– நாவலரிடம் விசாரித்த அதிகாரி
அரசு அதிகாரிகள் பலருக்குத் தேர்தல் நெருங்கும்போது பதைபதைப்பு இருக்கும். ஆட்சி மாறினால் நம்முடைய நிலை என்ன என்கிற கலக்கம் இருக்கும்.
1967 ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது அதிகாரிகளிடம் இருந்த மனநிலை பற்றி தமிழக முதல்வராக இருந்த அண்ணா சொன்னவை – என்றைக்கும் ஆட்சிக்கு வருகிறவர்களுக்கு பொருந்தும்.
“நான் பதவி ஏற்றதும் சில போலீஸ் அதிகாரிகள் என்னிடம் வந்தார்கள். “நாங்கள் தேர்தல் நேரத்தில் நியாயமாகத் தான் நடக்க முயன்றோம்…’’ என்றார்கள்.
“கடந்த காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் செயலாற்றுங்கள்” என்று நான் கூறினேன்.
இன்னும் சில அதிகாரிகள் தெரிவித்தார்கள். “அப்போதைய முதலமைச்சர் ரொம்பத் தொந்தரவு செய்தார்; அதனால் தான்…’’ என்று ஏதோ கூற ஆரம்பித்தார்கள்.
“அந்த விஷயங்களைப் பற்றி நாங்கள் நினைக்கவில்லை. இனி நீங்கள் உங்கள் பணியினைத் தொடர்ந்து ஆற்றுங்கள்’’ என்று கூறினேன்.
“நீங்கள் நிரந்தரமான அரசு ஊழியர்கள்; நாங்கள் மக்கள் அனுமதிக்கிற வரையில் அமைச்சர்கள்.
இரண்டு பேருக்குமுள்ள தொடர்பைத் தெரிந்து வைத்திருக்கிறேன். ஒரு துளியும் கவலைப்படாமல் பணியாற்றுங்கள்.’’ என்றும் கூறினேன்.
எவ்வளவு பொறுப்புணர்ச்சியோடு நாங்கள் நடந்து வருகிறோம் என்பதைத் தெரிவிக்கவே இதைக் கூறினேன். யாரையும் பழிவாங்கும் நோக்கம் எங்களுக்கில்லை.
முன்பு ஆட்சியிலிருந்தவர்களின் தூண்டுதலின் பேரில் ஒரு உயர்தரப் போலீஸ் அதிகாரி, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது – நமது நாவலர் நெடுஞ்செழியனிடம் தொலைபேசி மூலம் “என்ன… உங்கள் அண்ணாதுரை தற்கொலை செய்து கொண்டாராமே?’’ என்று கேட்டார்.
நாவலர் நெடுஞ்செழியன் நெஞ்சு பதைபதைத்துப் போய் “அப்படி ஒன்றுமில்லையே’’ என்று பதில் கூறியிருக்கிறார்.
“இல்லை…ஏதாவது ஆக்சிடென்ட் நடந்ததா? ஆள் போய் விட்டார் என்று கூறுகிறார்களே?’’ என்று அந்த அதிகாரி கூறியிருக்கிறார்.
உடனே நாவலர் என்னைத் தொலைபேசியில் அழைத்து போலீஸ் அதிகாரி சொன்னதைச் சொன்னார்.
“அவர்கள் இப்படிக் கேட்பதில் திருப்தி அடைந்து கொள்ளட்டும்’’ என்றேன் நான்.
இப்போது அந்தப் போலீஸ் அதிகாரி இருக்கிறார். ஆனால் அவர் மீது ஈ உட்காருவதைக் கூட நான் அனுமதிக்க மாட்டேன்.
முன்பு தந்த மரியாதையை அவருக்குத் தருகிறேன். ஏனெனில் அதிகாரிகள் ஆட்சியில் இருக்கும் எவருடைய சொற்படியும் நடப்பவர்கள் என்பதை அறிந்தவன் நான்’’
- (சமநீதி – 2.6.1967 இதழிலில் இருந்து)