சென்னை போன்ற பெருநகரங்களில் மெட்ரோ ரயில் சேவை என்பது மிகவும் தேவையான ஒன்றாகிவிட்டது. இந்தப் பெருநகர் வாழ்வில் தவிர்க்கமுடியாத சேவையாகிவிட்டது.
தினமும் மெட்ரோவில் நாள் ஒன்றிற்கு 2 லட்சத்துக்கு அதிகமானோர் பயணம் செய்கின்றனர்.
சுற்றுலாப் பயணிகள் ஒரு நாள் முழுவதும் பயணிக்க ரூ.100 க்கு டிக்கெட், மாதம் முழுவதும் பயணிக்க ரூ.2,500, குழுவாக பயணிக்கும் போது கட்டண குறைப்பு போன்ற சலுகைகள் மெட்ரோவில் வழங்கப்படுகின்றன.
ஆனால், பேருந்து மின்சார ரயிலில் வழங்கப்படும் சலுகைக் கட்டண பாஸ் போன்று மெட்ரோ ரயிலிலும் வழங்கினால் உதவியாக இருக்கும் என கல்லூரி மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதைத் தொடர்ந்து, மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகள் குறித்த ஆய்வு ஒன்றை சமீபத்தில் நடத்தியது.
அதில் மெட்ரோவில் பயணிப்பவர்களில் 40 சதவீதம் கல்லூரி மாணவ, மாணவிகள், 47 சதவீதம் பணிக்கு செல்லக் கூடியவர்கள், 13 சதவீதம் எப்போதாவது பயணிப்பவர்கள் என தெரியவந்தது.
எனவே 40 சதவீத மாணவர்களுக்கு கட்டணத்தில் சலுகை அளிக்கும் வகையில் ஸ்டுடன்ட் பாஸ் என்ற புதிய முறையை மெட்ரோ நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்துகிறது.
முதல்கட்டமாக அரசு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாஸ் வழங்கப்பட உள்ளது.
அடுத்து தனியார் கல்லூரி மாணவர்களுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் பாஸ் வழங்குவது குறித்து ஆய்வு செய்யப்படும்.
சலுகை கட்டண பாஸ் வழங்கப்பட்டால் பயணிகளின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.