உங்களிடம் மாற்றம் வரவேண்டும்!

ராம்குமார் சிங்காரம் எழுதிய தன்னம்பிக்கைத் தொடர் – 3

****

கனவு காண்பதால் மட்டும் ஒருவர் பணக்காரராக ஆகிவிட முடியாது.

அப்படியானால் பணக்காரராவதற்கு என்ன தேவை?

உங்களிடத்தில் மிகப் பெரிய மாற்றம் வரவேண்டும்.

‘நீங்கள் ஏழு கடல்… ஏழு மலையைத் தாண்டி குதிக்க வேண்டும்…’, ‘இமயமலைக்கு நடந்தே செல்ல வேண்டும்…’, என்றெல்லாம் சொல்லி உங்களைப் பயமுறுத்தப் போவதில்லை.

உங்கள் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் சிறு, சிறு உத்திகளைப் பின்பற்றினாலே கனவை அடைவதற்கான சாத்தியக் கூறுகள் ஏற்பட்டு விடும்.

இந்த உத்திகளெல்லாம் வெற்றியாளர்களால் பின்பற்றப்பட்டவை என்பதை மனதில் கொள்ளுங்கள்.

இந்த உத்திகள் ஒவ்வொரு வாரமும் ‘ஹோம் வொர்க்’காகக் கொடுக்கப்படும்.

இதை முறையாகப் பின்பற்றினால், இந்தத் தொடர் முடிவதற்குள் உங்களிடையே வளர்ச்சிக்கான மாற்றங்கள் தென்படுவது உறுதி.

சரி… நீங்கள் வெற்றியாளராக என்ன செய்ய வேண்டும்? தொடர்ந்து படியுங்கள்!

“இந்த பஸ் எங்கே போகும்?”

“இந்த சினிமா எத்தனை மணிக்கு முடியும்?”

“இந்தப் படிப்பு எத்தனை ஆண்டுகள்?”

“இந்த வேலைக்குச் சேர்ந்தால் எனக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும்?”

இப்படி எல்லா நேரங்களிலும் இலக்குகள் குறித்து நாம் தெளிவாகக் கேள்விகள் கேட்கிறோம். ஆனால், வாழ்க்கையை வடிவமைப்பதில் மட்டும் இந்தக் கேள்விகளைக் கேட்பதில்லை.

நம் பிள்ளைகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அல்லது பத்து ஆண்டுகளில் என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுக் கொடுக்கிற நாம், அடுத்த பத்து ஆண்டுகளில் நாம் எங்கே இருக்க வேண்டும் என்று சிந்திப்பதில்லை.

காரணம், சிந்திக்கத் தொடங்கி விட்டால் அதற்குரிய கடுமையான உழைப்பைக் கொடுத்தாக வேண்டும் அல்லவா?

கோல் போஸ்ட் இல்லாத கால்பந்து விளையாட்டையோ, ஸ்டம்ப் இல்லாத கிரிக்கெட் விளையாட்டையோ உங்களால் யோசித்துப் பார்க்க முடியுமா?

விளையாட்டுக்குக்கூட இலக்கு முக்கியமானதாக இருக்கும்போது, வாழ்க்கைக்கும் இலக்கு அவசியம் தானே?

இலக்கு இல்லாத வாழ்க்கை என்பது திசையற்ற பயணத்தைப் போன்றது. எந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்ற தெளிவு இருந்தால்தான், எந்தப் பேருந்தில் ஏறுவது என்று முடிவெடுக்க முடியும்.

ஒரு முறை பணத்திற்கும், அறிவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பணம் சொன்னது: “நான் இல்லாவிட்டால் பொருள் வாங்க முடியுமா? சாப்பிட முடியுமா? குழந்தைகளைப் படிக்க வைக்க முடியுமா? வாழ்க்கையை வாழத்தான் முடியுமா?” என்று.

அறிவு அதை மறுத்தது. “பொருளை வாங்க வேண்டுமானால், எந்தக் கடையில், எந்த விலையில், எவ்வளவு வாங்க வேண்டுமென்று முடிவு செய்ய அறிவு தேவை அல்லவா? சாப்பிட வேண்டுமானால், எதைச் சாப்பிடுவது என்று முடிவு செய்ய அறிவு வேண்டாமா?

பிள்ளைகளைப் படிக்க வைக்கும்போது, எந்தக் கல்லூரியில் எந்தப் படிப்பை படிக்க வைப்பது என்று சிந்திக்க அறிவு வேண்டாமா? அறிவு இல்லாமல் செய்யப்படும் எந்தச் செயலும் தோல்வியையே தழுவும். எனவே நானே உயர்ந்தவன்” என்றது.

வாக்குவாதம் முற்றி இரண்டும் ஒரு துறவியிடம் சென்றன.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட துறவி சொன்னார்: “இருவருமே உயர்ந்தவர்கள்தான்.

எவர் ஒருவர் உங்கள் இருவரையும் நல்ல குறிக்கோளுக்காகப் பயன்படுத்துகிறாரோ, அப்போது இருவருமே உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பீர்கள், பணத்தை வீண் செலவிற்கும், அறிவை தீய வழிக்கும் பயன்படுத்தும்போது இருவருமே தாழ்ந்து போவீர்கள்” என்றார்.

ஆம்! அறிவு, பணம், உழைப்பு, சக்தி என பல நற்குணங்கள் நம்மிடம் இருந்தாலும், அவற்றைச் சரியான குறிக்கோளுக்காகப் பயன்படுத்த வேண்டும்.

அப்படியானால், குறிக்கோளை அல்லது இலக்கை எப்படி நிர்ணயிப்பது?

வெற்றியாளர்கள் இலக்கை, பணி / தொழில் சார்ந்த இலக்கு; பொது வாழ்க்கை சார்ந்த இலக்கு; தனி மனித இலக்கு என மூன்று களங்களாகப் பிரித்துக் கொள்கின்றனர்.

இந்த வாரம், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான். உங்கள் வாழ்க்கையில் அடுத்த பத்து ஆண்டுகளில், பணி / தொழில் துறையில், பொது வாழ்க்கையில், தனி வாழ்க்கையில் நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள்? என்று ஒரு பட்டியலைத் தயார் செய்ய வேண்டும்.

பிறகு, உங்கள் இலக்கை, உங்களைச் சுற்றியுள்ளோருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு என்ன தேவை என்று தெரிந்தால்தான், அவர்கள் உங்களுக்கு உதவ முடியும்.

மேலும், நீங்கள் எப்போதேனும் திசை மாறிப் பயணித்தால், உங்களுக்கு நினைவூட்டி சரியான பாதைக்குத் திருப்பி விட அவர்கள் உதவுவர். இலக்கை நிர்ணயிப்பது எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்கு அதைப் பிறரோடு பகிர்ந்து கொள்வதும் மிக முக்கியம்.

அடுத்து என்ன செய்ய வேண்டும்? பொறுத்திருங்கள்!

தொடரும்…

ராம்குமார் சிங்காரத்தில் ‘பணமுதிர்ச்சோலை’ நூலிலிருந்து…

https://ramkumarsingaram.com

Comments (0)
Add Comment