ஃபர்ஹானா – சிறகடிக்கும் பெண் மனம்!

ஒரு இஸ்லாமியப் பெண்ணை முன்னிறுத்தும் படத்தில் ஆபாசமான வசனங்களா என்று சர்ச்சையைக் கிளப்பியது ‘ஃபர்ஹானா’ ட்ரெய்லர். அதுவே இஸ்லாமிய இயக்கங்கள் போராட்டத்தைக் கையிலெடுக்கவும் காரணமானது.

உண்மையிலேயே ‘ஃபர்ஹானா’ படம் இஸ்லாமியர்களை இழிவுபடுத்துகிறதா?

ஃபர்ஹானா என்றொரு பெண்!

செருப்புக்கடை வைத்திருக்கும் அசீஸ் (கிட்டி), இஸ்லாம் மதக் கட்டுப்பாடுகளைத் தீவிரமாகப் பின்பற்றும் மனிதர். வட்டிக்குக் கடன் வாங்குவது பாவம் என்று எண்ணுபவர். அவருக்கு மூன்று மகள்கள். மூவருக்கும் திருமணமாகிவிட்டது.

மூன்றாவது மகள் ஃபர்ஹானா (ஐஸ்வர்யா ராஜேஷ்), தன் கணவர் கரீம் (ஜித்தன் ரமேஷ்), குழந்தைகளோடு தந்தையின் வீட்டிலேயே வசிக்கிறார். அசீஸ் உடன் சேர்ந்து செருப்புக்கடையைப் பார்த்துக் கொள்கிறார் கரீம். அவர் பெரிதாகப் படிக்கவில்லை.

சரியான வருமானம் இல்லாத காரணத்தால், அக்குடும்பம் சிரமப்படுகிறது.

அந்த நிலையில், தான் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறார் ஃபர்ஹானா.

கரீம் அரைகுறை மனதோடு சம்மதித்தாலும், அசீஸ் அதனை ஏற்பதாக இல்லை.

ஆனாலும், வேறு வழியில்லாமல் ஒரு கால் சென்டரில் வேலைக்குச் சேர்கிறார் ஃபர்ஹானா.

பணியிடம், பயிற்சி, வேலை, சம்பளம், சக பணியாளர்கள் என்று ஃபர்ஹானாவின் வாழ்க்கை புதிதாக மாறுகிறது. குழந்தைகள், கணவர், குடும்பத்தின் தேவைகளை அவரது சம்பளம் பூர்த்தி செய்கிறது.

அதன் தொடர்ச்சியாக, அதிகமாக ஊக்கத்தொகையைத் தரும் வேறொரு பிரிவுக்கு மாற முயல்கிறார் ஃபர்ஹானா. ‘ப்ரெண்ட்ஷிப் சாட்’ என்ற பெயரில் முகம் தெரியாத நபர்களோடு உரையாடுவதே அப்பணியின் அடிப்படை.

சில நேரங்களில் எதிர்முனையில் இருப்பவர்கள் படுஆபாசமாகப் பேசுவார்கள். அந்த உண்மை தெரியவரும்போது, அருவெருப்பின் உச்சத்திற்குச் செல்கிறார் ஃபர்ஹானா.

அந்த நேரத்தில், தயாளன் (செல்வராகவன்) என்பவரின் பேச்சு ஃபர்ஹானாவுக்கு ஆசுவாசம் தருகிறது. மெல்ல நாட்கள் நகர நகர, இருவரும் பல மணி நேரம் தொடர்ந்து பேசுகின்றனர். அது தொடர்கதையாகும்போது, இருவரும் நேரில் சந்திக்கலாம் என்று முடிவெடுக்கின்றனர்.

அது, கால் சென்டர் பணி நிபந்தனைகளுக்கு எதிரானது. ஆனாலும், பணியாளர்களின் அழைப்புகளை ஒருங்கிணைக்கும் இளைஞர் ஃபர்ஹானாவின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு மதிப்பளிக்கிறார்.

குறிப்பிட்ட நாளில் மெட்ரோ ரயில்நிலையமொன்றில் சந்திப்பதாக முடிவாகிறது. தயாளனும் ஃபர்ஹானாவும் தயாராகி அவ்விடத்திற்கு வந்துவிடுகின்றனர்.

அப்போதுதான், உடன் பணியாற்றும் சோபியா (ஐஸ்வர்யா தத்தா) என்ற பெண் கொலையானதும், சாட் செய்த நபர் ஒருவருடன் அவர் ‘அவுட்டிங்’ சென்றார் என்பதும் தெரிய வருகிறது. அந்த கணத்தில், ஃபர்ஹானாவின் மனதில் தயாளன் கொடூரனாகத் தெரிகிறார்.

அதனால், அவரைச் சந்திக்காமலேயே அங்கிருந்து சென்றுவிடுகிறார் ஃபர்ஹானா. ஆனால், அது தயாளனைப் பெரியளவில் காயப்படுத்துகிறது.

அதன் தொடர்ச்சியாக, ஃபர்ஹானாவை மிரட்டத் தொடங்குகிறார் தயாளன். அழைப்புகளை ஏற்க முன்வராதபோது, அவரது கணவர் குடும்பம் குறித்த விவரங்கள் தனக்குத் தெரியும் என்று கொக்கரிக்கிறார்.

ஒருகட்டத்தில் தான் ஒரு பெரிய ஆபத்தில் சிக்கியிருப்பதாக உணர்கிறார் ஃபர்ஹானா.

அந்த ஆபத்தில் இருந்து அவர் மீண்டாரா? கரீம் அவரது நிலைமையைப் புரிந்துகொண்டாரா என்று விளக்குகிறது ‘ஃபர்ஹானா’.

ஃபர்ஹானா என்ற பெண்ணின் வாழ்வை, விருப்பங்களை, வெளிப்படையாகப் பகிராத உணர்வுகளைச் சொல்கிறது இப்படம்.

அதேநேரத்தில், எந்தவொரு இடத்திலும் இஸ்லாம் மதத்தையோ, அதனைப் பின்பற்றும் சமூகத்தினரையோ தவறாக விமர்சிக்கவில்லை.

கலவையான படைப்பு!

இன்றைய தலைமுறை பெண்களைப் பிரதிபலிக்கும் பாத்திரங்களில் இருந்து வேறுபட்டு தி கிரேட் இண்டியன் கிச்சன் படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், இதிலும் ஃபர்ஹானாவாகத் தோன்றியிருக்கிறார்.

அவரது நடிப்பு நிஜமாகவே அப்படியொரு பெண்ணைப் பார்க்கும் உணர்வைத் தருகிறது.

அவர் அளவுக்கு அதிக காட்சிகள் இல்லையென்றபோதும், கரீம் ஆகவே நினைக்க வைக்கிறார் ஜித்தன் ரமேஷ். சிரிப்பு தென்படாத முகத்தில் வில்லத்தனம் கொஞ்சம் கூடக் கூடாது என்பதில் மெனக்கெட்டிருக்கிறார்.

‘பம்பாய்’ படத்திற்குப் பிறகு இதில் ஒரு இஸ்லாமியராக நடித்துள்ளார் கிட்டி. அவரது உறவினர்களாக வருபவர்கள், வீட்டிற்கு வரும் இஸ்லாமியப் பெரியவர்களைக் காட்டிலும், அருகில் கடை வைத்திருக்கும் பெண்மணிக்குத் திரையில் முக்கியத்துவம் அதிகம்.

கால் சென்டரில் வேலை பார்ப்பவர்களாக வரும் அனுமோள், ஐஸ்வர்யா தத்தா இருவருக்கும் சம முக்கியத்துவம் திரையில் உண்டு. அவர்கள் இருவருமே ஃபர்ஹானாவின் பார்வையிலேயே நமக்கு தெரிகின்றனர்.

உடன் பணியாற்றும் இளைஞராக வரும் புதுமுகம் சக்தி மிகச்சில இடங்களில் சிரிப்பூட்டியிருக்கிறார்.

கோகுல் பினோயின் ஒளிப்பதிவும் சிவசங்கரின் கலை இயக்கமும் மிக இயல்பாக ஒரு இஸ்லாமிய வீட்டினுள் வாழும் உணர்வை மிக எளிதாக ஏற்படுத்த உதவுகின்றன.

‘மாண்டேஜ்’ காட்சிகள் மட்டுமல்லாமல், நேர்த்தியாகக் கதை சொல்லவும் வகை செய்திருக்கிறது சாபு ஜோசப்பின் படத்தொகுப்பு.

மனுஷ்யபுத்திரன், சங்கர்தாஸ், நெல்சன் கூட்டணியில் எழுதப்பட்ட வசனங்களும் சரி, சங்கர்தாஸ், ரெஞ்சித் ரவீந்திரனோடு இணைந்து இயக்குனர் அமைத்துள்ள திரைக்கதையும் சரி, மிக இயல்பான மனிதர்களையும் களத்தையும் காணும் உணர்வை ஏற்படுத்துகின்றன.

இவை தவிர்த்து ஒப்பனை, ஆடை வடிவமைப்பு உட்பட இப்படத்தில் சிலாகிக்கப் பல விஷயங்கள் உண்டு.

கமர்ஷியல் சினிமா, கலைப்படம் என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு மிகச்சரியான கலவையில் ஒரு படைப்பைத் தந்திருக்கிறார் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன்.

ஒருநாள் கூத்து, மான்ஸ்டர் வரிசையில் ஃபர்ஹானாவிலும் ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறார்.

உலக சினிமா இசை!

ஃபர்ஹானாவின் மாபெரும் சிறப்புகளில் ஒன்று, இயல்பான நகரும் திரைக்கதைக்கேற்ற ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை.

ஐஸ்வர்யா தத்தா ஹாலோவீன் பார்ட்டிக்கு செல்லும் காட்சியில் தொடங்குகிறது திரைக்கதை. திரையில் வழியும் காமத்திற்கேற்ப, பின்னணி இசையும் கோப்பையை மீறிக் கீழே வழியும் மதுபானமாக வழிந்தோடுகிறது.

அந்தப் பெண்ணும் உடன் வரும் ஆணும் என்னவானார்கள் என்று தெரியும் முன்னரே, ஃபர்ஹானா எனும் இஸ்லாமியப் பெண் ஒருவரை நமக்கு அறிமுகப்படுத்துகிறது அடுத்து வரும் காட்சி. அதற்கேற்றவாறு, இஸ்லாமிய வீடொன்றுக்குள் நுழைந்த உணர்வை உருவாக்குகிறது பின்னணி இசை.

ஃபர்ஹானா வேலைக்குச் செல்வது தொடங்கி அந்த வேலையில் லயித்து ஈடுபடுவது வரை உற்சாகமூட்டும் இசையாக அமைந்து, பின்னர் மெதுவாக ஒரு பெண்ணின் மன அடுக்கினுள் அடைந்து கிடக்கும் உணர்வுகளை மெல்லத் திறந்துவிடுவதாக மாறுகிறது.

பின்பாதியில், தான் உணர்ந்ததெல்லாமே தவறுதானா என்று அப்பெண்ணின் மனம் பதறுவதை உரைக்கிறது இசை. ஒட்டுமொத்த திரைக்கதையையும் மீறி தனியே அவ்விசையைக் கேட்கையில் ஒரு உலக சினிமா அனுபவத்தை உணர்வது உறுதி.

மேம்போக்கான பார்வை வேண்டாமே!

ஃபர்ஹானா ட்ரெய்லரை பார்த்ததும் உடனடியாக ஒருவரது மனதில் அவதூறான எண்ணங்களே எழும். ஆனால், படம் பார்த்து முடிந்ததும் அப்படியொரு எண்ணம் தானாகக் கரைந்து போகும்.

இப்படத்தில் துளி கூட இஸ்லாமிய அவமதிப்பு இல்லை. அதேநேரத்தில், அம்மதத்தில் பெண்களுக்கான இடம் குறித்த விமர்சனங்கள் உண்டு. அவையும் கூட மிகமென்மையாகவே திரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு பெண் வேலைக்குச் செல்வதையே அவமானமாகக் கருதும் அசீஸ் எனும் பெரியவரின் பார்வை, அருகே பழக்கடை வைத்திருக்கும் பெண்மணியால் முற்றிலுமாக மாறுகிறது.

‘இரண்டு பிள்ளைகளையும் என்னையும் விட்டுச் சென்ற கணவனை நினைத்து நான் சாக வேண்டுமா அல்லது சொந்தக்காலில் நின்று வாழ வேண்டுமா’ என்று அப்பெண் கேட்குமிடம், பெண்கள் தங்கள் வீட்டு ஆண்களைச் சாராமல் சுயாதீனமாக வாழ வேண்டுமென்பதை உணர்த்தும்.

ஐஸ்வர்யாவும் ரமேஷும் கட்டியணைத்துக் கொள்ளும் காட்சி, இப்படத்தில் ஒருமுறை தான் வருகிறது. அதுவும் கூட ‘கரெண்ட் கட்’ ஆனபோது பயத்தில் அப்பெண் பாத்திரம் அலறும்போதே நிகழ்வதாகக் காட்டப்பட்டுள்ளது.

ஒரு வீட்டில் கணவன் மனைவியின் அந்தரங்கத்திற்கான இடம் என்னவென்ற கேள்வியை அக்காட்சி உணர்த்தும்.

தமது வருத்தங்களையும் சோகங்களையும் தவிர, ஒரு மனைவியும் கணவனும் பகிர்வதற்கு அன்றாட வாழ்வில் எத்தனையோ விஷயங்கள் உள்ளன என்பதைச் சொல்லும்.

மிக முக்கியமாக, முகம் தெரியாத மனிதரொருவரால் துன்பப்பட நேர்கையில் ஒரு பெண்ணுக்குத் சுயமதிப்பும் குடும்பத்தின் உறுதுணையும் மட்டுமே துணையாக இருக்கும் என்று சொல்கிறது ‘ஃபர்ஹானா’.

அப்படிப் பார்த்தால், பழமைவாத எண்ணங்களில் ஊறி நின்று பெண்களை வீட்டுக்குள் முடக்க நினைப்பவர்களுக்குப் பாடம் புகட்டுகிற ‘எதிர்நீச்சல்’ இப்படம்.

ஃபர்ஹானாவில் கிட்டியின் வாழ்க்கைத் துணையாக வரும் பெண்ணுக்குப் பெரிதாக முக்கியத்துவம் தரவில்லை இயக்குனர். அவரே நாயகியின் தாயாகக் காட்டப்படுகிறார்.

உற்றுப் பார்த்தால், இஸ்லாம் மதத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் மீதான விமர்சனம் இதுவென்பது விளங்கும். கூடவே, உலகின் எந்த மூலையில் இருக்கும் பெண்ணுக்கும் சிறகடிக்கும் மனம் உண்டென்பதை உணர்த்தும்.

ஒரு நல்ல திரைப்படம் தனக்கான பார்வையாளர்களைக் கண்டடையப் போராடும் சூழலில், இப்படத்தை எதிர்ப்பவர்களை என்னவென்று சொல்வது? உண்மை என்னவென்று அறியவாவது அவர்கள் ஒருமுறை படம் பார்க்க வேண்டும்!

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment