எம்.ஆர்.ராதா – திரையில் உறைந்த தருணங்கள்!

எம்.ஆர்.ராதா – தமிழ்த் திரையுலகில் தனித்துவமான பெயர். தங்களுடைய முன்னேற்றத்திற்குச் சிலரை வழிகாட்டிகளாகச் சொல்லிக்கொண்ட காலகட்டத்தில், திரையுலகில் தனக்கான  வழிகாட்டியைத் தானே தேடிக் கொண்ட அபூர்வமான மனிதர்.

ஐம்பதுகளை ஒட்டித் தமிழ் சினிமாவுலகில் இவர் நுழைந்தாலும், சினிமாவுலகில் தன்னுடைய சில கருத்துக்களை அவருக்கே உரித்தான அலட்சிய பாவத்துடன் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அவருடைய முகத்தோற்றமும், அதில் மாறும் விதவிதமான முக பாவங்களும், சட்டென்று ஏறியிறங்கும் கரகரத்த குரலும், வளைந்து நெளியும் உடல்மொழியும், அவருக்கான தனி அடையாளமாக இருந்தாலும், அவர் உச்சரித்த திரை வசனங்கள் அவரை வித்தியாப்படுத்திக் கவனிக்க வைத்தன.

தான் நடித்த படங்களின் வசனங்களைப் பிறரைப் படிக்கச் சொல்லிக்கேட்டு உள்வாங்கிக் கொண்டு தன்னுடைய பாணியில் அதற்கு மெருகேற்றி அந்த வசனத்தை உச்சரிப்பது ராதாவுடைய தனிச்சிறப்பு.

அவர் நடித்த சில படங்களிலிருந்து சில தருணங்கள்:

கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த ‘ரத்தக் கண்ணீர்’ படத்தில் ராதாவின் சில காட்சிகள்:

ராதா பொதுக்கூட்டத்தில் பேசும் காட்சியில் :

“ஊருக்கு ஒரு லீடர். அவனவனுக்கு ஒரு கொள்கை. அவனவனுக்கு ஒரு பட்டினிப் பட்டாளம். நான்சென்ஸ்’’

ஒரு காட்சியில் தாயாரிடம் ராதா :

“கல்யாணமாம்.. கல்யாணம்.. கல்யாணம் எதுக்குப் பண்றாங்கன்னே இந்தியாவிலே பல பேருக்குச் சரியாத் தெரியாது.’’

“எனக்கு வயசாயிருச்சில்லே’’-தாயார்

“உனக்கு வயசாயிடுச்சுங்கிறதுக்காக நான் கல்யாணம் செஞ்சுக்கணுமா?’’

இன்னொரு காட்சியில் தாயாரிடம் :

“எப்படிச் சொல்றது உன்னைத் தாயார்னு.. அட்லீஸ்ட் ஒரு கவுனாவது போட்டிருக்கீயா?’’

“ஏன்டா.. நானா கவுன் போடணும்?’’

“நான் ஃபாரீனில் படிச்சதுக்கு நீ தான் கவுன் போட்டுக்கணும்’’

இன்னொரு காட்சியில் :

“தொழிலாளிக் கட்சி, முதலாளிக் கட்சி, சாமியார்க் கட்சி, இதே வேலை.. எல்லாக்கட்சிகளும் பிசினஸில் புகுந்துட்டான்.. வேற ஒண்ணுக்கும் லாயக்கில்லை.. ‘பிளக்கார்ட்ஸ்’.

எஸ்.எஸ்.ஆர் ராதாவிடம் : ‘ உனக்குப் பார்த்திருக்கிற பொண்ணு பெரிய இடமா?’’

ராதா:  “ஆமா.. 110 அடி உயரம்’’

ராதா தன் மாமனாரிடம் :

“நான் ராத்திரி எங்கே போறேன்னு இதுவரை யாரும் கேட்டதில்லை’’

மாமனார் : “நான் மாமனாரேச்சே’’

ராதா: “எந்த நாராக இருந்தாலும் கேட்கக் கூடாது’’

இன்னொரு காட்சியில் :

ராதா : “செத்தாக் கூடப் பாடுறாண்டா இந்த நாட்டிலே’’

தனக்கு மருத்துவம் பார்க்க வந்த டாக்டரிடம் ராதா:

“டாக்டர் கூட யாரையாவது வெச்சுக்குங்க.. அனாவசியமா என் உடம்புலே வேலை பார்த்துக் கத்துக்காதீங்க.. டாக்டர்’’

சினிமா இயக்குநராக முயற்சிக்கும் சந்திரபாபுவிடம்:

ராதா : “மாமா டைரக்டராயிட்டியா? தொழில் உருப்பட்ட மாதிரி தான்’’

கண் பார்வையிழந்த பிறகு தண்ணீர் ஊற்றுகிற பெண்ணிடம்:

ராதா : நீ ஊத்துறது என்ன கார்ப்பரேஷன் தண்ணியா? பைப்புலே மீன் கூட விடுறாங்களா?’’

தனக்குப் பிச்சை போடுகிறவரிடம் :

ராதா : “தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான்  கோவிந்தன்’’

பிச்சை போடுகிறவர் : “தீராத வினையெல்லாம் தீர்த்து வைக்கிற கோவிந்தன் உன் வியாதியை ஏம்ப்பா தீர்த்து வைக்கலை?’’

“ஹை.. அப்பா.. அறிவு வந்திருச்சுடாப்பா.. இது சோறு வாங்கிறதுக்காகப் பாடுற டூப் பாட்டுடாப்பா’’

தன்னைச் சபிக்கிற கூலித்தொழிலாளியிடம் ராதா:

“போடா.. கடவுள் உன்னை ‘டாப்’பிலே வைச்சுருக்கார்.. என்னை அண்டர் கிரவுண்டில் வைச்சுருக்கார்.. போடா.. ஏதோ கடவுளோட செகரெட்டரி மாதிரிப் பேசுறான்’’

எஸ்.எஸ்.ஆர் – ராதாவிடம் ‘’நாங்க ஜீவகாருண்ய கட்சில சேர்ந்துருக்கோம்’’

ராதா : “அடி சக்கை.. திங்குறதுக்குக் கூட கட்சி வைச்சிருக்காங்களா? ஆமா.. ஜீவ காருண்யக் கட்சின்னா என்ன தம்பி அர்த்தம்?’’

“உயிர்களைக் கொலை செய்யக்கூடாது’’

“நீங்க உயிர்களைக் கொல்றதே இல்லையா?’’

“இல்லை”

“ஏம்ப்பா.. ராத்திரி மூட்டைப் பூச்சி கடிச்சா என்ன பண்ணுவீங்க?’’

“உனக்கு உண்மையிலேயே கொழுப்பு தாம்ப்பா’’

“இதையெல்லாம் சொன்னா சோறு போடுறாங்களா இல்லையோ.. எனக்கு வாய் சும்மா இருக்காது’’

கடைசிக்காட்சியில் :

ராதா : இந்த மக்களைப் பற்றி என்றுமே கவலைப்படக்கூடாது.. ஆரம்பத்தில் தூற்றுவார்கள்.. பிறகு ஒத்துக் கொள்வார்கள்’’

பாலும் பழமும் படத்தில் :

ராதா : அது தான் இங்கே இருக்கே.. கட்சிக்குக் கட்சி பிளவு..

பாகப் பிரிவினை படத்தில் :

சிங்கப்பூரான் பாத்திரத்தில் ஒரு கை ஊனமான பாத்திரத்தில் நடிக்கும் சிவாஜியிடம் : “ஒரு கையே இல்லையேடா.. எப்படிறா கும்பிடுவே.? சலாம் போடுவீயா?’’

இன்னொரு காட்சியில் :

ராதா : “ஃபாரீன்லே நீராவில கப்பல் விடுறான்.. நீங்க நீராவிலே புட்டு செஞ்சு வயித்துக்குள்ளே விடுறீங்க’’

மற்றொரு காட்சியில் :

“இன்னைக்குத் திடீர்க் கோடீஸ்வரன் எல்லாம் யார்? நாணயத்துக்கு எத்தனை தடவை சமாதி கட்டினவங்க தெரியுமா?’’

”என்ன பணம்..பணம்.. இன்னைக்குச் செத்தா நாளைக்கு ரெண்டாவது நாள்’’

நடிகையைப் பற்றி இன்னொருவரிடம் ராதா :

“அசிங்கம்.. ஸ்டார் சரித்திரத்தைக் கிளறாதே’’

உதவியாளரிடம் ராதா : ‘’டேய்.. செக் திரும்பத் திரும்ப நம்ம தரம் உயரும்டா’’

படத்தின் இறுதிக்காட்சியில் சிறைக்குப் போகும்போது ராதா :

“அயோக்கியன் எல்லாம் வெளியே இருக்கீங்க.. யோக்கியன் எல்லாம் உள்ளே போறோம்.’’

பெற்றால் தான் பிள்ளையா?-படத்தில் சரோஜா தேவியிடம் :

“நீ எல்லோரையும் பைத்தியமாக்குறே.. நான் எல்லோரையும் முட்டாளாக்குறேன்.. எப்படியோ நம்ம தொழில் நடக்குது’’

தாயைக் காத்த தனயன் – படத்தில்

கடையில் வேலை பார்ப்பவராக நடிக்கும் மகன் எம்.ஆர்.ஆர்.வாசுவைப் பார்த்து ராதா:

“அட.. குரங்குக்குப் பிறந்த பயலா இருக்கானே’’

பலே பாண்டியா படத்தில் :

“இவ்வளவு பெரிய கூட்டத்தில் அவனைப் போய்க் காப்பாத்திறதுக்கு ஒருத்தருக்குக்கூட தைரியம் இல்லை.. நம்மூர்லே வீரமே செத்துப் போச்சு’’

ராதா : “ஏம்பா.. நீ போய்க் காப்பாத்த வேண்டியது தானே.. ஊர்லே நல்லாப் பேசக் கத்துக்கிட்டீங்க’’

மற்றொரு காட்சியில் சிவாஜியிடம் :

ராதா : “பங்களாவுக்குள் எப்பவும் பாலிட்டிக்ஸ் பேசக்கூடாது.. கேர்ஃபுல்’’

கபாலியாக சக கூட்டாளியிடம் ஆலோசனை நடத்தும்போது ராதா: “ராத்திரி மூணு மணிக்குப் போ.. அப்பத்தான் உடம்பு நல்லா இருக்கிறவனும் சரி, சீக்காளியும் சரி, தூங்கிற நேரம்’’

சிவாஜி இறந்துவிட்டதா நாடகம் ஆடும்போது கூடிவிட்ட கடன் காரர்களிடம் ராதா :

“அவர் தான் சாம்பலாப் போய்ட்டாரே.. ஆளுக்கொரு பிடி சாம்பல் எடுத்துட்டுப் போய்ப் பல் விளக்கிட்டுப் போங்க’’

புதிய பார்வை- படத்தில் நாகேஷிடம் ராதா:

“தொண்டு செய்வதற்கே இந்த நாட்டிலே கூலி உண்டுடா.. அப்பத்தான் தொண்டுக்கு வேல்யூ’’

நல்லவன் வாழ்வான் – படத்தில்

ராதா : “எலெக்சன்லே.. யார் வேணும்னாலும் நின்னுடுறாங்க.. அதுக்குத் தகுந்த யோக்கிதை இருக்கா. நாணயம் இருக்கா? பொறுப்பு இருக்கா? ஒண்ணும் கவனிக்கிறதில்லே’’

இவை எம்.ஆர்.ராதா திரையில் தோன்றிய சில கணங்களின் பதிவு.

இன்னும் அதிரடியாகத் தொடங்கிப் பல முறை சிறை செல்லும் அளவுக்கு நீண்ட ராதாவின் நாடக வாழ்க்கை, 

1967 ல் சென்னை ராமாவரம் தோட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தன்று நடந்தது என்ன?

அன்று ராதாவுடன் இருந்தவர்கள், நேரடியாகப் பார்த்தவர்கள், மருத்துவமனையில் நடந்த நிகழ்வுகள், நீதிமன்ற விசாரணைகள், பெரியாரின் கடுமையான எதிர்வினை, தடயவியல் அறிஞரின் பேட்டிகள், சிறை வாழ்க்கை, இறுதி நாட்கள் என்று விரிவான பதிவு.

ராதாவுடன் பழகியவர்கள், உறவினர்களின் பேட்டிகள், அவருடைய பேச்சுகள், நாடக வசனங்கள், அவருடைய மறக்கமுடியாத முதல் மனைவிக்காக அவர் கோவையில் கட்டிய நினைவு ஸ்தூபி என்று பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஆர்.ராதாவின் நூற்றாண்டுத் தருணத்தில் வெளியிடப்பட்ட மணா எழுதித் தொகுத்த “எம்.ஆர்.ராதா – காலத்தின் கலைஞன்’’ நூல்  மறுபதிப்பாக வெளியாகியிருக்கிறது மீண்டும்.

“என்னுடைய நாடகத்தோடு உடன்படாதவர்கள் உள்ளே வர வேண்டாம். அவர்களுடைய பணமும் எனக்கு வேண்டம்’’ என்று ‘தில்’லாக நாடகம் நடக்கும் திரையங்கிற்கு முன்னால் போர்டு வைத்து நாடகம் போட்ட-கலைஞனான ராதாவின் கலகக் குரலைக் கேட்க இந்த நூலுக்குள் நீங்கள் நுழைய வேண்டும்.

எம்.ஆர்.ராதா காலத்தின் கலைஞன்.
மணா.
டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு,
கே.கே.நகர் மேற்கு, சென்னை-78.
விலை ரூ. 250/-
செல்: 8754507070  : 99404 46650 – phone pay.

 

Comments (0)
Add Comment