ஏராளமான தொல்லைகளைப் பெண்கள் சந்திப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்திருக்கிறது.

சமூகத்தில் பெண்களுக்கான இடத்தில் பெரும் மாற்றங்கள் வந்துவிட்டாலும், பணியிடங்களில் பாதுகாப்பு இல்லாத நிலைமை இன்றும் நீடிக்கிறது.

அதிலும், பொருளாதார ரீதியான பெருமளவில் முன்னேறிய நாடுகளிலும் இந்த அவல நிலை உள்ளது என்பது பல்வேறு ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது.

பிரிட்டனில் உள்ள நிலைமை குறித்த ஆய்வுகள் பெரும் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.

அங்கு, மூன்றில் இரண்டு பங்கு பெண் ஊழியர்கள் பாலியல் ரீதியான நெருக்கடிகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

பிரிட்டனின் தொழிற்சங்க காங்கிரஸ் மேற்கொண்ட இந்த ஆய்வில், பாலியல் ரீதியான தொந்தரவுகள், மிரட்டல்கள் மற்றும் கடுமையான வார்த்தைகளை வீசுவது உள்ளிட்ட  தொல்லைகளை பெண் ஊழியர்கள் சந்திக்கிறார்கள்.

இவர்களில் பெரும்பாலானவர்கள், தாங்கள் சந்திக்கும் தொல்லைகள் பற்றி  யாரிடமும் புகார் அளிப்பதில்லை.

அவ்வாறு சொல்கையில், தங்களை யாரும் நம்ப மாட்டார்கள் அல்லது நிறுவனத்தில் உள்ளவர்களுடனான உறவு பாதிக்கப்படும் அல்லது பதவியுயர்வு உள்ளிட்டவற்றில் வாய்ப்புகள் போய்விடலாம் என்றெல்லாம் அந்தப் பெண் ஊழியர்கள் கருதியிருக்கிறார்கள்.

தொழிற்சங்க காங்கிரஸ் மேற்கொண்ட ஆய்வில் 1,000 பெண் ஊழியர்களைச் சந்தித்திருக்கிறார்கள்.

இவர்களில் ஐந்தில் மூன்று பேர் பணியிடங்களில் தொல்லைகளைச் சந்தித்ததாகக் கூறியுள்ளனர். வயது சார்ந்த  ஆய்வில், 25 வயது முதல் 34 வயது வரையிலான பிரிவினரில், மூன்றில் இரண்டு பேர் தொல்லைகளைச் சந்தித்துள்ளனர்.

இந்தத் தொல்லைகளில் பெரும்பாலும் தங்கள் பணியிடங்களிலேயே நடந்ததாகவும், தொலைபேசி, அலைபேசிகள் வாயிலாக அனுப்பும் குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள் வாயிலாகவும் தொல்லைக்குள்ளாகியதாகக் கூறியிருக்கிறார்கள்.

இத்தகைய தொல்லைகள் எப்போதாவது நடைபெறுபவை என்று இருக்கவில்லை. அவை தொடர்கதைகளாக மாறியுள்ளன என்று  பெண்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.

காவல்துறையின் ஆண் அதிகாரிகள் தங்களை பாலியல் ரீதியான தொல்லைகளுக்கு உள்ளாக்கியதாக நூற்றுக்கணக்கான பெண்கள் கூறியுள்ளனர்.

கடந்த ஆறு ஆண்டுகளில் ஏராளமான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஆளுங்கட்சியின் ஆதரவு குற்றவாளிகளுக்கு ஆதரவு இருந்து வருவதாகவும் இந்த ஆய்வில் அம்பலமாகியிருக்கிறது.

அதிகரிக்கும் தொல்லைகள்

தங்கள் ஆய்வுப் பற்றிக் கருத்துத் தெரிவித்துள்ள பிரிட்டன் தொழிற்சங்கக் காங்கிரசின் பொதுச் செயலாளர் பால் நோவக், “பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகாமல் ஒவ்வொரு பெண்ணும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

ஆனால் அதற்கு மாறாக நமது பணியிடங்களில் தரப்படும் பாலியல் தொல்லைகள் அதிகரித்திருக்கும் செய்திகளே நம்மிடம் வந்து சேருகிறது.

சில்லரை வணிகத்தில் பணிபுரியும் பெண்கள் மற்றும் வரவேற்பறைகளில் பணி யாற்றுபவர்கள் ஆகியோர் ஒவ்வொரு நாளும் பல்வேறு தொல்லைகளை அனுபவிக்கிறார்கள்” என்கிறார்.

தாங்கள் தொல்லைகளுக்கு ஆளாகிய பிறகும், அதைத் தங்கள் மேலதிகாரிக்கோ அல்லது சக ஊழியர்களிடமோ பகிர்ந்து கொள்ளாத நிலை இருக்கிறது.

இத்தகைய தொல்லைகளைச் சந்திப்பவர்களில் மூன்றில் ஒருவருக்கும் குறைவான எண்ணிக்கையில்தான் புகார்கள் தரப்படுகின்றன.

புகார்கள் தரப்பட்ட பிறகும், பல்வேறு சம்பவங்கள் பேச்சுவார்த்தைகள் என்ற பெயரில் மறைக்கப்படும் அவலமும் உள்ளது.  

அத்தகைய நிகழ்வுகளில், தொல்லைகள் தொடர்வதே தங்கள் அனுபவம் என்றும் பெண் ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நன்றி; முகநூல் பதிவு
 

Comments (0)
Add Comment