சமீபத்தில் நடந்த கர்நாடக தேர்தலில், தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்து கணிப்புகளை தவிடு பொடியாக்கி தனிப்பெரும்பான்மை உடன் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
அங்கு நாளை மறுநாள் அக்கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. காங்கிரசின் கர்நாடக தேர்தல் வெற்றி மக்களவை தேர்தல் வரை எதிரொலிக்கும் என்று கருதப்படும் நிலையில், இந்த வெற்றி எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு அஸ்திவாரமாக இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
ஆரம்பம் முதல் எதிர்க்கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தையை ஒதுக்கியும் அதிலும் குறிப்பாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு மறுப்பும் தெரிவித்து வந்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத் தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், “காங்கிரஸ் செல்வாக்குடன் உள்ள தொகுதிகளில் அக்கட்சி போட்டியிடட்டும். அங்கு அவர்களை ஆதரிப்போம். அதில் ஒன்றும் தவறில்லை.
அதே போல காங்கிரசும் இதர கட்சிகளின் ஆதரவை பெற அக்கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக செல்வாக்குடன் உள்ள மாநிலக் கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்றுக் கோரிக்கை வைத்துள்ளார்.